ஜனாஸா எரிப்பு விவகாரம்; வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுதல்

இலங்கையில் கொரோனாவின் இரண்டாவது அலை மிக வேகமாகவும், வீரியமாகவும் பரவிக் கொண்டிருக்கின்றது. முதலாவது அலைக்கும் இரண்டாவது அலைக்கும் இடைப்பட்ட காலத்தில் அரசியல் காய்நகர்த்தல்களில் முழுக் கவனத்தையும் செலுத்தியிருந்த அரசாங்கம், இப்போது துணுக்குற்று எழுந்து, மீண்டும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதில் மும்முரமாக ஈடுபட்டுள்ளது.

இது சமூகப் பரவல் இல்லை என்று சொல்லி, முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் நடவடிக்கைகளும் எடுக்கப்படுகின்றன. இதுவரை கொவிட்-19 தொற்றுக்குள்ளான 21 மரணங்கள் பதிவாகியுள்ளளன. தற்கொலை செய்து இறந்த இளைஞனின் மரணத்தையும் கொவிட் கணக்கில் இருந்து அரசாங்கம் பதிவளிப்பு செய்திருக்கின்றது. இந்த பத்தியை நீங்கள் வாசிக்கும் போது மரணம் அதிகரித்திருக்கவும் கூடும். அந்தளவுக்கு வேகமாக பரவி வருகின்றது.

இலங்கையின் ஒட்டுமொத்த மக்களினதும் பொதுவான எதிர்பார்ப்பு கொரோனா வைரஸில் இருந்து தப்பித்து வாழ்தலாகும். சில பொதுமக்கள் அசட்டைத்தனமாக செயற்பட்டாலும் கூட, இன, மத வரையறைக் கடந்து நாட்டின் எல்லா மக்களையும் கொரோனா பற்றிய அச்சம் ஆட்கொண்டுள்ளது. ஆயுட்காலம் பற்றிய கேள்விகளுடன் அன்றாடங்கள் கழிந்து கொண்டிருக்கின்றன என்று மட்டுந்தான் சொல்ல முடிகின்றது.

ஆனால், அதனையும் தாண்டி இந்த நாட்டில் வாழ்கின்ற முஸ்லிம் சமூகத்திற்கு இன்னுமொரு கவலையும் அங்கலாய்ப்பும் ஏற்பட்டிருக்கின்றது. அது, கொரோனாவினால் மரணிக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்கள் எரிக்கப்படுவது பற்றியதானதாகும். கொரோனாவால் மரணிக்கும் முஸ்லிம்களின் உடல்களை தமது சமய வழக்கத்தின்படி புதைப்பதற்கு அனுமதிக்குமாறு முஸ்லிம் சமூகம் மீண்டும் கோரிவருகின்றது.

ஆனால், வெளியில் சொல்லவில்லை என்றாலும், புதைப்பதை விரும்புகின்ற முஸ்லிம் அல்லாத மதப் பிரிவினர்களும் இவ்வாறான ஒரு மனத்தாங்கலுடன் இருப்பதாகவே தெரிகின்றது.
இந்நிலையில் மிகப் பிந்திய தகவல்களின்படி, ஒரேயொரு முஸ்லிம் அமைச்சரும் நீதிக்குப் பொறுப்பான அமைச்சருமான அலிசப்ரி இவ்விடயத்தை அமைச்சரவைக்கு கொண்டு சென்றுள்ளார். இவ்வாரம் அமைச்சரவை சந்திப்பில் இவ்விடயம் கலந்துரையாடப்பட்ட போது முன்னரை விட சாதகமான கருத்துக்கள் ஆளும் தரப்பில் இருந்து முன்வைக்கப்பட்டதாக அறிய முடிகின்றது., இதுபற்றி ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க பணிக்கப்பட்டுள்ளது. இதுவொரு ஆறுதலான செய்தியாகும்.

