இலங்கை ஈஸ்டர் தாக்குதல்: ‘தற்கொலை குண்டுதாரிகளாக தயாரான 15 பெண்கள்’

படக்குறிப்பு,

ஏப்ரல் 21, 2019 அன்று நடந்த ஈஸ்டர் தாக்குதலில் 8 தற்கொலை குண்டுத்தாரிகள் உள்ளடங்களாக சுமார் 277 பேர் இறந்ததாக இலங்கை அரசு கூறுகிறது.

இலங்கையில் 2019ம் ஆண்டு நடத்தப்பட்ட ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் நடத்தப்பட்டு வருகின்ற விசாரணைகளின் ஊடாக பல்வேறு தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.

இந்த நிலையில், ஈஸ்டர் தாக்குதல் நடத்தப்பட்டு ஒரு வருடமும் 10 மாதங்களும் கடந்துள்ள பின்னணியில், நேற்று முன்தினம் யுவதியொருவர் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மாவனெல்ல பகுதியைச் சேர்ந்த 24 வயதாகும் இளம்பெண் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி போலீஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் போலீஸ் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ள நிலையில் பல்வேறு முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில், ஈஸ்டர் தாக்குதலுக்கு முன்னராக காலப் பகுதியில், குண்டுத் தாக்குதலை நடத்திய முக்கிய சூத்திரதாரியான சஹரான் ஹாஷிமால் இனவாத கருத்துகளை பரப்பும் வகையிலான வகுப்புக்கள் நடத்தப்பட்டமை தொடர்பிலான தகவல்களை இந்த யுவதி வெளியிட்டுள்ளார்.

இதன்படி, கத்தான்குடி பகுதியில் 2018ம் ஆண்டு டிசம்பர் மாதம் சஹரான் ஹாஷிமால் நடத்தப்பட்ட வகுப்புகளில் 15 பெண்கள் கலந்துகொண்டிருந்தமை தொடர்பிலான தகவல் கிடைத்துள்ளதாக போலீஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவிக்கின்றார்.

இவ்வாறு வகுப்புக்களில் கலந்துகொண்ட யுவதியே, கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.

தான் உள்ளிட்ட மேலும் 14 பெண்கள், குறித்த வகுப்பில் கலந்துண்டிருந்ததாக கைது செய்யப்பட்ட யுவதி வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

இந்த நிலையில், இறுதி நாள் வகுப்புக்களின் போது, குறித்த 15 பெண்களும் தற்கொலைதாரிகளாக மாறுவதாக, சஹரான் ஹாஷிமிடம் உறுதிமொழி வழங்கியுள்ளதாக, கைது செய்யப்பட்ட யுவதியிடம் நடத்தப்பட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகவும் போலீஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண குறிப்பிட்டார்.

இந்த 15 பெண்களின் 5 பெண்கள், 2019ம் ஆண்டு ஈஸ்டர் தாக்குதலுக்கு பின்னரான காலப் பகுதியில் சாய்ந்தமருது பகுதியில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதலில் உயிரிழந்துள்ளமை குறித்து தகவல் கிடைத்துள்ளதாக அவர் கூறுகின்றார்.

இந்த 5 பெண்களும், சாய்ந்தமருது பகுதியில் குண்டை வெடிக்கச் செய்து, தற்கொலை செய்துக்கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அதேவேளை, ஏனைய 10 பெண் சந்தேகநபர்களும் தற்போது கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவிக்கின்றார்.

இந்த 10 பேரில் 3 பெண் சந்தேகநபர்களும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும், எஞ்சிய 7 பெண் சந்தேகநபர்களும் பயங்கரவாத தடுப்பு பிரிவின் தடுப்பு காவலில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

”பைஅத்” என கூறப்படும் தற்கொலை குண்டுத் தாக்குதலுக்கான உறுதிமொழியை பெற்றுக்கொண்டமையே தொடர்பிலான தகவல்களே, இந்த யுவதியிடமிருந்து கிடைத்த மிக முக்கியமான தகவல் என போலீஸ் ஊடகப் பேச்சாளர் கூறுகின்றார்.

”இந்த வகுப்பில் கலந்துகொண்டதன் பின்னர், அந்த பெண்களினால் பைஅத் என கூறப்படும் உறுதிமொழியை சஹரான் பெற்றுக்கொண்டுள்ளமையே விசாரணைகளின் ஊடாக கிடைத்த மிக முக்கியமான தகவல். எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தற்கொலை குண்டுத் தாக்குதலை நடத்துவதற்கு தாம் தயார் என்பதை உறுதிப்படுத்துவதே பைஅத் எனப்படும் உறுதிமொழிக்கான அர்த்தமாகும்” என போலீஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி போலீஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவிக்கின்றார்.

ஈஸ்டர் தாக்குதல் – இதுவரை நடந்தது என்ன?

2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ம் திகதி இலங்கையில் பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது.

பட மூலாதாரம்,EPA

கிறிஸ்தவ தேவாலயங்கள், நட்சத்திர ஹோட்டல்களை இலக்கு வைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது.

இந்த தாக்குதல்களில் 8 தற்கொலை குண்டுத்தாரிகள் உள்ளடங்களாக சுமார் 277 பேர் உயிரிழந்திருந்தனர்.

அத்துடன், இந்த தாக்குதல் சம்பவத்தில் 400ற்கும் அதிகமானோர் காயமடைந்திருந்ததாக ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை நடத்திய நாடாளுமன்றத் தெரிவுக்குழு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த தாக்குதல் தொடர்பில் அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்ட விசேட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை, தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் அண்மையில் கையளிக்கப்பட்டிருந்தது.

எவ்வாறாயினும், இந்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை இதுவரை வெளியிடப்படாத நிலையில், அறிக்கையை வெளியிடுமாறு பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இவ்வாறான பின்னணியில், ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை நடத்திய ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையை ஆராய்வதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது

இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள பரிந்துரைகளை ஆராய்ந்து, அதனை நடைமுறைப்படுத்தும் விதம் குறித்து அறிக்கையிடுவதற்காகவே இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது.

இந்த குழுவின் தலைவராக ராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்ஷ நியமிக்கப்பட்டுள்ளார்.

குழுவின் உறுப்பினர்களாக அமைச்சர்களான ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ, உதய கம்மன்பில, ரமேஷ் பத்திரண, பிரசன்ன ரணதுங்க, ரோஹித்த அபேகுணவர்தன ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்த குழுவின் அறிக்கையை 2021ம் ஆண்டு மார்ச் மாதம் 15ம் தேதிக்கு முன்னர் கையளிக்குமாறு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார்.

தகவல் BBC