’முறையான யோகா பயிற்சி, மூச்சுப் பயிற்சி கொரோனா பரவலைத் தடுக்கும்’

உலகை ஆட்டிப்படைத்துக்கொண்டிருக்கும் கொரோனா எனும் கொடிய வைரஸ் தொற்றிலிருந்து எம்மைப் பாதுகாப்பதற்கான ஓர் உபயாமாக யோகாவை தேர்ந்தெடுப்பதில் தவறில்லை. சாதாரண உடற்பயிற்சி, முறையான யோகா பயிற்சி, மேலும் முறையாகக் கற்றுக்கொண்ட மூச்சு பயிற்சி என்பன, கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் என்று, ரிதமிக் யோகா அகாடமியின் நிறுவுனரும் யோகா ஆசிரியரும் கட்டடக் கலை வரைவாளருமான (Civil Architecture Draftsman) டொனிஷா மயிலேந்திரன் தெரிவித்தார்.

தற்போதையச் சூழலில் யோகக் கலையின் அவசியம் பற்றி தமிழ்மிரருக்கு அவர் அளித்த விசேட செவ்வியின் முழுவடிவம் பின்வருமாறு,

கேள்வி; யோகக் கலையைப் பற்றிய சிறு அறிமுகத்தைகத் தரமுடியுமா?

‘எதிர்காலத்தில் யோகா கலையின் முக்கியத்துவம் உலகமே ஆராய்ந்து அறியும் அதன்பலன் அப்போது புரியும்’ என்ற கூற்றுக்கிணங்க, யோகாசனம் என்ற கலை, உலகம் முழுவதும் ஏராளமானோரால் பின்பற்றப்பட்டு வருகிறது.

முன்னோர்கள் அக்காலத்திலே அறிந்து ஆராய்ந்து தெளிவாக உணர்த்தி அளித்த அற்புதமான கலையே யோகா கலை.

2,000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த முனிவர்களான பதஞ்சலி மற்றும் திருமூலர் ஆகிய இருவரும் யோகக்கலையின் வளர்ச்சிக்கு பெரும்பங்காற்றியுள்ளனர்.

தங்களின் அனுபவத்தின் மூலம் கிடைத்த தகவல்களை, பாடல்களாகவும் சூத்திரங்களாகவும் அவர்கள் எழுதி வைத்தனர். அவையே இன்றுவரை கடைபிடிக்கப்பட்டு வருகின்றன.

யோகா தற்போதைய வாழ்க்கை முறைக்குத் தேவையான அறிவியல் பூர்வமான கலை ஆகும். இது நமது அன்றாட வாழ்க்கையில் இணைத்துக்கொள்வதற்காக ஏற்படுத்தப்பட்டது.

‘யோகம்’ என்ற வார்த்தை சமஸ்கிருத மொழியில் ‘யுஜ்’ என்ற வார்த்தையிலிருந்து வந்தது. இதன் பொருள் இணைதல், சேருதல், ஒன்றுபடுதல் (கலப்பது) ஆகும்.
அதாவது, உடல், உள்ளம், உணர்ச்சிகள் ஆகியவை இணைந்து

செயற்படத்தேவையான வழிமுறைகளைக் கொண்டதே ‘யோகம்’. யோகா  ஆரோக்கிய வாழ்க்கையையும் நல்ல மனிதத் தன்மையையும் ஒன்று சேர்த்து நம்முடைய உடல் நலத்தைப் பாதுகாத்து நோயிலிருந்து விடுபடும் வழிகளையும் நோய்வராமல் தடுக்கும் வழிகளையும் நமக்கு அளிக்கிறது.

கேள்வி; யோகக் கலையை ஏன் ஒருவர் பயில வேண்டும்? யாருக்கு யோகா மிகவும் அவசியமானது?

தற்போதைய கொரோனா அச்சுறுத்தல் காரணமாக யாருக்கு என்பதை விடுத்து, யோகா அனைவருக்கும் அவசியமானது என்று கூறலாம்.

நோய்கள் வராமல் குறைக்கலாம், தடுக்கலாம், மன அழுத்தத்தைக் குறைக்க மற்றும் மனதுக்கு அமைதியைக் கொடுப்பதிலும் யோகா முக்கிய பங்கு வகிக்கிறது. அவசர வாழ்வுக்கு அவசியமான கலை.

