இலங்கை ஜனாதிபதிக்கு எதிராக சர்ச்சை புகார் கொடுத்த எம்.பி

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அம்பாறை மாவட்டத்தில் கடந்த சனிக்கிழமையன்று ஆற்றிய உரையின் மூலம் தனது உயிருக்கு அச்சுறுத்தல் விடுள்ளார் என பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவுக்கு கடிதமொன்றின் மூலம் புகார் அளித்துளளார் எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெனாண்டோ. தனக்கு தகுந்த பாதுகாப்பை தாமதமின்றி வழங்குமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஜனாதிபதியை அதிருப்திக்குள்ளாக்கும் விடயங்களை நான் தொடர்ந்து பேசினால், ‘நாயைப்போல்’ என்னை அவர் கொல்ல முடியும் என குறித்த உரையில் மிகத் தெளிவாக குறிப்பால் உணர்த்தியுள்ளார் என பொலிஸ் மா அதிபருக்கு எழுதியுள்ள கடித்தில் ஹரின் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த சனிக்கிழமையன்று அம்பாறை மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ,அண்மையில் எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெனாண்டோ நாடாளுமன்றில் அரசாங்கத்தையும் தன்னையும் விமர்சித்து பேசியதை நினைவுபடுத்தியதோடு, தன்னை ‘நந்தசேன’ என ஹரின் குறிப்பிட்டிருந்தாகவும் கூறினார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய ஜனாதிபதி, நந்தசேன கோட்டாபயவுக்கு இரண்டு பக்கங்கள் உள்ளதாகவும், பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக இருந்த கோட்டாபய ராஜபக்ஷவை பௌத்த மதருமார் கூட விரும்புவதாகவும், அந்த காலப்பகுதியில் தன்மீது குண்டுத்தாக்குதல் நடத்திய புலிகளின் தலைவர் பிரபாகரனை, கடைசியாக நந்திக்கடல் களப்பிலிருந்து நாயைப்போல் இழுந்து வந்ததாகவும் கூறியிருந்தார்.

ஜனாதிபியின் இந்த உரையே தனக்கு உயிர் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளதாக, பொலிஸ் மா அதிபருக்கு எழுதியுள்ள கடிதத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெனாண்டோ தெரிவித்துள்ளார்.

தேச துரோக, இனப்படுகொலை பயங்கரவாதிக்கும், நாடாளுமன்றத்தில் பேச்சுச் சுதந்திரத்துக்கான தனது அடைப்படை உரிமையை பயன்படுத்தும் உறுப்பினர் ஒருவருக்கும் இடையிலான வித்தியாசத்தைக் காண ஜனாதிபதி தவறி விட்டார் எனவும் அந்தக் கடிதத்தில் ஹரின் குறிப்பிட்டுள்ளார்.

‘பயங்கரவாதிகளுடன் நான் ஒருபோதும் தொடர்புபட்டதில்லை. தமிழ் மக்கள் வாக்களிப்பதைத் தடுப்பதற்காக பயங்கரவாதிகளுக்கு ஒருபோதும் நான் லஞ்சம் வழங்கியதில்லை, பொலிஸாரை கொன்று குவித்த கருணா அம்மானுடன் நான் உறவு வைத்துக் கொண்டதில்லை என்பதை ஜனாதிபதிக்கு நினைவுபடுத்த வேண்டும். இவை அனைத்துக்கும் மேலாக நான் இலங்கை பிரஜையாக உள்ளேன், எனக்கு வேறு நாடுகள் கிடையாது’ எனவும் தனது கடிதத்தில் ஹரீன் தெரிவித்துள்ளார்.

“ஜனாதிபதியை அதிருப்தியாக்கும் வகையில் நான் தொடர்ந்தும் பேசினால், என்னை நாயைப் போன்று கொல்ல முடியும் என, ஜனாதிபதி மிகத் தெளிவாக குறிப்பால் உணர்த்தியுள்ளார். இதனால் அவருடைய கடமையைத் தொடர்வதில் அவர் தோல்விடையந்துள்ளார். எனது உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளபோதும் அவரை அதிருப்திக்குள்ளாக்குவதாகக் கூறப்படும் விடயங்களை தொடர்வதன் மூலம், எனது கடமைகளை நான் மேற்கொள்ள வேண்டும்”.

“ஜனாதிபதியின் முதல் பெயரை கூறியமைக்காக அவர் கிளர்ந்தெழுந்தமை கண்டு, நான் திகைப்படைந்துள்ளேன். ஜனாதிபதியாக இருப்பவரை அவரது பெயர் அல்லது முதலெழுத்துக்களால்தான் நீண்டகாலமாக அழைக்கும் வழக்கம் உள்ளது.

