இலங்கையில் எதிர்பாராத அளவுக்கு உயர்ந்த காற்று மாசு

இலங்கையில் கடந்த சில நாள்களாக எதிர்பாராத அளவுக்கு காற்று மாசு அளவு அதிகரித்துள்ளது.

தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தின் வளி மதிப்பீட்டு மத்திய நிலையம் அறிக்கையொன்றில் இதைத் தெரிவித்துள்ளது.

இலங்கையின் தென் பகுதியை தவிர்த்த ஏனைய பெரும்பாலான பகுதிகளில் இவ்வாறு வளி மாசடைதல் அதிகரித்துள்ளதாக அந்த நிலையம் குறிப்பிடுகிறது.

கொழும்பு, கண்டி, புத்தளம், வவுனியா, யாழ்ப்பாணம் உள்ளிட்ட தென் பகுதி தவிர்த்த ஏனைய அனைத்து பகுதிகளிலும் வளி மாசடைதல் அதிகரித்துள்ளது என்கின்றன தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தின் வளி மதிப்பீட்டு மத்திய நிலையத்தின் தரவுகள்.

குறிப்பாக கடந்த அக்டோபர் மாதம் 27ஆம் தேதிக்கு பிறகுதான் வளி மாசடைதல் அதிகரித்துள்ளதாக அந்த நிலையத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கடந்த காலங்களில் வளி மாசடைந்ததை விடவும், இரண்டு மடங்குக்கும் அதிகமான அளவு வளி மாசடைதல் அதிகரித்துள்ளதை அவதானிக்க முடிந்துள்ளதாகவும் அந்த நிலையம் குறிப்பிடுகிறது.

மிகவும் சிறிய தூசியாக கருதப்படும் பி.எம் 2.5 தூசி, 100 – 150 சதவீதம் வரை அதிகரித்துள்ளதாகவும், அது செயற்திறன் குறைந்த நபர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வாய்ப்பு இருப்பதாகவும் இந்நிலையம் கூறுகிறது.

இலங்கையில் கொரோனா தாக்கம் அதிகரித்துள்ள பின்னணியில், நாட்டில் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இதனால், வாகனப் போக்குவரத்து குறைந்துள்ள நிலையில், தற்போது வளி மாசடையும் விதம் குறிப்பிடத்தக்களவு குறைந்திருக்க வேண்டும் என அந்த நிலையம் சுட்டிக்காட்டுகிறது.

எனினும், இலங்கையை சூழ்ந்துள்ள பகுதிகளில் கடும் காற்றுடனான வானிலை காணப்படுவதால், நாட்டிற்குள் தற்போது வளி மாசடைந்துள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதுமாத்திரமன்றி, இந்தியாவில் ஏற்பட்டுள்ள வளி மாசடைவு காரணமாகவும், இலங்கையில் வளிமண்டல எல்லைப் பகுதியில் வளி மாசடைந்துள்ளதாக அறிய முடிகின்றது எனவும் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் வாயு மதிப்பீட்டு மத்திய நிலையம் தெரிவிக்கின்றது.

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள இந்த காற்று மாசடையும் நிலைமை எதிர்வரும் சில தினங்களுக்கு தொடரும் என எதிர்பார்க்கலாம் என அந்நிலையம் கூறுகிறது.

இந்த வளி மாசடைவது, சிறு குழந்தைகள், முதியவர்கள், கர்ப்பிணிகள், சுவாசக் கோளாறு உள்ளவர்கள் ஆகியோருக்கு சுவாசிப்பதில் சிரமத்தை ஏற்படுத்தும். ஏனையோருக்கு இதனால் பாதிப்பு ஏற்படாது என அந்த நிலையம் குறிப்பிடுகின்றது.

வளி மாசடைதல் தொடர்பில் ஏற்படக்கூடிய சுகாதார பிரச்சனைகள் குறித்து சுகாதார பிரிவினர் தற்போது ஆராய்ந்து வருவதாகவும், சுகாதார பிரச்சனைகள் ஏற்படாதிருப்பதிற்கு தொடர்ச்சியாக முகக்கவசத்தை அணியுமாறும் சுகாதார பிரிவினர் கோரிக்கை விடுக்கின்றனர்.

20 ஆண்டுகளுக்குப் பின்னர் சுத்தமான இலங்கை

கடந்த 20 ஆண்டு வரலாற்றில் இந்த ஆண்டின் மார்ச் மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரையான காலப் பகுதியிலேயே முதற்தடவையாக வளி மாசடைதல் வீதம் வெகுவாக குறைந்திருந்தது.

இலங்கையில் கோவிட்-19 வைரஸ் முதலாவது அலை ஏற்பட்ட காலப் பகுதியில் நாடு முடக்கப்பட்ட நிலையிலேயே இந்த வளி மாசடைதல் வீதம் வெகுவாக குறைந்திருந்தது.

குறிப்பாக கடந்த மார்ச் மாதம் 20ஆம் தேதி முதல் ஏப்ரல் மாதம் 20ஆம் தேதி வரையான ஒரு மாத காலம் நாடு முழுமையாக முடக்கப்பட்டிருந்தது.

இந்த காலப் பகுதியிலேயே இலங்கையின் வளிமண்டல காற்றுமாசு வீதம் வெகுவாக குறைந்திருந்ததாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவிக்கிறது.

BBC