சாதி, மதம், இனம், மொழி, நாடு போன்ற பல்வேறு வேறுபாடுளைக் கடந்து அனைவருக்கும் பொதுவானதாக, உடல் மற்றும் மனதின் ஆரோக்கியத்துக்கு உறுதுணையாக இருப்பதே யோகா.

இது ஓர் உள்ளார்ந்த அறிவியலை தன்னூடே கொண்டுள்ளது. இதன்மூலம் தன்னைத்தானே புரிந்துகொள்ளக்கூடிய, சுயம் உணர்தல் என்ற நிலையை எளிதாக அடையலாம். ஆன்மாவுக்கு யோகா அத்தியாவசியமான ஒன்று. அது ஆன்மாவின் கருவிகளான உடல் மற்றும் மனதை ஒருங்கிணைக்கிறது.
யோகாவானது அறிவியலையும் ஆச்சரியப்பட வைக்கும் நுண்ணறிவு கொண்டதாக உள்ளது.

ஒருவரின் உடல், மனம், உணர்ச்சி, ஆற்றல் அல்லது சக்தி போன்ற அடிப்படை விடயங்கள் அனைத்திலும் யோகா, ஆரோக்கியமான வகையில் தன் ஆதிக்கத்தை செலுத்துகிறது.

கே; கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து தப்பிக்கொள்வதற்கு யோகாவை எவ்வாறு கையாளலாம்?

பதில்: யோகா நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து மூளையை சுறுசுறுப்பாக்குகிறது, மனதை அமைதிப்படுத்துகிறது, உடலில் ஒட்சீசனின் அளவை அதிகரிக்கிறது, இருமல், சளி மற்றும் ஆஸ்துமாவைத் தவிர்க்கிறது.
தினசரி யோகாவைச்; செய்வது நேர்மறை ஆற்றலைக் கொண்டுவருகிறது, மனச்சோர்வை சமாளிக்க உதவுகிறது மற்றும் மூளைக்கு சக்தியை அளிக்கிறது என்பதால் யோகா செய்வதால் பல நன்மைகள் உள்ளன. இது மட்டுமல்லாமல், மனதை அமைதியாக வைத்திருக்கவும் இது உதவுகிறது.

தினமும், பிராணயம் செய்வது அவசியம். பிராணயாமத்தில் பல நன்மைகள் உள்ளன. இது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது, மன அழுத்தத்தைக் குறைக்கிறது, நரம்புகள் மற்றும் தமனிகளைப் புதியதாக வைத்திருக்கிறது, ஆற்றலை சேமிக்கிறது, உடலில் இருந்து நச்சுகளை நீக்குகிறது.
எனவே சாதாரண உடற்பயிற்சி, முறையான யோகா பயிற்சி, மேலும் முறையாகக் கற்றுக்கொண்ட மூச்சு பயிற்சி கொரோனா வராமல் தடுக்கும்.

கே; யோகா, தியானம், மூச்சுப்பயிற்சி இவற்றுக்குரிய தொடர்புகளைக் கூற முடியுமா?

இவை மூன்றுமே யோகத்தின் அம்சங்கள். உடலுக்கு உடற்பயிற்சி –உயிருக்குத் தியானப் பயிற்சி மற்றும் மூச்சு பயிற்சி.

தியானம் : தி – பேரறிவு

யானம் – பயணம். தியானம் என்றால் பேரறிவை நோக்கியப் பயணம். இறைவனாகிய பேரறிவு, பெரும்சக்தி நம் இதயத்தில் வாழ்கிறது.
உடலை அசைத்து செய்வது யோகா. உடல் அப்படியே இருக்க மனதைக் கட்டுப்படுத்தி செய்வது தியானம். ஆசனங்கள் அனைத்துக்கும் மூலாதாரம் பிராணயாமம்.

கேள்வி; யூடியுப், யோகா சார்ந்த செயலிகளினூடாக யோகாவைப் பயில்வது சிறந்தது என கருதுகின்றீர்களா?

சிறந்தது என்று சொல்வதைவிட ஒரு முறையான குருவிடம் கற்று தெளிவாக யோகா நிலைகளைப் பற்றி அறிந்த பின் தொடரலாம்.