‘ஜே.ஆர்’, ‘பிரேமதாஸ’, ‘டிபி’, ‘சந்திரிக்கா’, ‘மஹிந்த’, ‘மைத்திரி’ போன்ற பெயர்களைப் பயன்படுத்தியமைக்காக யாரும் கொலை அச்சுறுத்தலுக்குள்ளாகியதில்லை”.

“வன்முறையை நாடுமாறு ஜனாதிபதியை பௌத்த மதகுருமார் அறிவுறுத்தினார்கள் என்பதை, ஜனாதிபதி நிரூபிக்கும் வரையில் நம்புவது எனக்கு கடினமாக உள்ளது. ஒரு கத்தோலிக்கராக எனது புரிதல் என்னவென்றால்; பௌத்தம் – வன்முறையை தவிர்த்து, அமைதியை ஆதரிக்கிறது”.

“பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக ஜனாதிபதி இருந்தபோது, அவரை விமர்சித்த ஏராளமான ஊடகவியலாளர்கள், செயற்பாட்டாளர்கள், நாடாளுமுன்ற உறுப்பினர்கள் காணாமல் போயுள்ளனர் அல்லது படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என்பதை நான் அறிவேன்.

அச்சமின்றி தனது எண்ணங்களையும் கருத்துக்களையும் வெளிப்படுத்திய ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்க படுகொலை செய்யப்பட்டு சரியாக 12 ஆண்டுகளுக்குப் பிறகு, ஜனாதிபதி தனது துப்பாக்கிகளை என் மீது திருப்பியமை முரண்பாடாக இருக்கிறது” எனவும் ஹரின் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தனது உயிருக்கும், ஐக்கிய மக்கள் சக்தியை ஆதரித்த 2.8 மில்லியன் வாக்காளர்கள் சார்பாக, சுதந்திரமாகப் பேசும் தனது கடமைக்கும் ஏற்பட்டுள்ள கடுமையான அச்சுறுத்தலுக்கு எதிராக, தனக்கு போதுமான பாதுகாப்பை வழங்குவதற்கு உடனடி நடவடிக்கை எடுக்குமாறும், பொலிஸ் மா அதிபரை ஹரின் கேட்டுள்ளார்.

“ஒரு பயங்கரவாதிபோல் தூக்கிலிடப்படுவேன் என்கிற பயமின்றி, நான் விரும்புவதைச் சொல்வது எனது அடிப்படை உரிமையாகும்”.

“விக்ரமரத்ன, நீங்கள் இலங்கைக் குடியரசின் பொலிஸ் மா அதிபர் என்பதையும், நந்தசேன கோட்டாபய ராஜபக்ஷவின் தனிப்பட்ட பணியாளர் அல்ல என்பதையும் உங்களுக்கு நினைவுபடுத்துகிறேன். நாடாளுமன்ற உறுப்பினர்களின் உயிர்களையும், அவர்களின் கடமைகளை நிறுவேற்றுவதையும் பாதுகாக்குமாறு நான் கேட்பது தனிப்பட்ட அனுகூலமல்ல; அது – நீங்கள் சத்தியப் பிரமாணம் செய்த இலங்கையின் அரசியலமைப்பைப் பாதுகாப்பதற்கான உங்களின் கடமையாகும். சிவில் யுத்தம் முடிவடைந்த பின்னர் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் முதல் படுகொலையை மேற்பார்வை செய்த பொலிஸ் மா அதிபராக நீங்கள் நினைவில் இருக்க மாட்டீர்கள் என நான் நம்புகிறேன்”.

“நம்பத்தகுந்த வகையில் எனக்கு மரண அச்சுறுத்தல் வருகின்றமை இதுவே முதற்தடவையாகும். வன்முறை அச்சுறுத்தல் மற்றும் பயமுறுத்தலைப் பயன்படுத்தி, அரசியல் எதிராளி ஒருவர் என்னை அச்சுறுத்தியதும் இதுவே முதல் தடவையாகும்”.

“நான் மௌனமாக இருக்காமை காரணமாக – நான் கொல்லப்பட்டால், என்னைக் கொன்றுவிடுவேன் என்று மிரட்டிய ஒரே மனிதனின் உத்தரவின் பேரில்தான் இது நடந்திருக்கும் என்று, நான் கருத வேண்டியுள்ளது” எனவும் அந்த கடிதத்தில் ஹரீன் பெனாண்டோ தெரிவித்துள்ளார்.

BBC