அவசரகாலப் பிரகடனத்துக்குப் பதிலாக, முஹைதீன் இராஜினாமா செய்திருக்க வேண்டும் – அன்வர்

அவசர அறிவிப்பை முன்வைப்பதற்குப் பதிலாக பிரதமர் முஹைதீன் யாசின் இராஜினாமா செய்திருக்க வேண்டும் என்று பக்காத்தான் ஹராப்பான் தலைவர் அன்வர் இப்ராஹிம் தெரிவித்தார்.

பெரும்பான்மையான எம்.பி.க்களின் ஆதரவு தனக்கு இல்லை என்பதை உணர்ந்தபின், விவேகமான மற்றும் பொறுப்புள்ள பிரதமரால் எடுக்கப்பட வேண்டிய ஒரு நடவடிக்கை இது என்று அன்வர் கூறினார்.

“எம்.பி.க்களின் ஆதரவை இழந்ததால், தான் பதவி விலக நேரிடும் என்பதை அறிந்த முஹைதீன், தனது அதிகாரத்தைப் பாதுகாக்க அவசரகாலத் தீர்மானத்தைத் தேர்வு செய்தார்.

உண்மையில், கோவிட் -19 பரவலை, நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை (பி.கே.பி), நிபந்தனைக்குட்பட்ட பி.கே.பி. மற்றும் கூடுதல் நடவடிக்கைகள் மூலமும் மருத்துவ மற்றும் பாதுகாப்பு நிபுணர்களின் கருத்துக்களைக் கணக்கில் எடுத்துக்கொள்வதன் மூலமும் கட்டுப்படுத்த முடியும்.

முஹைதீன் பி.கே.பியை அறிவித்த 24 மணி நேரத்திற்குள், அவசரகாலத்தைப் பிரகடனம் செய்ததைக் குறிப்பிட்டு அன்வர் இவ்வாறு கூறினார்.

பல அம்னோ பிரதிநிதிகள் தேசியக் கூட்டணி (பிஎன்) அரசாங்கத்திற்கான ஆதரவை வாபஸ் பெற்றதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை அமைந்தது.

தேசிஉஅ முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர்கள், தெங்கு ரஸலீ ஹம்சா (குவா முசாங்), அஹ்மத் ஜஸ்லான் யாக்கூப் (மாச்சாங்) இவர்களைத் தொடர்ந்து, நேற்று பாடாங் ரெங்காஸ் எம்.பி. நஸ்ரி அஜீஸும் தேசியக் கூட்டணிக்கான தங்களது ஆதரவை மீட்டுக்கொண்டனர்.

இதற்கிடையில், இந்த அவசரக் காலத்தில், பெரும்பான்மை இருந்தபோதிலும் எதிர்க்கட்சி புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கான தடைகளை எதிர்கொள்ளும் என்ற கருத்து குறித்து பேசிய அன்வர், அது தவறான விளக்கம் என்று கூறினார்.

“எதிர்க்கட்சிகள் அகோங்கைச் சந்தித்து எம்.பி.க்களின் ஆதரவைக் காட்ட முடியும்,” என்றார் அவர்.