தேசியத்தின் பெயரில் யாழில் கூடும் சில சுயநலவாதிகள்

மக்களை முட்டாள்களாக்கி, அவர்களின் தலையில் மிளகாய் அரைப்பது என்பது, உலகம் பூராகவும் ஆட்சியாளர்களினதும் அரசியல்வாதிகளினதும் நிலைப்பாடுகளில் ஒன்றாக இருக்கின்றது.

அதிலும், தேர்தல்களை இலக்கு வைத்து இயங்கும் அரசியல்வாதிகள், எவ்வளவுதான் தரம் தாழ்ந்த, ‘தகிடு தத்தங்களுக்கும்’ தயாராக இருக்கிறார்கள். இதற்கு அண்மைய உதாரணமாக, தமிழ்த் தேசிய கட்சிகளின் ஒருங்கிணைவைக் குறிப்பிடலாம்.

தமிழ்த் தேசிய அரசியல் பரப்பில், ஆரோக்கியமான எண்ணங்களையும் அதை நோக்கிய செயற்பாடுகளையும் வரவேற்பதற்கு, மக்கள் தயாராகவே இருக்கிறார்கள். ஆனால், அதற்கான வெளியை, அதிக சந்தர்ப்பங்களில் இல்லாமல் செய்வது, குறுகிய சுயநல நோக்குடைய அரசியல்வாதிகளும் அவர்களின் இணக்க சக்திகளும் ஆகும்.

முள்ளிவாய்க்கால் முடிவுகளுக்குப் பின்னரான கடந்த 11 ஆண்டுகளில், தமிழ் சிவில் சமூக அமையம், தமிழ் மக்கள் பேரவை என்று தொடங்கி, மக்களின் ஆதரவைப் பெற்ற தரப்புகள், ஒற்றைப்படையான சிந்தனைப் போக்கால், களத்திலிருந்து காணாமல் போயிருக்கின்றன. அவ்வப்போது, ஊடக அறிக்கைகளின் வழியாக, சில நாள்களுக்குத் தம்மை உயிர்ப்பித்துக் கொள்கின்றன.

அரசியல் கூட்டமைப்பாக, தமிழ்த் தேசிய கூட்டமைப்பும் குறிப்பிட்டளவு நம்பிக்கை இழப்பைச் சந்தித்து நிற்கின்றது. ஒரு கட்டத்தில், ஏக அங்கிகாரத்துக்கு அண்மித்த மக்கள் ஆதரவைப் பெற்றிருந்த தரப்பு, அதைப் பெருமளவு இழந்து, தோல்விகரமான கட்டமைப்பாக இன்று மாறி நிற்கின்றது.

கடந்த பொதுத் தேர்தலில், வடக்கு – கிழக்கு பூராவும் தமிழ்த் தேசிய கட்சிகள், பாரிய பின்னடைவைச் சந்தித்தன. அந்தப் பின்னடைவு, ஒரு தனித்த கூட்டமைப்புக்கோ கட்சிக்கோ உரியதாக அல்லாமல், ஒட்டுமொத்த தமிழ்த் தேசிய அரசியலுக்குமாக உணரப்பட்டது.

அப்படியான நிலையில், பின்னடைவுகளில் இருந்து மீண்டெழுவது என்பது, தவிர்க்க முடியாதது. அதை நோக்கிய கட்டமைப்பு உருவாக்கமாக, தமிழ்த் தேசிய கட்சிகள் பொது வேலைத் திட்டங்களுக்காக ஒருங்கிணைந்தன. சில கட்சிகளுக்கு அதில் உடன்பாடு இல்லாவிட்டாலும், ஊடக வெளி அழுத்தங்களால், அதில் இணைந்து கொண்டன. மாவை சேனாதிராஜா, இந்த ஒருங்கிணைவுக்காகக் கடந்த கால அரசியல் வேறுபாடுகளை மறந்து, அனைத்துத் தரப்புகளுடனும் பேசவும் செய்தார்; அப்படித்தான் அவர் காட்டிக் கொண்டார்.

ஆனால், தமிழ்த் தேசிய கட்சிகளின் ஒருங்கிணைவு என்பது, ஆரம்பம் முதலே குறுகிய நோக்கங்களைக் கொண்டவர்களின் கைகளுக்குள் சென்று சேர்ந்துவிட்டதோ என்கிற சந்தேகம் எழுந்திருந்தது. அதை அண்மைய நாள்களில் இடம்பெறும் சம்பவங்கள், எந்தவித சந்தேகமும் இன்றி நிரூபித்து வருகின்றன.

