இலங்கை பொருளாதாரம் சரிவு: வரலாறு காணாத வீழ்ச்சியில் இருந்து மீளுமா தீவு தேசம்?

நிலையான மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பாரிய வீழ்ச்சியை நோக்கி இலங்கை நகர்ந்துள்ளதை இலங்கை தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிவரத் திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது.

2020ம் ஆண்டு இரண்டாம் காலாண்டில் இலங்கை மொத்த உள்நாட்டு உற்பத்தி 16.3 சதவீத வீழ்ச்சியை நோக்கி சரிவடைந்துள்ளதாக திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

2019ம் ஆண்டின் 2ஆவது காலாண்டில் பதிவான வளர்ச்சி வீதத்தின் 1.1 சதவீதத்துடன் ஒப்பிடும் போது, இலங்கை வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு மிகப் பெரிய வீழ்ச்சியை நாடு சந்தித்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கோவிட்-19 தாக்கத்திற்கு மத்தியில் உலகிலுள்ள பல நாடுகள் இவ்வாறான பொருளாதார சரிவை நோக்கி நகர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கோவிட்-19 தாக்கம் காரணமாக மார்ச் மாதம் 19ம் தேதி முதல் ஏப்ரல் மாதம் 20ம் தேதி வரை நாடு முழுமையாக முடக்கப்பட்டிருந்தது.

அதன் பின்னரான காலத்தில் நாட்டில் அமல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கு படிப்படியாக தளர்த்தப்பட்டாலும், மே மாதம் 26ம் தேதி வரை முக்கிய தொழில்துறைகள் மற்றும் வணிக இடங்கள் காணப்படும் கொழும்பு மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்களில் ஊரடங்கு தொடர்ந்தும் அமல்படுத்தப்பட்டிருந்தது.

சமூகத்திற்கு இடையில் கோவிட் தொற்று பரவாதிருக்கும் நோக்குடனேயே இந்த நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்திருந்தது.

அரசாங்கத்தின் இந்த நடவடிக்கை காரணமாக கோவிட் தொற்றை கட்டுப்படுத்த முடிந்த போதிலும், நாட்டின் பொருளாதாரம் மோசமான அளவில் பாதிப்பை எதிர்நோக்கியுள்ளது.

2019ம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் 1.1 சதவீதத்துடன் நேரான வளர்ச்சியுடன் ஒப்பிடும் போது, 2020ம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி 16.3 சதவீத மறையான வளர்ச்சியென மதிப்பிடப்பட்டுள்ளதாக திணைக்களம் தெரிவிக்கின்றது.

2020ம் ஆண்டின் 2வது காலாண்டில் நிலையான விலையில் இலங்கைக்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி 1,936,273 மில்லியனாக குறைந்து பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

2019ம் ஆண்டு இதே காலப் பகுதியில் இலங்கைக்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி 2,312,078 மில்லியனாக பதிவாகியுள்ளது.

இந்த ஆண்டில் 2வது காலாண்டில் நடப்பு விலையில் இலங்கைக்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி 3,012,013 மில்லியனாக குறைந்துள்ளதுடன், 2019ம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் 3,589,246 மில்லியனாக பதிவாகியுள்ளது.

இந்த நிலையில், இது மொத்த உள்நாட்டு உற்பத்தியின் மதிப்பில் நடப்பு விலை 16.1 சதவீத வீழ்ச்சி என அந்த திணைக்களம் குறிப்பிடுகின்றது.

குறித்த காலாண்டில் விவசாயத்துறை 9.7 சதவீத பங்களிப்பையும், கைத்தொழில் 24.8 சதவீத பங்களிப்பையும், சேவைகள் 61.2 சதவீத பங்களிப்பையும், உற்பத்திப் பொருட்கள் மீதான மானியங்கள் கழிக்கப்பட்ட வரிகள் 4.3 சதவீத பங்களிப்பையும் செய்துள்ளன.

இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வீழ்ச்சி மற்றும் பொருளாதார வீழ்ச்சி தொடர்பில் கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளியல்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் எம்.கணேஷமூர்த்தியிடம் பிபிசி தமிழ் வினவியது.

இலங்கை வரலாற்றில் இதுவரை இவ்வாறானதொரு வீழச்சி பதிவாகவில்லை என அவர் குறிப்பிடுகின்றார்.

