கே.எல். மளிகைக் கடைகளில் மது விற்பனைக்குத் தடை – மஇகா வரவேற்கிறது

டிசம்பர் 15 முதல், நடைமுறைக்கு வரும் மதுபான உரிமங்கள் குறித்தப் புதிய வழிகாட்டுதல்களை அறிமுகப்படுத்த கோலாலம்பூர் மாநகர் மன்றம் (டி.பி.கே.எல்) எடுத்துள்ள முடிவை கூட்டரசுப் பிரதேச மஇகா வரவேற்றுள்ளது.

மேலும் இது, கோலாலம்பூரில் உள்ள மளிகைக் கடைகள், பல்வகை பொருள்கள் விற்கும் கடைகள் மற்றும் சீன மருந்துக் கடைகளில் மதுபான வகைகளை அடுத்த ஆண்டு அக்டோபர் முதல் விற்பனை செய்வதைத் தடைசெய்கின்றன.

வளர்ந்து வரும் நகரங்களில் ஒன்றான கோலாலம்பூரில் இந்தப் புதிய விதிமுறைகள் அவசியமானவை என்றும், மது அருந்துபவர்கள் சிலரின் பொறுப்பற்றத் தன்மையால் நிலவும் சமூகப் பிரச்சினைகளில் இருந்து தப்ப இது தேவை என்றும் கூட்டரசுப் பிரதேச மஇகா தகவல் பிரிவுத் தலைவர் டி பாலா குமரன் தெரிவித்தார்.

“இந்தப் பிரச்சினைக்கு ஒரு காரணம் என்னவென்றால், குடியிருப்பு பகுதிகளுக்கு அருகிலுள்ள கடைகளில், சம்சு அல்லது மதுபானங்களை மிகவும் எளிதாக வாங்கிவிடுகின்றனர். பெரியவர்கள் மட்டுமல்ல, ஒரு சில இளையர்களும் இந்த மதுபானத்திற்கு அடிமைகளாக உள்ளனர்.

“இதன் விளைவாக, அவர்களின் உடல்நலம் பாதிக்கப்படுவது மட்டுமல்லாமல், நாட்டின் தற்போதைய மாற்றம் மற்றும் வளர்ச்சியிலிருந்து அவர்கள் விலக்கப்பட்டு விடுகின்றனர்,” என்று அவர் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

சட்டவிரோத சம்சு மற்றும் மது விற்பனையை அகற்றுவதற்காக, மஇகா கடந்த சில தசாப்தங்களாகத் தீவிரமாகப் பிரச்சாரம் செய்து வருவதாகக் கூறியப் பாலகுமரன், தனது கட்சி இந்த முடிவை வரவேற்கிறது என்றார்.

“இதற்காக, முன்னாள் தேசியத் தலைவர் எஸ் சாமிவேலு தலைமையில், கட்சி டி.பி.கே.எல். மற்றும் தொடர்புடைய அமைச்சுகளுக்கு பல மனுக்களையும் வழங்கியுள்ளது,” என்று அவர் கூறினார்.