“நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவு நீட்டிக்கப்படுமா?

நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவை ஏப்ரல் 28க்குப் பிறகு நீட்டிக்கலாமா என்பதை சுகாதார அமைச்சு அடுத்த சில நாட்களுக்குள் பிரதமர் முகிதீன் யாசினுக்கு பரிந்துரைக்கும்.

இந்த பரிந்துரையை வழங்குவதில், எல்லைக் கட்டுப்பாடுகளை பின்பற்றுதல், நடமாட்டக் கட்டுப்பாடுகளை பின்பற்றுதல் மற்றும் புதிய இயல்புக்கு ஏற்ப தயாராகுதல் உள்ளிட்ட நிபந்தனைகள் உள்ளன என்று சுகாதார இயக்குநர் ஜெனரல் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா நேற்று தனது அறிக்கையில் மீண்டும் வலியுறுத்தினார்.

“நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு முன்னர் நாம் ஐந்து நிபந்தனைகளை பூர்த்தி செய்ய வேண்டும்,” என்று அவர் புத்ராஜெயாவில் அமைச்சின் தினசரி செய்தியாளர் கூட்டத்தில் அவர் கூறினார்.

மாதிரி (model), உண்மைகள் (facts), புள்ளிவிவரங்கள் (statistics) மற்றும் உலக சுகாதார அமைப்பின் (WHO) ஆலோசனையின் அடிப்படையில், மலேசியாவின் நிலைமைக்கு ஏற்ப அமைச்சின் ஆலோசனை அமையும் என்று நூர் ஹிஷாம் கூறினார்.

தற்போது, செயலில் உள்ள பாதிப்புகள் மற்றும் புதிய நோய்தொற்றுகள் சரிவை கண்டு இரண்டு இலக்க எண்ணை அடைந்துள்ளன. அடுத்த ஓரிரு வாரங்களில் இது இன்னும் குறைக்கப்படலாம் என்று நூர் ஹிஷாம் கூறினார்.

“”நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவு திரும்பப் பெறப்படுமா அல்லது தொடருமா என்பது குறித்து நாங்கள் எங்கள் ஆலோசனையை வழங்குவோம், ஆனால் பிரதமர் தான் ஒரு முடிவை எடுப்பார்” என்று அவர் கூறினார்.

“நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவு மார்ச் 18 முதல் நடைமுறைக்கு வந்து ஏப்ரல் 28 ஆம் தேதி வரை திட்டமிடப்பட்ட இரண்டாவது மற்றும் மூன்றாவது கட்டங்களாக நீட்டிக்கப்பட்டது.