உகான் சென்றது உலக சுகாதார அமைப்பின் நிபுணர் குழு… கொரோனாவின் தோற்றம் குறித்து விசாரணை

நிபுணர் குழுவினரை ஏற்றிச் சென்ற பேருந்து

கொரோனாவின் தோற்றம் குறித்து ஆய்வு செய்வதற்காக உலக சுகாதார அமைப்பின் நிபுணர் குழு உகான் நகரில் முகாமிட்டுள்ளது.

பீஜிங்: கொரோனா வைரஸ், கடந்த 2019-ம் ஆண்டு சீனாவின் உகான் நகரில் கண்டறியப்பட்டது. அங்கு விலங்குகள், பறவைகள், ஊர்வனங்கள் ஆகியவற்றை உயிருடன் விற்கும் சந்தையில் இருந்து உருவாகி, மனிதர்களுக்கு பரவி இருக்கலாம் என்று உலகம் முழுவதும் பரவலாக கருதப்படுகிறது. ஆனால், இதை சீனா மறுத்து வருகிறது.

கொரோனா உருவானது எப்படி என்பது குறித்து பாரபட்சமற்ற, சுதந்திரமான, விரிவான விசாரணை நடத்த உலக சுகாதார அமைப்பு, 10 பேர் கொண்ட நிபுணர் குழுவை அமைத்துள்ளது. இந்த குழு, சீனாவின் உகான் நகருக்கு நேரில் சென்று விசாரணை நடத்த விரும்பியது. ஆனால், சீனா அதற்கு அனுமதி தராமல் இழுத்தடித்தது. இதற்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்தன. உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் ஆதனம், சீனாவின் செயல்பாடு குறித்து அதிருப்தி தெரிவித்தார்.

அதன்பின்னர் உலக சுகாதார அமைப்பின் நிபுணர் குழு வருகைக்கு சீனா அனுமதி அளித்தது. இதையடுத்து உலக சுகாதார அமைப்பின் 10 பேர் கொண்ட நிபுணர் குழு, இன்று சீனாவுக்கு சென்றது.

சீனாவின் உகான் நகரை அடைந்ததும், அவர்களை சீன அதிகாரிகள் சந்தித்து பேசினர். பின்னர் நிபுணர் குழுவினர் ஓட்டலுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளின்படி, அவர்கள் 2 வாரம் ஓட்டலில் தனிமைப்படுத்தப்பட உள்ளனர். அதன்பிறகே தங்கள் ஆய்வுப் பணியை தொடங்குவார்கள்.

malaimalar