கேள்வி; இளம் வயதிலேயே ரிதமிக் அக்கடமி என்ற யோகா சார்ந்த கல்வி நிறுவனத்தை நடத்தி வருகின்றீகள். இவ்வாறான நிலையத்தை உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் எவ்வாறு எழுந்தது? இந்த நிறுவனத்தினூடாக நீங்கள் ஆற்றிய பணிகள் மற்றும் எதிர்கால இலட்சியத்தைப் பற்றிகூற முடியுமா?

10 வயதில் ஆரம்ப பயிற்சியை கொழும்பு இராமகிருஷ்ணமிஷன் பாடசாலையில் ஆரம்ப குருவான திருமதி யாழினி ஆசிரியரிடம் கற்றேன்.

தொடந்து 2007ஆம் ஆண்டு YLSD என்னும் இளைஞர் சங்கத்தால் நடத்தப்பட்ட யோகா போட்டியில் (Yoga challenge 2007 in Srilanka)  முதலிடத்தைப்பெற்றேன்.

பின்னர் ‘ஓம் கிரியா பாபாஜி யோகா ஆரண்ணியம்’ எனும் நாமத்தில் ஆச்சிரமங்களை அமைத்து யோகக்கலையை வளர்க்க அரும்பாடுபட்டவர்  ஸ்ரீ நல்லதம்பி ஆறுமுகம் ஐயா அவர்களிடமும் இக்கலையைக் கற்றுக் கொண்டேன்.

கொழும்பில் ‘அஷ்டாங்க யோகா மந்திர்’ என்னும் யோகாசனப் பயிற்சி நிலையத்தின் இயக்குநரான வியாச கல்யாண சுந்தரத்திடமும் அங்கு யோகா பயிற்சிவிப்பாளரான ராஜூ மோகனதாஸிடமும் இக்கலையை மேலும் வளர்த்துக்கொண்டு யோகா மற்றும் யோகா பணியாற்றல் செயற்பாடுகளிலும் ஈடுபட்டு கொழும்பில் இடம்பெற்ற 4 சர்வதேச யோகா தினங்களிலிலும் பங்கேற்றுள்ளேன்.

பின்னர் சுவாமி விவேகானந்தர் இந்திய கலாசார கொழும்பு மய்யத்தினூடாக யோகா புலமைப்பரிசில் (Yoga Scholarship)இல் தேர்வாகி Swami Vivekananda Yoga Anusandhana Samsthana எனும் இந்திய கல்லூரியில் யோகாக்கலையில் 2016இல் ஆசிரியர் பயிற்சி நெறியையும் நிறைவு செய்துகொண்டேன். (லுழபய ஐளெவசரஉவழசள’ ஊழரசளந லுஐஊஇ ஊலுயு ஐவெநசயெவழையெட.)
எனவே நான் முறையாக ஆசிரியர் பயிற்சி பெற்ற பின்னரே 2016இல் ‘ரிதமிக் யோகா அகாடமி’ (Yoga Instructors’ Course YIC, CYA International) எனும் பயிற்சி நிலையத்தை தனியாக ஆரம்பித்தேன்.

என்னோடு உபநிறுவனர்களான யோகி அமரேஷ் இராசரத்தினம் (இலங்கையில் யோகா ஆசிரியர் பயிற்சி நெறி முடித்தவர்’ (“Registered Yoga Teacher (RYT 200) at Yoga Alliance, USA” ) மற்றும் சஞ்ஜெய் (Accountant of RYA and RYA yogic food dietitian) மேலும் ரிதமிக் யோகா அகாடமியின் சிரேஷ்ட மாணவி டியோனி இரத்னம், அகடமியின் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் இவர்களோடு குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களின் ஆதரவோடு இணைந்து இந்நிறுவனத்தை நடத்தி வருகின்றேன்.

கொழும்பு, வத்தளை போன்ற பல்வேறு இடங்களிலும் யோகா வகுப்புகளையும் இலவச யோகா பயிற்சி பட்டறைகளையும் நடத்தி வருகின்றேன். மேலும் யோகா ஆசிரியர் பயிற்சி நெறியும் ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்று வருகிறது.

கேள்வி; யோகா பயிற்சி நெறியை தொடரவிரும்பும் மாணவர்களுக்கு தொழில்வாய்ப்புகளைப் பெற்றுக்கொள்வதற்கான வழிமுறைகள் குறித்து கூறுங்கள்?

