இலங்கை கடற்பகுதியில் தீப்பிடித்த எண்ணெய் கப்பல் 79 மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு முற்றிலும் அணைக்கப்பட்டது: மீட்பு பணிகளுக்கு சர்வதேச நிபுணர் குழு வருகை

இலங்கை கடற்பகுதியில் தீப்பிடித்த எண்ணெய் கப்பலில் மீட்பு பணிகளுக்கு சர்வதேச நிபுணர் குழுவினர் வந்தனர்.  பனாமா நாட்டில் பதிவு செய்யப்பட்ட நியூ டைமண்ட் என்ற எண்ணெய் கப்பல் குவைத்தில் இருந்து 2,70,000 மெட்ரிக் டன் கச்சா எண்ணெயுடன் இந்தியா வந்து கொண்டிருந்தது. இந்த கப்பலில் பிலிப்பைன்ஸ் மற்றும் கிரேக்கத்தை சேர்ந்த 23 ஊழியர்கள் இருந்தனர்.

இந்த கப்பல் இலங்கையின் கிழக்கில் அம்பாறா மாவட்டத்தின் சங்கமன்கண்டா கடற்பகுதியில் வந்தபோது அதன் என்ஜின் அறையில் கொதிகலன் வெடித்தது. இதில் கப்பலில் தீ பிடித்தது. இந்த சம்பவத்தில் ஊழியர் ஒருவர் உயிரிழந்தார்.

கப்பலில் தீ விபத்து ஏற்பட்ட தகவல் அறிந்து இலங்கை கடற்படை, விமானப்படை வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து தீயை அணைக்கும் பணிகளை தொடங்கினர். பின்னர் இலங்கையின் வேண்டுகோளின்படி இந்தியாவும் இந்த பணிகளில் இணைந்தது.

அதன்படி இந்தியாவின் கடலோர காவல்படையை சேர்ந்த சுமார் 5 கப்பல்கள் மற்றும் ஒரு கடற்படை கப்பல் மற்றும் 2 டோர்னியர் விமானங்கள் என பெரும் படை ஒன்றும் இந்தியா சார்பில் தீயணைப்பு பணிகளில் ஈடுபட்டது.

இரவு, பகலாக நடந்த இந்த பணிகளின் பலனாக நேற்று முன்தினம் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. 79 மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு தீ முற்றிலும் அணைக்கப்பட்டது.

இந்த தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகளுக்கு சர்வதேச நிறுவனங்கள் மற்றும் நிபுணர்களை கப்பலின் உரிமையாளர்கள் ஏற்பாடு செய்துள்ளனர். அதன்படி சிங்கப்பூரை மையமாக கொண்டு இயங்கும் சர்வதேச நிறுவனத்தை சேர்ந்த நிபுணர் குழு ஒன்று இந்த பணிகளில் இணைந்துள்ளது.

மேலும் இங்கிலாந்து மற்றும் நெதர்லாந்தை சேர்ந்த 10 நிபுணர்கள் விரைவில் மீட்பு பணிகளில் இணைவார்கள் என இலங்கை கடற்படை கூறியுள்ளது. இதைப்போல கச்சா எண்ணெய் கப்பல்களை கையாளும் திறன் கொண்ட மேலும் 2 இழுவை படகுகள் சிங்கப்பூர் மற்றும் மொரீசியசில் இருந்து இலங்கை விரைந்துள்ளன.

தீ பிடித்த கப்பல் தற்போது இலங்கை கரையில் இருந்து 40 நாட்டிக்கல் மைல் தொலைவில் நிறுத்தப்பட்டு உள்ளது. கப்பலில் இருந்த 23 ஊழியர்களில் 22 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். அவர்கள் நேற்று தங்கள் குடும்பத்தினருடன் பேசுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

கப்பலில் பிடித்த தீ கட்டுக்குள் இருப்பதாகவும், மேலும் பரவாமல் இருக்க என்ஜின் அறையை ஒட்டியுள்ள தகடுகள் தொடர்ந்து குளிர்விக்கப்பட்டு வருவதாகவும் இந்திய கடலோர காவல் படை கூறியுள்ளது. கப்பலில் பிடித்த தீயை அணைப்பது, அதுவும் நடுக்கடலில் அணைப்பது மிகவும் சிக்கலானது எனக்கூறியுள்ள இந்திய கடலோர காவல்படை அதிகாரிகள், அதுவும் இந்த சம்பவத்தில் தீ பிடித்த என்ஜின் அறை கப்பலின் அடிப்பகுதியில் அமைந்திருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

எண்ணெய் கப்பலில் பிடித்த தீயை விரைந்து கட்டுக்குள் கொண்டு வந்ததற்காக இந்தியாவுக்கு மாலத்தீவு முன்னாள் அதிபர் முகமது நஷீத் பாராட்டு தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டரில் வெளியிட்ட தகவலை, இந்திய கடலோர காவல்படை தனது டுவிட்டரில் பகிர்ந்துள்ளது.

dailythanthi