யாழ்ப்பாணம் மாதகல் பகுதியில் இலங்கை கடற்படையினரின் உயர்பாதுகாப்பு வலயம் அமைக்கப்பட்டு வருகின்றமையினைக் கண்டித்து மாதகல் மக்கள் நேற்று (05.12.2011) காலை கவனயீர்ப்பு போராட்டமொன்றை வலிதென்மேற்கு பிரதேச மன்றம் முன்றலில் நடத்தியுள்ளனர்.
மாதகல் ஜே152 பகுதியில் சிங்கள கடற்படையினரினால் பாரிய முகாமொன்று அமைக்கப்பட்டு வருகின்றது. இதனால் இந்தப்பகுதியைச் சேர்ந்த சுமார் 500ற்கும் மேற்பட்ட மக்கள் தொடர்ந்தும் அகதி முகாம்களிலேயே தங்கியுள்ளனர்.
மேலும் மக்களுடைய பெரும்பாலான சொத்துகள் புதிதாக அமைக்கப்படும் உயர்பாதுகாப்பு வலயத்திற்குள்ளேயே அடக்கப்பட்டிருக்கின்றது. எனினும் இந்தப் பகுதியில் விடுதலைப் புலிகள் முகாமிட்டிருந்தனர் அவர்கள் அங்கு பயங்கர ஆயுதங்களை பாதுகாத்து வைத்திருப்பதற்காக பயன்படுத்தினர் என நொண்டிச் சாட்டு சிங்கள கடற்படையால் கூறப்படுகின்றது.
இதனை மறுத்துள்ள மக்கள் வடக்கில் ஏனைய பகுதிகளை புலிகள் எவ்வாறு பயன்படுத்தினரோ அவ்வாறே எமது பகுதியையும் புலிகள் பயன்படுத்தினர். 92-ம் ஆண்டு புலிகள் எமது பகுதிக்கு வரும்வரையில் நாம் எமது நிலத்தில் வாழ்ந்து கொண்டிருந்தோம் அதற்கு பின்னரும் வாழ்ந்தோம் என மக்கள் மேலும் தெரிவித்தனர்.
இதேவேளை குறித்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட அப்பகுதி மக்கள் ஆர்ப்பாட்டத்தின் முடிவில் பிரதேச மன்ற தவிசாளரிடம் கோரிக்கை மனு ஒன்றினையும் வழங்கினர்.