வவுனியா மாவட்டத்தில் உள்ள செட்டிக்குளம் – பேராறு வனப் பகுதியில் இலங்கை ராணுவத்தினர் நடத்திய துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார்.
இந்த சம்பவம் நேற்று முன்தினம் இரவு இடம்பெற்றதாக போலீஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்தது.
பேராறு வனப் பகுதியில் ராணுவம் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த தருணத்தில், ராணுவத்தை இலக்கு வைத்து மூவர் அடங்கிய குழுவொன்று துப்பாக்கி பிரயோகம் நடத்தியதாக போலீஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் கூறியது.
இதையடுத்து, ராணுவத்தினர் பதில் துப்பாக்கி பிரயோகத்தை நடத்தியதாகவும் போலீஸார் தெரிவித்தனர்.
ஆனால், தங்கள் மீது யாரும் துப்பாக்கிச் சூடு நடத்தவில்லை என்கின்றது ராணுவம்.
இந்த சம்பவத்தில் சந்தேகநபர் ஒருவர் காயமடைந்ததாகவும், அவர் செட்டிக்குளம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் போலீஸார் குறிப்பிட்டனர்.
துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்தவர் செட்டிக்குளம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
சம்பவத்தில் இருவர் தப்பிச் சென்றுள்ளதாகவும், தப்பிச் சென்றவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் போலீஸார் கூறுகின்றனர்.
செட்டிக்குளம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நபர், மேலதிக சிகிச்சைகளுக்காக வவுனியா போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
தப்பிச் சென்றதாக கூறப்படும் நபர் பதில்
இந்த நிலையில், தப்பிச் சென்றதாக கூறப்படும் நபர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்திருந்தார்.
தாம் ராணுவத்தின் மீது துப்பாக்கி பிரயோகம் நடத்தியதாக பாதுகாப்பு பிரிவினர் தெரிவித்துள்ள கருத்து போலியானது என காயமடைந்துள்ள பொனிபர் சனிடர்ஷ் பிகராடோ தெரிவிக்கின்றார்.
தாம் வனப் பகுதிக்குள் மரங்களை வெட்டுவதற்காக சென்றதாக அவர் குறிப்பிடுகின்றார்.
கடும் மழையுடனான வானிலை நிலவியமையினால், வெட்டிய மரங்களை கொண்டு வர முடியாத நிலைமை ஏற்பட்டதாக அவர் கூறுகின்றார்.
இதையடுத்து, வெட்டிய மரங்களை அங்கேயே வைத்து விட்டு, தாம் வீடு திரும்பிய வேளையில், வனப் பகுதிக்குள் ராணுவம் பிரவேசித்ததாக அவர் தெரிவிக்கின்றார்.
ராணுவத்தை கண்ட தாம் அச்சத்தில் கலைந்து செல்ல முயற்சித்த போது, தம்மை நோக்கி அவர்கள் துப்பாக்கி பிரயோகம் நடத்தியதாக அவர் குறிப்பிடுகின்றார்.
இந்த சம்பவம் நேரும் போது, தம்மிடம் எந்தவொரு பொருளும் இல்லாத நிலையில், தாம் ராணுவத்தை நோக்கி துப்பாக்கி பிரயோகம் நடத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாக அவர் கூறுகின்றார்.
KOGULAN
மரம் வெட்டிய குற்றச்சாட்டு சுமத்தப்பட்டால், அதனை தாம் ஏற்றுக்கொள்வதாகவும், துப்பாக்கி பிரயோகம் நடத்தியதாக கூறப்படும் குற்றச்சாட்டை தாம் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை எனவும் அவர் குறிப்பிடுகின்றார்.
இலங்கை ராணுவம் என்ன சொல்கிறது?
இந்த விடயம் தொடர்பில் பிபிசி தமிழ், ராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் நிலந்த பிரேமரத்னவை தொடர்பு கொண்டு வினவியது.
எந்தவொரு நபருக்கும் செல்ல அனுமதிக்கப்படாத இடத்தில், சந்தேகத்திற்கு இடமான நபர்கள் நடமாடிய நிலையிலேயே, ராணுவம் துப்பாக்கி பிரயோகம் நடத்தியதாக அவர் குறிப்பிடுகின்றார்.
குறித்த வனப் பகுதியில் சாதாரண ஒருவருக்கு நடமாடுவதற்கான எந்தவொரு தேவையும் கிடையாது என அவர் கூறுகின்றார்.
சட்டவிரோத நடவடிக்கைகளை மேற்கொள்ளும் நோக்குடனேயே அவர்கள் வனப் பகுதிக்குள் சென்றுள்ளதாகவும் அவர் தெரிவிக்கின்றார்.
ராணுவத்தின் மீது துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டதாக போலீஸார் வெளியிட்ட தகவல் குறித்தும், பிபிசி தமிழ், ராணுவ ஊடகப் பேச்சாளரிடம் வினவியது.
சந்தேகநபர்கள் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் துப்பாக்கி பிரயோகம் நடத்தவில்லை என அவர் குறிப்பிட்டார்.
எவ்வாறாயினும், இந்த விடயம் தொடர்பில் தொடர்ந்தும் விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாக அவர் கூறுகின்றார்.
சம்பவத்தில் காயமடைந்த நபரை ராணுவத்தினரே மருத்துவமனையில் அனுமதித்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
ராணுவத்தினர் வேண்டுமென்றே துப்பாக்கி பிரயோகம் நடத்தியதாக வெளியாகியுள்ள செய்தியை தாம் நிராகரிப்பதாகவும் அவர் தெரிவிக்கின்றார்.
எவ்வாறாயினும், இந்த சம்பவம் தொடர்பில் போலீஸார் மற்றும் ராணுவத்தினர் இணைந்து விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக ராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் நிலந்த பிரேமரத்ன தெரிவிக்கின்றார்
bbc