உண்மையில், நிலத்தில் புதைப்பதால் கிருமி அல்லது தொற்று பரவும் என்று சுகாதார நிபுணர்கள் கூறியிருப்பார்களாயின் முஸ்லிம்கள் இதுதான் தலைவிதி என்று ஆறுதல் கொண்டிருப்பார்கள். ஆனால், இஸ்லாமிய விரோதப் போக்கையே கொள்கையாக வைத்துள்ள சர்வதேச நாடுகள் பலவும், உலக சுகாதார அமைப்பின் பரிந்துரைக்கமைய கொவிட்-19 காரணமாக மரணிக்கும் முஸ்லிம்களின் உடல்களை புதைக்க இடமளித்துள்ள நிலையில், நல்லிணக்கம் பற்றிப் பேசும் பல்லின நாடான இலங்கை அரசாங்கம் இவ்விதம் நடந்து கொள்வதையே முஸ்லிம்களால் ஜீரணிக்க முடியவில்லை.

முன்னதாக, உலக சுகாதார ஸ்தாபனத்தின் பரிந்துரைகளின்படி, கொவிட்-19 வைரஸ் காரணமாக மரணிப்போரின் உடல்களை ஆழமாக எரிக்கவோ அல்லது புதைக்கவோ முடியும் என சுகாதார அமைச்சு குறிப்பிட்டிருந்தது. பின்னர், ‘எரிக்கவே வேண்டும்’ என்று இச் சுற்றறிக்கை அவசர அவசரமாக திருத்தப்பட்டது. இந்த தருணத்தில் முதலாவது முஸ்லிம் நோயாளி கொரோனா தொற்று காரணமாக மரணித்தார். சில மணிநேரங்களில் அவரது ஜனாஸா தனிமைப்படுத்தல் விதிகளுக்கு அமைய எரிக்கப்பட்டது.

அப்போது முஸ்லிம் சமூகத்தால் ஒன்றும் செய்வதற்கான அவகாசம் இருக்கவில்லை. ஆயினும், இரண்டாவது முஸ்லிம் நபர் பலியான வேளையில் முஸ்லிம் அரசியல்வாதிகள், அழுத்தக் குழுக்கள், செயற்பாட்டாளர்கள் என எல்லோரும் ஒரே தொனியில் ஜனாஸாக்களை ஆழமாக புதைப்பதற்கு இடமளிக்குமாறு கோரி நின்றனர். ஒதுக்குப்புறமான பகுதியில் பிரத்தியேக மயானம் ஒன்றில் மிக ஆழத்தில் புதைப்பதற்கான முன்மொழிவுகளும் வைக்கப்பட்டன.

உலக சுகாதார ஸ்தாபனத்திற்கு மேலதிகமாக உள்நாட்டில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கமும் இரண்டு முறையிலும் இறுதிக் கிரியைகளை நடத்தலாம் என அறிக்கைவிட்டது. நிலத்தில் புதைப்பதால், உயிரற்ற உடலில் இருந்து கிருமி (பக்டீரியா) பரவலாம் என்றாலும், வைரஸ் பரவும் என்பதற்கான எந்த உறுதியான ஆதாரங்களும் இல்லாத நிலையில், சுகாதார அமைச்சின் அதிகாரிகள் அவ்விதம் பரவும் என்பதை உறுதியாகச் சொல்லவும் இல்லை. ஆதாரத்தை முன்வைக்கவும் இல்லை.

‘பரவுவதற்கான வாய்ப்பு இருக்கின்றது. ஏன் நாம் அவ்வாறான ஒரு அபாயநேர்வுக்கு வழியமைக்க வேண்டும்’ என்ற விதத்திலேயே அவர்களது கருத்துக்கள் அமைந்திருந்தன. நிலத்தடியில் வைரஸ் பரவும் என்பதை நிருபிப்பதை விடுத்து, பரவாது என்பதை நிரூபிக்கும் ஆவணங்களை முஸ்லிம் சமூகத்திடமிருந்து அரசாங்கம் கோரினார்கள்.

உணமையில் இவ்வாறான ஒரு அறிக்கையை முஸ்லிம்கள் சமர்ப்பித்திருக்க வேண்டும் என்பது வேறுவிடயம்.

