இலங்கை 20ஆவது திருத்தம்: ஆதரவாக வாக்களித்த தமிழ் எம்.பி மீது நடவடிக்கை

இலங்கை நாடாளுமன்றத்தில் அரசியலமைப்பின் 20ஆவது திருத்தம், மூன்றில் இரண்டுக்கும் அதிகமான பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்ட நிலையில், அதற்கு எதிர்கட்சியினரும் ஆதரவாக வாக்களித்திருக்கும் தகவல் தெரிய வந்துள்ளது.

இந்த விவகாரத்தில், 20ஆவது திருத்தத்துக்கு ஆதரவாக வாக்களித்த தமிழ் முற்போக்கு கூட்டணியின் நாடாளுமுன்ற உறுப்பினர் அரவிந்த் குமாரை, கட்சியிலிருந்து இடைநிறுத்தியுள்ளதாக, அந்தக் கட்சியின் தலைவர் மனோ கணேசன் வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளார்.

ARAVIND KUMAR FB

இதேபோல, தமது கட்சித் தலைவரின் ஆசிர்வாதத்துடனேயே, 20ஆம் திருத்தத்துக்கு தாம் ஆதரவளித்ததாக, முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினரும், அந்தக் கட்சியின் பிரதித் தலைவருமான ஹரீஸ் கூறியுள்ளார்.20ஆவது திருத்ததம் மீதான வாக்கெடுப்பில், முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 4 பேர் ஆதரவாக வாக்களித்திருந்தனர். தலைவர் ஹக்கீம் மட்டும் எதிர்த்து வாக்களித்திருந்தார்.”உங்கள் மனச்சாட்சிப்படி நீங்கள் ஆதரவாகவும் வாக்களிக்கலாம், எதிராகவும் வாக்களிக்கலாம். கட்சியின் தலைவர் என்ற ரீதியில் அந்த உரிமையை தருகின்றேன். ஆதரவாக வாக்களிப்பவர்கள் கட்சியினதோ, தலைவரினதோ கட்டுப்பாட்டை மீறியதாக கருதப்படமாட்டாது” என, தலைவர் ஹக்கீம் கூறியதாக, ஹரீஸ் தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசியலமைப்பு வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படும் இந்த திருத்தம் நிறைவேற்றி நிகழ்வு பற்றி நீங்கள் அறிய வேண்டிய தகவல்களை வழங்குகிறோம்.

திருத்தத்துக்கு ஆதரவு அளித்த எதிர்கட்சி உறுப்பினர்கள் யார்?

மொத்தம் 156 வாக்குகள் திருத்தத்துக்கு ஆதரவாக கிடைத்தன. எதிராக 65 உறுப்பினர்கள் வாக்களித்திருந்தனர்.

ஆளும் பொதுஜன பெரமுன கட்சியினதும், அதன் பங்காளிக் கட்சிகளினதும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் – மேற்படி திருத்தத்துக்கு ஆதரவாக வாக்களித்தார்கள். அதேவேளை எதிரணியிலிருந்தும் இந்த திருத்தத்துக்கு ஆதரவாக 8 வாக்குகள் கிடைத்தன.

5 நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் 4 உறுப்பினர்கள், இந்த திருத்தை ஆதரித்து வாக்களித்தனர். அந்தக் கட்சியின் தலைவர் ரஊப் ஹக்கீம் மட்டுமே திருத்தத்தை எதிர்த்து வாக்களித்தார்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் இரு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்தத் திருத்தத்தை ஆதரித்து வாக்களித்த அதேவேளை, மேற்படி கட்சியின் தலைவர் றிசாட் பதியுதீன் மற்றும் அந்தக் கட்சியின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம். முஷாரப் ஆகியோர் 20ஆவது திருத்தத்தை எதிர்த்து வாக்களித்தனர்.

இதேவேளை, மனோ கணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்கு கூட்டணியின் நடாளுமன்ற உறுப்பினர் ஏ. அரவிந்த் குமார், ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் டயானா கமகே ஆகியோரும் 20ஆவது திருத்தத்துக்கு ஆதரவாக வாக்களித்தனர்.

முஷாரப்: ஆதரவும், எதிர்ப்பும்

இரட்டைப் பிரஜாவுரிமையைக் கொண்ட ஒருவர் நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகிக்க முடியும் என்ற ஷரத்தை நிறைவேற்றுவதற்கு தனியாக வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

20ஆவது திருத்தத்தின் இரண்டாம் வாசிப்புக்கான வாக்கெடுப்பிலும், இறுதி வாக்கெடுப்பின் போதும் எதிராக வாக்களித்த – மக்கள் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் முஷாரப், இரட்டைப் பிரஜாவுரிமை ஷரத்துக்கு ஆதரவாக வாக்களித்தார்.

,முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை. எனினும், அவர் தலைமை தாங்கும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் 20ஆவது திருத்தத்துக்கு ஆதரவாகவே வாக்களித்தனர்.

