தேசிய உயர்க்கல்வி நிதிக் கழகத்திடம் (பி.டி.பி.டி.என்.) கடன் வாங்கிய 1.5 மில்லியன் பேரில், 422,609 பேர், அதாவது 28.17 விழுக்காட்டினர் மட்டுமே, கடந்த அக்டோபர் தொடங்கி கடன்களைத் திருப்பிச் செலுத்துகின்றனர்.
கடந்த ஏப்ரல் மாதத்தில் RM37.65 மில்லியனாக இருந்த கடன் வசூல், தற்போது RM103.03 மில்லியனாக அதிகரித்துள்ளது, இது 173.65 விழுக்காடு அதிகம் என பி.டி.பி.டி.என். ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
“கோவிட் -19 தொற்றுநோய் காரணமாக கடினமான சூழ்நிலையில் இருந்தபோதிலும், பி.டி.பி.டி.என். கடன் வாங்கியவர்கள் தங்கள் கடன்களைத் திருப்பிச் செலுத்த முயற்சிக்கின்றனர் என்பதை இது காட்டுகிறது. இது மற்றவர்களுக்கும் ஒரு முன்னுதாரணமாக இருக்க வேண்டும்,” என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையின்படி, கடனாளிகள் மீதுகொண்ட அக்கறையின் அடிப்படையில், அக்டோபர் முதல் டிசம்பர் வரை கடனைத் திருப்பிச் செலுத்தும் காலத்தை மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டிக்க அரசாங்கம் முன்பு ஒப்புக் கொண்டது.
பி.டி.பி.டி.என். கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கான கால தாமதம், 1.5 மில்லியன் கடன் வாங்கியவர்களுக்குப் பயனளித்துள்ளது என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.