இவ்வாறிருக்கையில், அரச பிரதானிகளை அப்போதைய முஸ்லிம் எம்.பி;.க்கள் சந்தித்துக் கலந்துரையாடினர். அங்கு சொல்லப்பட்ட பதிலை விட அது சொல்லப்பட்ட விதமே, ஜனாஸாக்களை அடக்குவதற்கு இடமளிக்கும் எண்ணம் ஒரு துளியளவும் அரசாங்கத்திடம் இல்லை என்பதை உணர்த்திற்று. பிறகு வழக்கம் போல முஸ்லிம் அரசியல்வாதிகளும் சமூகமும் தமது சொந்த வேலைகளைப் பார்க்கப் போய்விட்டார்கள். கொவிட்-19 மரணங்களும் சற்று ஓய்ந்திருந்தன.

இப்போது இரண்டாவது அலை மேலெழத் தொடங்கியிருக்கின்ற பின்னணியில் தொடர் மரணங்கள் பதிவாகி வருகின்றன. 21 மொத்த மரணங்களுள் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான முஸ்லிம்களின் மரணங்களும் உள்ளடங்குகின்றன. இவர்கள் அனைவரது ஜனாஸாக்களும் இஸ்லாமிய வழிமுறைகளுக்கு புறம்பாகவும், தனிமைப்படுத்தல் சட்ட விதிமுறைகளை அனுசரித்தும் எரிக்கப்பட்டுள்ளன.

இன்னும் எத்தனை உயிர்களை இலங்கை மக்கள் காவுகொடுக்கப் போகின்றார்கள் என்பது நிச்சயமில்லை. இதில் எத்தனை முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், இந்துக்கள் என்பதும் நமக்குத் தெரியாது. அத்துடன், இனிவரும் காலங்களில் ஒருவர் உயிரிழந்தால் அவரது உடலில் கொவிட்-19 தொற்று இருப்பது பின்னர் கண்டுபிடிக்கப்பட்டாலும் அவரது உடல் எரிக்கப்படக் கூடிய வாய்ப்பு இருக்கின்றது.

எனவேதான், ஜனாஸா எரிப்பு விவகாரத்தை அப்படியே கிடப்பில் போடாமல் அதற்கு ஆறுதலான நிரந்தர தீர்வொன்றை பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற உத்வேகம் மீண்டும் முஸ்லிம் சமூகத்திற்கு மத்தியில் ஏற்பட்டிருக்கின்றது.

அரசமைப்பின் 20ஆவது திருத்தத்திற்கு எதிரணியில் இருந்த 6 முஸ்லிம் எம்.பி.க்களும் ஆதரவளித்துள்ள நிலையில், ஜனாஸாக்களை புதைப்பதற்கான அனுமதியை வழங்குமாறு பல தரப்பிலும் கோரிக்கைகள் முன்வைக்கப்படுகின்றன. இந்நிலையிலேயே இவ்விவகாரம் இவ்வார அமைச்சரவையில் பேசப்பட்டிருக்கின்றது. நல்லது நடக்கும் என்ற நம்பிக்கைகள் முஸ்லிம்கள் மனதில் மீளத் துளிர்விட்டுள்ளன.

இக் கோரிக்கை பெரும்பாலும் முஸ்லிம்கள் தரப்பிலிருந்தே முன்வைக்கப்படுகின்ற போதும் இது உண்மையில் இஸ்லாமியர்களுக்கு மட்டுமானதல்ல என்பது கவனிப்பிற்குரியது. மரணித்தவர்களின் உடல்களை எரிக்கின்ற வழக்கமுள்ள மத நம்பிக்கையாளர்களைப் போலவே, புதைப்பதற்கு முன்னுரிமை அளிக்கும் கிறித்தவ, கத்தோலிக்க மக்களும் இந்நாட்டில் உள்ளனர். எனவே, புதைப்பதற்கு இடமளிக்கப்பட்டால் அவர்களின் மத உணர்வுகளிலும் கீறல் விழாமல் பாதுகாக்க முடியும்.

