பார்க் தோட்டம் ஓய்ந்தது

நுவரெலியா, கந்தப்பளை – பார்க் தோட்டத்தில்,  நேற்று (17) இரவு முதல் முன்னெடுக்கப்பட்டு வந்த பணிப்பகிஷ்கரிப்பும்  போராட்டமும் சற்று முன்னர் கைவிடப்பட்டது.

பார்க் தோட்ட முகாமையாளரை, வேறு ஒரு தோட்டத்துக்கு இடமாற்றம் செய்வதாகவும் அவர் இனி இந்தத் தோட்டத்துக்கு வரமாட்டார் என்றும் குறித்த தோட்டக் கம்பனி அறிவித்ததை அடுத்தே, இந்தப் போராட்டம் கைவிடப்பட்டது.

தோட்டக் கம்பனிக்கும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பிரதிநிதிகளுக்கும் இடையே இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் பின்னர், இந்த முடிவு எடுக்கப்பட்டது என, நாடாளுமன்ற உறுப்பினர், மருதபாண்டி ராமேஷ்வரன் தெரிவித்தார்.

இதையடுத்து, போராட்டத்தை தொழிலாளர்கள் கைவிட்டனர்.

எனினும், குறித்த முகாமையாளரின் பங்களாவில் உள்ள தனது உடமைகளை மாத்திரம் அவர் எடுத்துச் செல்வதற்கு, தோட்ட மக்கள் அனுமதி வழங்க வேண்டும் என்று கம்பனி கோரியுள்ளதாகவும் இத்தோட்டத்துக்கான புதிய முகாமையாளர். விரைவில் நியமிக்கப்படுவார் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

பார்க் தோட்ட முகாமையாளர் பெருந்தோட்டத் தொழிலாளர்களையும், பாராளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி ராமேஷ்வரனையும் தகாத வார்த்தைகளினால் பேசிய சம்பவத்தை அடுத்து, இந்த அமைதியின்மை ஏற்பட்டிருந்த போதிலும், தான் பிரயோகித்த வார்த்தைக்கு, முகாமையாளர் மன்னிப்புக் கோரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Tamilmirror