இலங்கை கிரிக்கெட் வீரர் குசல் மெண்டிஸ் கைது செய்யப்பட்டு விடுவிப்பு – விரிவான தகவல்கள்

இலங்கை கிரிக்கெட் அணி வீரர் குசல் மெண்டீஸ் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளார்.

கொழும்பு புறநகர் பகுதியான பாணந்துறை பகுதியில் நேற்று அதிகாலை வாகன விபத்தொன்று இடம்பெற்றது.

சொகுசு காரொன்றும், சைக்கிள் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில், சைக்கிளில் பயணித்த ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த சொகுசு காரை இலங்கை அணி வீரர் குசல் மென்டீஸ் செலுத்தியிருந்ததுடன், சம்பவத்தை அடுத்து அவர் பாணந்துறை போலீஸ் நிலையத்தில் சரணடைந்திருந்தார்.

இந்த நிலையில் கைது செய்யப்பட்ட குசல் மென்டீஸ், இன்றைய தினம் வரை போலீஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.

சம்பவத்தில் பாணந்துறை – கொரகபொல பகுதியைச் சேர்ந்த 64 வயதான ஒருவரே உயிரிழந்துள்ளார்.

இதன்படி, கைது செய்யப்பட்ட குசல் மெண்டீஸ் பாணந்துறை நீதவான் முன்னிலையில் இன்று ஆஜர்ப்படுத்தப்பட்டதை அடுத்து, அவர் பிணையில் செல்ல அனுமதி வழங்கியுள்ளார்.

குசல் மெண்டீஸின் சாரதி அனுமதிப் பத்திரம் நீதிமன்றத்தினால் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

10 லட்சம் ரூபா வீதமான இரண்டு சரீர பிணைகளின் கீழ் குசல் மென்டீஸ் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இந்த விபத்து நேரும் சந்தர்ப்பத்தில் இலங்கை கிரிக்கெட் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் அவிஷ்க பெர்ணான்டோவும் வாகனத்தில் பயணித்துள்ளதாக போலீஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த வழக்கு மீதான விசாரணைகள் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 9ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

TamilMirror