இந்த மார்ச் மாதம் தொடங்கி, பள்ளி அமர்வுகள் கட்டங்கட்டமாகத் துவங்கும் எனக் கல்வி அமைச்சர் ராட்ஸி ஜிடின் இன்று அறிவித்தார்.
பாலர்பள்ளி, முதலாம் மற்றும் இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கான பள்ளி அமர்வுகள் மார்ச் 1-ஆம் தேதி தொடங்கும்.
மூன்றாம், நான்காம், ஐந்தாம் மற்றும் ஆறாம் ஆண்டு மாணவர்களுக்கானப் பள்ளி அமர்வுகள் மார்ச் 8-ஆம் தேதி தொடங்குகின்றன.
இடைநிலைப் பள்ளி மாணவர்களுக்கான பள்ளி அமர்வு ஏப்ரல் 4 மற்றும் 5-ம் தேதிகளில் தொடங்கும்.
பாலர்பள்ளி, முதலாம் மற்றும் இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கானப் பள்ளி அமர்வுகளை முதலில் தொடங்குவதற்கான கல்வி அமைச்சின் முடிவு, அவர்களுக்குச் செந்தர இயங்குதல் நடைமுறைகளை (எஸ்.ஓ.பி.) அறிமுகப்படுத்துவதற்காக என்று ராட்ஸி கூறினார்.
“ஜொகூர், கிளாந்தான் மற்றும் திரெங்கானு ஆகிய மாநிலங்களில் இடைநிலைப்பள்ளிகளுக்கான நேருக்கு நேர் வகுப்புகள் ஏப்ரல் 4-ல் தொடங்கும்.
“மற்ற மாநிலங்களைப் பொறுத்தவரை, பள்ளி அமர்வு ஏப்ரல் 5-ஆம் தேதி தொடங்கும்.
“இடைநிலைப்பள்ளி மாணவர்கள், பள்ளித் தவணை விடுமுறை முடிந்தவுடன் பள்ளிக்குத் திரும்புவார்கள்,” என்று அவர் இன்று சிறப்பு செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.
இதற்கிடையில், மாணவர்கள் பள்ளிக்கு வெளியே இருக்கும்போது எஸ்.ஓ.பி.களுக்கு இணங்குவதை உறுதி செய்யுமாறு ராட்ஸி பெற்றோரிடம் வேண்டுகோள் விடுத்தார்.
கல்வியமைச்சு எதிர்கொள்ளும் சவால்களில் ஒன்று, பள்ளி அமர்வு முடிந்தபின்னர் மாணவர்கள் கலைந்து செல்வது என்று அவர் கூறினார்.