அதாவது, தமிழ்த் தேசிய கட்சிகளின் ஒருங்கிணைவு என்கிற பெயரில், தேர்தலில் தோல்வி அடைந்தவர்களும் வரவிருக்கின்ற மாகாண சபைத் தேர்தலை இலக்கு வைத்திருப்பவர்களும் இணைந்து நடத்துகின்ற நாடகம் என்பது, இப்போது வௌிப்பட்டு வருகின்றது. இதன் இயக்குநர்களாக, திரைக்கு முன்னாலும் பின்னாலும் பலர் இருக்கிறார்கள். ஆனால், மூத்த தலைவர்களில் ஒருவராகிய மாவை சேனாதிராஜா, எந்தவித சிந்தனையுமின்றி சுயநலவாதிகளின் ஏவலுக்கு ஆடத் தொடங்கி இருக்கின்றார். அந்தக் கட்டம், அரசியல் அறம் மறந்த நிலையில் அவர் இயங்குவதை, மீண்டும் மீண்டும் நிரூபிக்கின்றது.

கடந்த பொதுத் தேர்தல் காலத்தில், வேட்பாளர் தேர்வின் போது, மாவை நடந்து கொண்ட விதமும் தேர்தல் காலத்தில் ஒரே கட்சிக்குள் இடம்பெற்ற குத்து வெட்டுகளைக் கண்டும் காணாமல் இருந்தமையும், அவரைத் தேர்தலில் தோற்கடித்திருந்தது.

தமிழரசுக் கட்சியின் தலைமைத்துவத்திலிருந்து கூட, அவரை அசைத்துப் பார்க்கும் அளவுக்கு நிலைமை சென்றிருந்தது. அப்படியான நிலையில், அரசியல் அரங்கில் மீண்டும் தன்னை நிலை நிறுத்துவதற்காக, தமிழ்த் தேசிய கட்சிகளின் ஒருங்கிணைவு என்கிற விடயத்தை, மாவை கையாள எத்தனிக்கிறார்.

புதிய அரசமைப்புக்கான யோசனைகளை முன்வைப்பதற்கான குழுவொன்றை செவ்வாய்க்கிழமை (01) தமிழ்த் தேசிய கட்சிகளின் ஒருங்கிணைவு அறிவித்தது. குறித்த குழுவில், அரசமைப்புக் குறித்த பரந்துபட்ட அறிவுள்ள யாரும் உள்ளடக்கப்படவில்லை. அத்தோடு, அந்தக் குழுவிலுள்ள அனைவரும், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்கள்.

ஏற்கெனவே, தமிழ்த் தேசிய கட்சிகளின் ஒருங்கிணைவு என்கிற பெயரில், யாழ்ப்பாணத்திலுள்ள கட்சிகளே கூடிப் பேசுகின்றன; யாழ்ப்பாணத்துக்கு வெளியிலுள்ள யாரையும் உள்வாங்குகிறார்கள் இல்லை என்கிற குற்றச்சாட்டுகள் உண்டு.

அப்படியான நிலையில், அரசமைப்பு யோசனைகளுக்கான குழுவில், துறைசார் நிபுணரோ, வடக்கு – கிழக்கை உள்ளடக்கிய பிரதிநிதித்துவமோ இல்லை என்பது, தமிழ் மக்களின் தலையில் மிளகாய் அரைக்கும் வேலை என்பதைத் தவிர, வேறு எப்படிக் கொள்வது.

தேர்தல்களை இலக்கு வைத்து இயங்கும் அரசியல்வாதிகளுக்கு, தங்களின் மீதான ஊடகக் கவனம் மிக முக்கியமானது. தாங்கள் செய்யும் எல்லாமும், ஊடகங்களில் வெளிவர வேண்டும்; மக்கள் கவனிக்க வேண்டும் என்று நினைப்பார்கள்.

இலங்கையில் தேர்தல்களில், துரதிர்ஷ்டவசமாக தோல்வியடைந்தால், அவர்கள் மீதான ஊடகக் கவனம் என்பது குறைந்துவிடும். வேண்டுமென்றால், சொந்தமாக ஊடக நிறுவனங்களை வைத்திருந்தால், புதிது புதிதாக ஏதாவது செய்து ஊடகங்களில் செய்திகளை வௌிவரச் செய்யலாம்.

தமிழ்த் தேசிய கட்சிகளின் ஒருங்கிணைவு என்கிற பெயரில், அதற்குள் உள்வாங்கப்பட்டுள்ள பலரும், கடந்த பொதுத் தேர்தலில் படுமோசமாகத் தோல்வியைச் சந்தித்தவர்கள். அவர்கள் ஊடகக் கவனம் பெறும் நோக்கிலேயே, இவ்வாறான ‘குண்டுச் சட்டிக்குள் குதிரை ஓட்டும்’ செயற்பாடுகளை செய்துவருகிறார்கள் என்கிற முடிவுக்கு வர வேண்டி இருக்கின்றது.

