இலங்கையிலுள்ள பழைமை வாய்ந்த பல பௌத்த விகாரைகள் இல்லாது செய்யப்பட்டு, இந்து கோயில்கள் நிர்மாணிக்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண தொல்பொருள் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி செலயணியின் உறுப்பினர் எல்லாவல மேதானந்த தேரர் தெரிவிக்கின்றார்.
மேதானந்த தேரர் வெறுப்பு, வேற்றுமை மற்றும் பழிவாங்கல்களை முன்னெடுத்து வருவதாக அவருக்கு இந்து தரப்பில் இருந்து எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
திருகோணமலையில் கோகண்ண விகாரை அமைந்துள்ள இடத்திலேயே தற்போது திருகோணேஸ்வரம் கோயில் அமைக்கப்பட்டுள்ளதாக அவர் பிபிசி தமிழிடம் குறிப்பிட்டார்.
பொலன்னறுவை யுகத்திற்கு சொந்தமான கல்வெட்டுக்களில் இந்த விகாரை இருந்தமைக்கான சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறுகின்றார்.
அந்த இடத்தில் அமைந்திருந்த பௌத்த விகாரை உடைக்கப்பட்டு, திருகோணேச்சரம் கோயில் நிர்மாணிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவிக்கின்றார்.
இலங்கையில் இரண்டாவது இராசதானி இருந்த காலப் பகுதியிலேயே இந்த விகாரை அமைந்திருந்ததாகவும் அவர் கூறுகின்றார்.
இந்த காலப் பகுதியில் போர்த்துகேயர் திருகோணமலையில் கோகண்ண விகாரையை உடைத்திருந்ததாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.
இவ்வாறு உடைக்கப்பட்ட கோயிலின் சிதைவுகளை எடுத்து, அந்த இடத்தில் திருகோணேஸ்வரம் கோயில் நிர்மாணிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
திருகோணேஸ்வரம் கோயில், பாடல்பெற்ற திருத்தலம் என இந்துக்களின் பழைமை வாய்ந்த புத்தகங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளமை தொடர்பில் எல்லாவல மேதானந்த தேரரிடம் பிபிசி தமிழ் வினவியது.
பிற்காலத்தில் ஒவ்வொருவரும் தமக்கு ஏற்ற வகையில் அதனை மாற்றி அமைத்துகொண்டதாக அவர் பதிலளித்தார்.
இந்த இடத்தில் பௌத்த விகாரை இருந்தமைக்கான ஆதாரங்கள் என்னவெனவும் பிபிசி தமிழ் வினவியது.
குறித்த பகுதியிலுள்ள கல்வெட்டுக்கள், விகாரை உடைக்கப்பட்டமைக்கான சிதைவுகள், சந்திரவட்டகல் உள்ளிட்ட பல ஆதாரங்கள் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இவ்வாறான சில சிதைவுகள் கடலுக்குள் வீசப்பட்டுள்ளதாகவும், சில சிதைவுகள் மலைக்கு மேல் உள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.
பொலன்னறுவை யுகத்திலிருந்த மன்னன் ஒருவரின் கல்வெட்டொன்றில், கோகண்ண விகாரை என வெட்டப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவிக்கின்றார்.
தமிழர்கள் மற்றும் முஸ்லிம்கள்
கிழக்கு மாகாண தொல்பொருள் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி செயலணியொன்று ஜனாதிபதியினால் ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாகவும், அதில் தமிழர்கள் மற்றும் முஸ்லிம்கள் இல்லாமையினாலேயே இவ்வாறான கருத்து வெளியிடப்படுவதாக சமூக வலைத்தளங்களில் வெளியான செய்தி குறித்தும் பிபிசி தமிழ், எல்லாவல மேதானந்த தேரரிடம் வினவியது.
நாட்டிலுள்ள அனைத்து விடயங்களுக்கும் தமிழர்கள் மற்றும் முஸ்லிம்களை நியமித்து பணியாற்ற முடியாது என அவர் குறிப்பிட்டார்.
இலங்கையின் பல்வேறு விடயங்களுக்கு தமிழ் மற்றும் முஸ்லிம் அரசியல்வாதிகள் இனவாத விடயங்களை வெளியிட்டு அரசியல் லாபம் தேடி வருவதாகவும் அவர் கூறினார்.
தமிழர்கள் மற்றும் முஸ்லிம்கள் இந்தச் செயலணியில் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள் என ஜனாதிபதி அலுவலகம் சமீபத்தில் தெரிவித்துள்ளது.
சிங்கள மக்களிடமோ அல்லது ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரிடமும் இனவாத கருத்துகள் கிடையாது என மேதானந்த தேரர் தெரிவிக்கின்றார்.
இலங்கையிலுள்ள தொல்பொருட்களை பாதுகாக்கும் நோக்குடனேயே ஜனாதிபதியினால் இந்த ஜனாதிபதி செயலணியொன்று உருவாக்கப்பட்டதாக கூறிய அவர், அதில் தமிழர்கள் மற்றும் முஸ்லிம்கள் இடம்பிடிக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது எனவும் கூறினார்.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலுள்ள தொல்பொருட்களை அடையாளம் கண்டு அவற்றை பாதுகாப்பதற்காகவே இந்த ஜனாதிபதி செயலணி அமைக்கப்பட்டுள்ளதாக கூறிய அவர், அதைவிடுத்து, கோயில்கள் மற்றும் பள்ளிவாசல்களை உடைப்பதற்காக இந்த செயலணி உருவாக்கப்படவில்லை எனவும் குறிப்பிட்டார்.