எதிர்கட்சிகள் குற்றம்சாட்டு

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் இளைய சகோதரர் பஷில் ராஜபக்ஷவுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வழங்குவதற்காகவே, 20ஆவது திருத்தத்தில் இரட்டைப் பிரஜாவுரிமை ஷரத்து சேர்க்கப்பட்டுள்ளதாக, மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அனுர குமார திஸாநாயக்க நாடாளுமன்றத்தில் நடந்த 20ஆவது திருத்தம் மீதான விவாதத்தில் பங்கேற்றபோது குற்றம்சாட்டினார்.

பஷில் ராஜபக்ஷ, அமெரிக்கா மற்றும் இலங்கை பிரஜாவுரிமைகளை தற்போது கொண்டிருக்கிறார்.

இலங்கை அரசியலமைப்பின் 20ஆவது திருத்தம் என்ன?

இலங்கை அரசியலமைப்பின் 20ஆவது திருத்த மசோதாவை, கடந்த செப்டம்பர் மாதம் 22ஆம் தேதி நீதி அமைச்சர் அலி சப்றி நாடாளுமன்றில் சமர்ப்பித்தார்.

இதையடுத்து, அந்த நடவடிக்கைக்கு எதிராக உச்ச நீதிமன்றில் 39 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அந்த மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பை கடந்த 10ஆம் தேதி நாடாளுமன்ற சபாநாயகருக்கு அனுப்பி வைத்திருந்தது.

சஜித் பிரேமதாஸ

இதையடுத்து, கடந்த 20ஆம் தேதி அந்த தீர்ப்பை நாடாளுமன்றில் சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்த்தன வாசித்தார்.

20ஆவது திருத்தத்திலுள்ள நான்கு சரத்துகளை நிறைவேற்றுவதற்கு சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட்டு பொதுமக்களின் அங்கிகாரம் பெறப்படவேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டிருப்பதாக அவர் கூறினார்.

இருந்தபோதும் அவற்றில் இரண்டு ஷரத்துக்கள், குழுநிலை விவாதத்தின்போது திருத்திக் கொள்ள முடியும் என்றும், மற்றொரு ஷரத்திலுள்ள பகுதிகளை நீதிமன்றத்தின் விவாதத்துக்கு ஏற்ப மாற்றம் செய்து கொள்ளலாம் என்றும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பில் கூறியிருந்தது.

இதனையடுத்து 20ஆவது திருத்தத்தின் பொருட்டு சர்வஜன வாக்கெடுப்பு நடத்துவதைத் தவிர்க்கும் வகையில், அந்தத் திருத்தச் சட்ட மூலத்தில் சில மாற்றங்களையும், நீங்கங்களையும் ஆளும் தரப்பு மேற்கொண்டது.

அவ்வாறான திருத்தங்களுடன் நாடாளுமன்றில் வாக்கெடுப்புக்கு விடப்பட்ட 20ஆவது திருத்தம், மூன்றிலிரண்டுக்கும் அதிகமான பெரும்பான்மை வாக்குகளால் நேற்றைய தினம் நிறைவேறியது.

எதிர்ப்பு ஏன்?

ஜனாதிபதிக்குரிய அதிகாரங்களை மிக அதிகளவில் அதிகரித்துக் கொள்ளும் வகையில் அமைந்துள்ள மேற்படி 20ஆவது திருத்தத்துக்கு, தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தும் வகையில், நேற்றைய தினம் சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களும், அந்தக் கட்சியின் பங்காளிக் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் 20க்கு எதிரான வாசகங்கள் எழுதப்பட்ட பட்டிகளை கைகளிலும், மார்பில் ஸ்டிக்கர்களையும் அணிந்திருந்தார்கள்.

அவர்கள் அணிந்திருந்த முகக் கவசங்களிலும் 20ஆவது திருத்தத்துக்கு எதிரான வாசகங்கள் எழுதப்பட்டிருந்தன.

இவ்வாறு 20ஆவது திருத்தத்துக்கு எதிரான வாசகத்தைக் கொண்ட கைப்பட்டியினை சபையில் அணிந்திருந்த முஸ்லிம் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். தௌபீக், வாக்கெடுப்பு நடவடிக்கையின் போது, இருபதாவது திருத்தத்துக்கு ஆதரவளித்தமை குறிப்பிடத்தக்கது.

கொரோனா பாதுகாப்பு ஆடையுடன் வந்த றிசாட் பதியுதீன்

இது இவ்வாறிருக்க, குற்றச்சாட்டு ஒன்றின் பேரில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவர் றிசாட் பதியுதீன், சுகாதார விதிமுறைகளுக்கு அமைவாக தனிமைப்படுத்தப்பட்டிருந்த நிலையில், நேற்று நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொள்வதற்காக, சிறைக் காவலர்களால் அழைத்து வரப்பட்டிருந்தார். இதன்போது அவருக்கு கோரோனா பாதுகாப்பு அங்கி அணிவிக்கப்பட்டிருந்ததோடு, சபையிலும் அவர் தனியாக அமர வைக்கப்பட்டிருந்தார்.

BBC