முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீனின் சகோதரருக்கும், ஈஸ்டர் குண்டுத் தாக்குதலுக்கும் இடையில் தொடர்பிருந்தமை குறித்து தகவல் கிடைத்துள்ளதாக போலீஸ் ஊடகப் பேச்சாளர் ஜாலிய சேனாரத்ன தெரிவிக்கின்றார்.
கொழும்பில் இன்று, புதன்கிழமை, இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீனிற்கும், ஈஸ்டர் தாக்குதலுக்கும் இடையில் தொடர்புள்ளதா என ஊடகவியலாளர்கள் இதன்போது போலீஸ் ஊடகப் பேச்சாளரிடம் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த போலீஸ் ஊடகப் பேச்சாளர், முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீனின் சகோதரருக்கு இந்த சம்பவத்துடன் தொடர்புள்ளமை குறித்து தகவல் கிடைத்துள்ளதாக அவர் கூறினார்.
எவ்வாறாயினும், இந்த சம்பவம் தொடர்பில் தாம் தொடர்ந்தும் விசாரணைகளை நடத்தி வருவதாக அவர் குறிப்பிட்டார்.
ரிஷாட் பதியூதீன் என்ன சொல்கிறார்?
தனது குடும்பத்திற்கும், தனது சகோதரருக்கும், தனக்கும், ஈஸ்டர் தாக்குதலுடன் எந்தவித தொடர்பும் கிடையாது என முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீன் தெரிவித்துள்ளார். தனது உத்தியோகப்பூர்வ ஃபேஸ்புக் தளத்தில் வெளியிட்டுள்ள காணொளியிலேயே அவர் இந்த குற்றச்சாட்டை நிராகரித்துள்ளார்.
தனது சகோதரர் ரியாஜ் பதியூதீன் கைது செய்யப்பட்டமைக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை எடுக்க எண்ணியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இலங்கையில் பயங்கரவாதம் உருவாவதற்கு தாம் ஒருபோதும் இடமளிக்க போவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். பயங்கரவாதத்திற்கு எதிராகவே தாம் இதற்கு முன்னர் செயற்பட்டுள்ளதாகவும், எதிர்காலத்தில் பயங்கரவாதத்திற்கு எதிராக செயற்படுவதாகவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். தனது அரசியல் நடவடிக்கைகளை பலி வாங்கும் வகையிலேயே தனது சகோதரன் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவே தான் நம்புவதாக ரிஷாட் பதியூதீன் தெரிவித்துள்ளார்.
ரிஷாட் பதியூதீனின் சகோதரர் கைது
இலங்கையில் கடந்த ஆண்டு நடத்தப்பட்ட ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீனின் சகோதரரான ரியாஜ் பதியூதீன் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஈஸ்டர் தாக்குதல் நடந்த சமயத்தில் பிபிசி தமிழுக்கு பேட்டி அளித்திருந்த ரிஷாட் பதியூதீன் “தற்கொலை தாக்குதல் இஸ்லாத்தில் கிடையாது,” என்று கூறியிருந்தார்.
“ஒரு புகைப்படத்தை வைத்து என்னை சம்பந்தப்படுத்த பார்க்கின்றனர்” – ரிசாட் பதியூதீன்
ரியாஜ் பதியூதீனுடன் மற்றுமொரு நபரும் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் நேற்று தெரிவித்திருந்தது. புத்தளம் பகுதியில் வைத்து நேற்றைய தினம் குற்றப் புலனாய்வு பிரிவினர் குறித்த சந்தேகநபர்களை கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட இருவரும் புத்தளம் பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும் போலீஸார் குறிப்பிடுகின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வு பிரிவினர் தொடர்ந்தும் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் குற்றப் புலனாய்வு பிரிவினர் தொடர்ந்தும் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.
இலங்கை ஈஸ்டர் தாக்குதல்
இலங்கையில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 21ஆம் தேதி ஈஸ்டர் தினத்தன்று பயங்கரவாதத் தாக்குதலொன்று நடத்தப்பட்டிருந்தது.
இந்த தாக்குதல் சம்பவத்தில் 277 பேர் உயிரிழந்திருந்தனர்.
அத்துடன், சுமார் 400ற்கும் அதிகமானோர் காயமடைந்திருந்ததாக நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் விசாரணை அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த தாக்குதல் சம்பவத்திற்கு இஸ்லாமியவாத பயங்கரவாத அமைப்பான தேசிய தௌஹித் ஜமாத் அமைப்பு பொறுப்பு கூறியிருந்தது.
தேசிய தௌஹித் ஜமாத் அமைப்பின் தலைவரான சஹ்ரான் ஹாஷிம் தலைமையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதுடன், பயங்கரவாதத் தாக்குதலில் அவரும் உயிரிழந்திருந்தார்.
கொழும்பு கொச்சிகடை புனித அந்தோனியார் தேவாலயம், நீர்கொழும்பு செபஸ்டியன் தேவாலயம் மற்றும் மட்டக்களப்பு சியோன் தேவாலயம் ஆகிய கிறிஸ்தவ தேவாலயங்களின் மீதும், கொழும்பிலுள்ள பிரபல நட்சத்திர ஹோட்டல்களான கின்ஸ்பேரி, சங்கிரிலா மற்றும் சினமன் கிரேன்ட் ஆகிய ஹோட்டல்கள் மீதும் இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது.
இதேவேளை, ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் 197 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவிக்கின்றார்.
இதன்படி, குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் 119 சந்தேகநபர்களும், பயங்கரவாதத் தடுப்பு பிரிவிரினால் 78 சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் 40 பேர் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாகவும், 33 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
அத்துடன், பயங்கரவாதத் தடுப்பு பிரிவினர் கீழ் 52 சந்தேக நபர்கள் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக போலீஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிடுகின்றார்.
ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை துரிதப்படுத்தி விரைவில் நிறைவு செய்ய எதிர்பார்த்துள்ளதாக போலீஸ் ஊடகப் பேச்சாளர் ஜாலிய சேனாரத்ன தெரிவிக்கின்றார்.
BBC