இங்கு ஒரு விடயத்தைக் கவனிக்க வேண்டும். அதாவது, கொவிட்-19 வைரஸ் என்பது நாட்டு மக்களின் பொதுவான சுகாதார பிரச்சினையாகும். எனவே அவ்வைரஸ் தாக்கத்தினால் உயிரிழக்கின்ற நபர் சார்ந்த சமூகம் அந்த உடலை புதைப்பதற்கு அனுமதி கோருகின்றது என்பதற்காகவோ, முஸ்லிம்களுக்கு நல்லெண்ணத்தை வெளிப்படுத்துவதற்காகவோ இத்தீர்மானத்தை எடுக்க முடியாது. அப்படிச் செய்தால் அதனால் ஏனைய இன மக்கள் குழப்படையலாம்.

எனவே, இது சுகாதார ஆய்வின் மூலமாக நிரூபிக்கப்பட்ட முடிவுகளின் அடிப்படையிலமைந்த தீர்மானமாக அறிவிக்கப்பட வேண்டும். எட்டு அடி ஆழத்தில் உயிரற்ற உடலைப் புதைக்கின்ற போது அதில் வைரஸ் உயிர் வாழ்வதற்கோ, நிலத்திற்கு கீழாக பரவுவதற்கோ எவ்வித வாய்ப்பும் இல்லை என்பதை அரசியல்வாதிகளோ இராணுவத்தினரோ அன்றி தொற்றுநோயியல் நிபுணர்கள் அறிக்கையிட வேண்டும். அதுவே ஏனைய இன மக்களும் ஏற்றுக் கொள்ளும் சுமுக தீர்வாக அமையும்.

இப்பணி அவ்வளவு கடினமானதல்ல. உலக சுகாதார அமைப்பு ஏற்கனவே தனது வழிகாட்டல் குறிப்புக்களில் இதனைக் குறிப்பிட்டுள்ளதுடன் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கமும் ஆழமாக புதைக்கலாம் என்று தெரிவித்துள்ளது. உலகில் இலங்கை போன்ற ஓரிரு நாடுகளைத் தவிர மற்ற எல்லா நாடுகளும் உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டலை மதித்து எந்த மதத்தவராயினும் அவர்கள் புதைப்பதற்கோ எரிப்பதற்கு அனுமதி அளிக்கின்றன.

ஆனால், நாட்டில் இப்போதிருக்கின்ற சிக்கலான அரசியல் சூழல், கொரோனா நோய் பற்றி பெரும்பான்மைச் சமூகத்திடம் உள்ள பயம் என்பவற்றை வைத்து நோக்குகின்ற போது, முஸ்லிம்களின் உடல்களைப் புதைப்பதற்கு சட்ட ரீதியான அனுமதியைப் பெறுவது என்பது, அவ்வளவு இலகுவான காரியமல்ல. அதற்கு மேலும் தடைகள் வரமாட்டாது என்று யாரும் சொல்ல முடியாது.

எனவே முஸ்லிம்கள் இவ்விவகாரத்தில் சுமுகமான, நிரந்தரத் தீர்வைப் பெற்றுக்கொள்ள தமக்கிடையே ஒன்றுபடுவது மட்டுமன்றி, முற்போக்கு தமிழ், சிங்கள சக்திகள் மற்றும் அரசியல்வாதிகளின் அனுசரணையையும் பெற வேண்டியிருக்கின்றது. விஞ்ஞானபூர்வமாகவும் அரசியல் நுட்ப ரீதியாகவும் அணுக வேண்டியுள்ளது.

வாழைப்பழத்;தில் ஊசி ஏற்றுவது போல மிகவும் பக்குவமாகவும் புத்திசாலித்தனமாகவுமே இவ்விடயத்தை கையாண்டாலேயே நல்லது நடக்கும்;. இல்லாவிட்டால், வெண்ணெய் திரண்டு வரும்போது தாளியை உடைத்தது போலாகிவிடலாம்.

மொஹமட் பாதுஷா

Tamilmirror