கோவிட் 19 : இன்று 1,472 புதியத் தொற்றுகள், ஒரு கையுறை தொழிற்சாலை திரளையில் மட்டும் பாதி

நாட்டில், இன்று மதியம் வரையில், 1,472 கோவிட் -19 புதியத் தொற்றுகளும், 3 மரணங்களும் பதிவாகியுள்ளதாகச் சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

புதிய வழக்குகளில் பாதி, சிலாங்கூர், கிள்ளானில் அமைந்துள்ள ‘டோப் க்ளோவ்’ கையுறை தொழிற்சாலை தொடர்ப்புடைய தெராத்தாய் திரளையிலிருந்து வந்தவை, அவை மாநிலத்தின் மொத்தப் புதிய வழக்குகளில், 87.3 % என்று சுகாதார தலைமை இயக்குநர் நூர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.

இன்று பதிவான மூன்று மரணங்களும் சபாவில் நேர்ந்தவை. ஆக, சபாவில் இத்தொற்றுநோய்க்குப் பலியானவர் எண்ணிக்கை 212, அதாவது தேசிய மொத்த மரண எண்ணிகையில் (363) 58.4 விழுக்காடு.

அவசரப் பிரிவில் 120 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர், அவர்களில் 44 பேருக்குச் சுவாசக் கருவியின் உதவி தேவைப்படுகிறது.

மலாக்கா, லாபுவான், திரெங்கானு, பஹாங், புத்ராஜெயா மற்றும் பெர்லிஸில் இன்று புதியத் தொற்றுகள் எதுவும் பதிவாகவில்லை எனச் சுகாதார அமைச்சு தெரிவித்தது.

மாநிலம் வாரியாகப் புதியத் தொற்றுகளின் எண்ணிக்கை :-

சிலாங்கூரில் 891, சபாவில் 267, நெகிரி செம்பிலானில் 146, ஜொகூரில் 68, பினாங்கில் 29, கோலாலம்பூரில் 26, கெடாவில் 21, பேராக்கில் 13, கிளந்தானில் 10 மற்றும் சரவாக்கில் 1.

மேலும் இன்று, 2 புதியத் திரளைகள் கண்டறியப்பட்டுள்ளன. அவை :-

வியூ கெலொம்போங் திரளை – சபா, கோத்தா கினபாலு & துவாரான் மாவட்டங்கள்; தாலாங் தாலாங் திரளை – சபா, கோத்தா கினபாலு மாவட்டம்.