தமிழக கேரள எல்லையில் பதற்றம் தொடருகிறது!

தமிழக கேரள எல்லைப் பகுதிகளில் பதட்டம் இன்னமும் தணியவில்லை. சரியாக சொல்ல வேண்டுமெனில் தமிழகப் பகுதிகளில் போராட்டம் வலுத்துக் கொண்டிருக்கிறது. இங்கே நிலைமை இயல்பாகிவிட்டது, தாராளமாக வாருங்கள் என் கேரள அதிகாரிகள் கூறினாலும் கம்பம் பகுதி மக்கள் அதற்கு செவிமடுப்பதாகத் தெரியவில்லை.

கம்பம் பகுதியில் வாகனப் போக்குவரத்து முற்றிலுமாக தடைப்பட்டுள்ளது. உணவு விடுதிகள், கடைகள் அனைத்தும் மூடப்பட்டிருக்கின்றன.

தமிழ்நாட்டுப் பதிவெண் உடைய எவ்வாகனத்தையும் குமுளிக்குள் நுழையவேண்டாம் என கேரள மாநில காவல்துறையினரே திருப்பிவிடுகின்றனர்.

நான்கு நாட்களாக வாகனப் போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் வணிகர்கள், லாரி ஓட்டுநர்கள், சுமைதூக்குவோர் உட்பட பலருக்கு பெரும் இழப்பு என்றாலும் அதை கம்பம் பகுதியில் எவரும் பொருட்படுத்துவதாகத் தெரியவில்லை.

இப்பகுதி ஐய்யப்ப பக்தர்க்ள் கூட எத்தனை நாள் வேண்டுமானாலும் காத்திருக்கிறோம், பிரச்னைக்கு முதலில் தீர்வு காணட்டும் என்கின்றனர்.

தமிழக எல்லையை ஒட்டி அமைந்திருக்கும் குமுளியில் உள்ளவர்களோ, தேவையில்லாமல் புரளி கிளப்பப்படுகிறது என்றும், முதல் நாள் சம்பவங்களுக்குப் பிறகு, எல்லாம் இயல்பு வாழ்க்கை திரும்பிவிட்டன என்று கூறுகின்றனர்.

எனினும் பெயர் குறிப்பிடவிரும்பாத காவல்துறை உயர் அதிகாரி ஒருவர் எல்லைப் பகுதியில் இயல்பு நிலை திரும்ப இன்னும் இரண்டு மூன்று நாட்களாகலாம் என்றார்.