பௌத்த விகாரைகளை உடைத்து, கோயில்கள் கட்டப்பட்டுள்ளதை தமிழர்கள் புரிந்துகொள்ள வேண்டும் எனவும் அவர் கூறினார்.
விகாரைகளை உடைத்து கோயில்கள் நிர்மாணிக்கப்பட்டதாக கூறப்படும் ஆலயங்களின் பெயர்களை அவர் பட்டியலிட்டார்.
- திருகோணமலை திருகோணேஸ்வரம் கோயில்
- ஒட்டுச்சுட்டான் தான்தோன்றிஸ்வரம் கோயில்
- கனகராயன்குளம் கோயில்
- வவுனிகுளம் கோயில்
- திருகேதீஸ்வரம் கோயில்
- தொப்பிகல கோயில்
- வவுனியா – மருதநாயகன் குளம் கோயில்
இலங்கையிலுள்ள அனைத்து பகுதிகளிலும் நிர்மாணிக்கப்பட்டுள்ள ஆலயங்களில் பெரும்பாலானவை விகாரைகளை உடைத்தே நிர்மாணிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறுகின்றார்.
இந்து அமைப்புகள் எதிர்ப்பு
புத்த பெருமானின் போதனைகளுக்கு எதிராகவே எல்லாவல மேதானந்த தேரர் செயற்பட்டு வருவதாக சிவ சேனை அமைப்பின் தலைவர் மறவன் புலவு க. சச்சிதானந்தன் தெரிவிக்கின்றார்.
அறிக்கையொன்றின் ஊடாக அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
வெறுப்பையும், வேற்றுமையையும், பழிவாங்கல்களையும் புத்த பெருமான் போதிக்கவில்லை என அவர் குறிப்பிடுகின்றார்.
ஆனால் எல்லாவல மேதானந்த தேரர் வெறுப்பு, வேற்றுமை மற்றும் பழிவாங்கல்களை முன்னெடுத்து வருவதாக அவர் கூறுகின்றார்.
இலங்கை தீவில் அமைதியும், சமாதானமும் நிலவ வேண்டும் என்றால், எல்லாவல மேதானந்த தேரரின் கருத்து புறக்கணிக்கப்பட வேண்டும் என மறவன் புலவு க சச்சிதானந்தன் தெரிவிக்கின்றார்.
‘திருகோணேஸ்வரம் ஆலயத்தில் பௌத்த விகாரை இருக்கவில்லை’
பௌத்த விகாரை உடைக்கப்பட்டு, திருகோணேஸ்வரம் கோயில் நிர்மாணிக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் கருத்தை ஒருபோதும் ஏற்றுகொள்ள முடியாது என தொல்லியல் பேராசிரியரும், யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத்துறை பேராசிரியருமான பீ.புஸ்பரட்ணம் தெரிவிக்கின்றார்.
இலங்கையில் பௌத்தம் வருவதற்கு முன்னர் தென்னிந்தியாவை ஒத்ததான ஒரு கலாசாரம் இங்கு நிலவியதாக அவர் கூறுகின்றார்.
இந்த கலாசார பண்பாட்டின் ஊடாக இலங்கையில் இந்து மதத்திற்கான ஆரம்பம் தென்படுவதாக அவர் குறிப்பிடுகின்றார்.
இலங்கையில் இந்துக்கள் பல வருடங்களுக்கு முன்னர் இருந்தே இருப்பதற்கான சான்றுகள் கண்டுபிடிக்கப்பட்ட இடங்களில் கிழக்கு இலங்கையும் ஒன்று என அவர் கூறுகின்றார்.
நாயன்மார் பாடல்களில் திருகோணேஸ்வரம் தொடர்பில் பாடப்பட்டுள்ளதையும் அவர் இதன்போது நினைவூட்டினார்.
இந்தியாவிற்கு அடுத்தப்படியாக சிவ வழிபாடு இலங்கையின் திருகோணேஸ்வரம் மற்றும் திருகோதீஸ்வரம் ஆகிய ஆலயங்களில் இடம்பெற்றதாக வரலாற்று சான்றுகள் கூறுவதாக அவர் குறிப்பிடுகின்றார்.
திருகோணேஸ்வரம் ஆலயத்தை சூழ தமிழர்கள் வாழ்ந்தமைக்கான சான்றுகளும் உள்ளதாக அவர் கூறுகின்றார்.
7ஆம் நூற்றாண்டிலேயே திருகோணேஸ்வரம் கோயில் தொடர்பில் பாடல்கள் பாடப்பட்டால், அதற்கு முன்னதாகவே அந்த கோயில்கள் பிரசித்தி பெற்றவையாக இருந்துள்ளது என அவர் தெரிவிக்கின்றார்.
இதனால் குறித்த கோயில் தொடர்பில் பௌத்த தேரர் வெளியிடும் கருத்து முற்றியும் தவறானது எனவும், ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் தொல்லியல் பேராசிரியரும், யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத்துறை பேராசிரியருமான பீ.புஸ்பரட்ணம் தெரிவிக்கின்றார்.
BBC