யோகாவை ஒரு பாடமாக கற்கும் மாணவர்கள், தொழிற்றுறையில் பல்வேறு வேலைகளில் ஈடுபட முடியும். சுற்றுலா யோகா பயிற்றுவிப்பாளராக பணியாற்றலாம். யோகாவை கல்வித் திட்டத்தில் கொண்டுவருவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதால் அவர்கள் சுயாதீன யோகா ஆசிரியர்களாகவும், பள்ளிகளில் யோகா ஆசிரியர்களாகவும் மாறுவதற்கான வாய்ப்புகளும் உள்ளது.

கேள்வி; யோகா கலையில் டிப்ளோமா, கலைமானி, முதுமானி, கலாநிதி வரை செல்ல முடியுமா?

ஆம். யோகாவிலும் பொது கல்விபட்டம் நிலைகளைப் போலவே செல்ல வழிகள் உள்ளன. யோகாவிலும் டிப்ளோமா, இளங்கலை பட்டம், முதுகலை பட்டம்  முனைவர் பட்டங்கள் உள்ளன. எனது அறிவின்படி, யோகாவில் பட்டப்படிப்புகளை வழங்கும் இரண்டு பல்கலைக்கழகங்கள் உள்ளன, அதாவது பெங்களூரில் உள்ள சுவாமி விவேகானந்தா யோகா பல்கலைக்கழகம் (S-VYASA Yoga University, Bangalore India) Diplomam, BSc, MSc, PhD  வரை யோகா பட்டங்களை வழங்குகிறது.

அமெரிக்காவில் உள்ள மேரிலாந்து ஒருங்கிணைந்த சுகாதார பல்கலைக்கழகம் (Maryland University of Integrative Health) யோகா தெரபி (MSc in Yoga Therapy) எனும்  பட்டப்படிப்பை வழங்குகிறது.

கேள்வி; இலங்கையிலுள்ள பல்கலைக்கழகங்களில் யோகாவை ஒரு பிரிவாகக் கொண்டுவரலாமா? இவ்விடயத்தில் உங்களது ஆலோசனை என்ன?

ஆம்! நிச்சயமாக! தற்போது களனி பல்கலைக்கழகம் (University of Kelaniya) யோகா படிப்பில் டிப்ளோமா (Diploma in Yoga) வழங்குகிறது. அதேபோன்று இலங்கையில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களும் யோகாவை ஒரு பாடமாக வழங்கினால், அனைவருக்கும் யோகாவை சரியான வழியில் கற்கவும் பல்கலைக்கழக தர தகுதி பெறவும், யோகா ஆசிரியராகவும் இலங்கையில் அல்லது உலகளவில் யோகா தொடர்பான வேலை தேடவும் அனைவருக்கும் ஒரு சிறந்த வாய்ப்பாக இருக்கும்.

கேள்வி; உங்களது நிறுவனத்தினூடாக அவற்றை செய்வதற்கான எதிர்பார்ப்புகள் உள்ளனவா?

ஆம், சில உயர் கல்விப் படிப்புகளைக் கொண்டுவருவதற்கான திட்டங்கள் எங்களிடம் உள்ளன. நாங்கள் அதை உருவாக்கும் பணியில் இருக்கிறோம்.

கேள்வி; வணிகத்துறையில் சாதித்த பெண்களுக்காக, யோகா பயிற்சி நெறியொன்றை இம்மாதம் 16ஆம் திகதி நடத்தவுள்ளீர்கள். அதைப் பற்றி கூற முடியுமா?

ஆம், இது பெண்களுகாக ஆரம்பிக்கப்பட்ட புதிய முயற்சி, கொரோனா காலத்தில்  வீட்டிலும் வெளியேயும் என பாதிக்கப்பட்டவர்களில் பெண்களே அதிகம்.
சிறு வியாபார முயற்சிகளில் ஈடுபடுவர்கள், அல்லது தொழில் புரிந்துகொண்டு குடும்பத்தையும் கவனிக்கும் பெண்களுக்கான ஒரு ஊக்குவிப்புப் பயிற்சியான இந்தப் பயிற்சி நடைபெறவுள்ளது.

ஆர்வமுள்ள பெண்கள் இந்தப் பயிற்சியில் கலந்துகொள்ளலாம். ஜனவரி மாதம் 16ஆம் திகதி மாலை 3 மணியளவில் இந்தப் பயிற்சி இணையத்தளத்தினூடாக நடைபெறவுள்ளது.

க.ஆ.கோகிலவாணி

Tamilmirror