ஏற்கெனவே தாயகத்திலும், புலம்பெயர் தேசங்களிலும் உள்ள தமிழ்த் தேசிய ஆதரவுத் தரப்பினரை உள்ளடக்கிய கட்டமைப்பொன்றை, உருவாக்கப் போவதாக மாவை ஊடகங்களிடம் அறிவித்திருந்தார். அதில், நவநீதம்பிள்ளை, ஜஸ்மின் சூகா உள்ளிட்டவர்களையும் உள்ளடக்குவது சார்ந்து பேசியிருந்தார். ஆனால், அப்போதும் அது, அடுத்த கட்டத்துக்கு வழி சொல்லாத ஊடக உரையாடலாகவே முடிந்தது. ஜஸ்மின் சூகா அவ்வாறான கட்டமைப்பொன்றில் இணையும் எண்ணமில்லை என்று அறிவித்தும் இருந்தார்.

அரசியல் என்பதே, எதிரும் புதிருமான தரப்புகளின் ஊடாடல்தான். ஆனால், ஒரே கட்சிக்குள் அல்லது, ஒரே கூட்டமைப்புக்குள் காணப்படும் குளறுபடிகளை, இன்னொரு கூட்டமைப்பை உருவாக்குவதன் மூலம் கட்டுப்படுத்த முடியும் என்று சிந்திப்பது அபத்தமானது.

மாவையும், தன்னை முன்னிறுத்திக் கொண்டு, இப்போது தமிழ்த் தேசிய கட்சிகள் ஒருங்கிணைப்பு என்கிற பெயரில் நிகழ்த்தும் நாடகமும் அதுசார்ந்ததுதான். தூர நோக்கற்ற சிந்தனைகளால் உருவாகும் எதுவும், இவ்வாறான பிற்போக்குத்தனமான வடிவங்களாகவே முடியும்.

ஏற்கெனவே பெரும் நம்பிக்கைகளோடு ஆரம்பிக்கப்பட்ட தமிழ் மக்கள் பேரவை, மக்களுக்கு பாரிய துரோகம் செய்து காணாமற்போனது. அதுவும் ஒரு சிலரின் தேர்தல் அரசியலுக்காக இயங்கி மறைந்தது. பேரவையை முன்னுதாரணமாகக் கொண்டு தமிழ்த் தேசிய கட்சிகளின் ஒருங்கிணைவு நாடகம் அரங்கேற்றப்படுகின்றது.

ஆனால், ஏற்கெனவே ‘சூடு’கண்டுவிட்ட மக்கள், அதை அவ்வளவு இலகுவாக நம்பிவிட மாட்டார்கள். அதுவும், ஒருங்கிணைவு நாடகத்தின் காட்சிகள் வெளிப்படையாகவே, சுயநல போக்கைக் கொண்டதாக இருக்கின்ற நிலையில், மக்கள் அதன் மேல் அக்கறை கொள்ளமாட்டார்கள்.

ராஜபக்‌ஷக்கள் கொண்டுவர நினைக்கும் அரசமைப்பு என்பது, அவர்களின் விருப்பு வெறுப்புகள் சார்ந்ததாகவே இருக்கும். அதில், யாருக்கும் மாற்றுக் கருத்துகள் இருக்க வாய்ப்பில்லை. இந்த மாதம் 31ஆம் திகதிக்கு முன்னராக, அரசமைப்புக்கான யோசனைகளை முன்வைக்குமாறு அரசாங்கம் விடுத்துள்ள கோரிக்கையானது, சும்மா ஒப்புக்கானது. சமர்ப்பிக்கப்படும் யோசனைகள் எதையும் அவர்கள் கண்டுகொள்ளவே போவதில்லை.

அப்படியான நிலையில், துறைசார் நிபுணத்துவம் இல்லாதவர்களும் தனித்த யாழ்ப்பாண அரசியல்வாதிகளும் இணைந்து, அரசமைப்பு யோசனைகளை முன்வைப்பதால், பெரிய பிரச்சினையில்லை என்று கடந்துவிடலாம்தான். ஆனால், அதன் யோசனைகள் உள்வாங்கப்படாவிட்டாலும், கடந்த காலங்கள் தோறும் தமிழ்த் தரப்புகள் முன்வைத்துள்ள அரசமைப்பு யோசனைகள் கவனம் பெற்று வந்திருகின்றன.

ஏனெனில், அவை பெரும்பாலும் தமிழ் மக்களின் உணர்வுகளை, அனைத்துப் பிரதேசங்களினதும் எண்ணப்பாடுகளை உள்வாங்கி, துறைசார் நிபுணர்களால் தயாரிக்கப்பட்டிருகின்றன. அவை, வெற்று ஆவணமாக இருந்தாலும் அவற்றுக்கென்று ஒரு தார்மீகம் இருகின்றது. அந்தத் தார்மீகத்தை தமிழ்த் தேசிய கட்சிகளின் ஒருங்கிணைவுக் குழு, தகர்க்கும் வேலைகளைச் செய்திருக்கின்றது.

-புருஜோத்தமன் தங்கமயில்

TamilMirrior