இலங்கை எதிர்நோக்கியுள்ள பொருளாதார வீழ்ச்சியிலிருந்து மீள எழ வேண்டுமாயின், அதனை இரு விதமாக பார்வையிட முடியும் என அவர் கூறுகின்றார்.

தொலைத்தொடர்பு, தகவல் தொழில்நுட்பம், சில்லறை வர்த்தகம், உள்ளுர் விவசாயம் ஆகிய துறைகளினாலேயே நாடு தற்போது சற்றேனும் ஒரு வளர்ச்சியை நோக்கி உள்ளதாக அவர் குறிப்பிடுகின்றார்.

எனினும், குறித்த துறைகளின் வளர்ச்சியானது, நாட்டின் பொருளாதாரத்தை நேர் நிலைக்கு கொண்டு வருவதற்கான துறைகளாக கணிப்பிடமுடியாது எனவும் அவர் கூறுகின்றார்.

அதைவிடுத்து, சுற்றுலாத்துறை, ஆடை ஏற்றுமதித்துறை மற்றும் தேயிலை ஏற்றுமதித்துறை ஆகிய மூன்று துறைகளையும் வளர்ச்சி அடைய செய்வதன் ஊடாகவே இந்த பொருளாதார வளர்ச்சியை நோக்கி நகர முடியும் என அவர் குறிப்பிடுகின்றார்.

கோவிட் தொற்று உலகில் முழுமையாக இல்லாதொழிக்கப்படும் பட்சத்திலேயே, இலங்கை போன்ற நாடுகளுக்கு சாதகமான நிலைமை ஏற்படும் என அவர் தெரிவிக்கின்றார்.

எனினும், இப்போதைய சூழ்நிலையில் அது சாத்தியமாகாது என கூறிய அவர், எதிர்மறையான நிலைமையை குறைக்க கூடி சாத்தியம் மாத்திரமே காணப்படுவதாகவும் சுட்டிக்காட்டினார்.

இலங்கை இந்த ஆண்டில் பொருளாதார ரீதியில் வீழ்ச்சியை நோக்கியே நகர்ந்துள்ளதாகவும் சிரேஷ்ட விரிவுரையாளர் தெரிவிக்கின்றார்.

எனினும், இலங்கையில் 1977ம் ஆண்டு திறந்து விடப்பட்ட பொருளாதாரம், தற்போது மூடப்பட்டுள்ளதாக கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளியல்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் எம்.கணேஷமூர்த்தி குறிப்பிடுகின்றார்.

2021ம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட விவாதம் ஆரம்பிப்பதற்கு ஒரு நாளுக்கு முன்னர், ஐரோப்பிய ஒன்றியம் அறிக்கையொன்றை வெளியிட்டிருந்ததாகவும் அவர் நினைவூட்டினார்.

அந்த அறிக்கையில் ‘வர்த்தகம் என்பது ஒரு வழி பாதை அல்ல” என்ற வசனம் எழுதப்பட்டிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

அதன் அர்த்தமானது, ‘இலங்கை ஐரோப்பிய ஒன்றியத்திடமிருந்து பொருட்களை கொள்வனவு செய்யாது, ஆனால், உங்களுடைய பொருட்களை நாங்கள் கொள்வனவு செய்ய வேண்டும்” என்பதாகும் என அவர் கூறுகின்றார்.

இலங்கையின் முக்கிய ஏற்றுமதி துறையான ஆடைத் தொழில்துறைக்கு சவால் விடுக்கும் வகையில் ஏனைய நாடுகளும், குறித்த தொழில்துறையில் வளர்ச்சியை கண்டுள்ளதாக அவர் தெரிவிக்கின்றார்.

அதனால், மூடிய பொருளாதார கொள்கையை அரசாங்கம் கடைபிடிக்குமாக இருந்தால், வெளிநாடுகள் மாற்று திட்டங்களை நோக்கி நகரும் என அவர் குறிப்பிடுகின்றார்.

இலங்கையின் பொருளாதாரத்தை வளர்ச்சி அடைய செய்ய வேண்டும் என்றால், மூடிய பொருளாதார கொள்கையை கைவிட வேண்டியது அத்தியாவசியமானது என கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளியல்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் எம்.கணேஷமூர்த்தி தெரிவிக்கின்றார்.

BBC