இலங்கை போரில் தமிழீழ விடுதலை புலிகள், அரசு படைகளின் மனித உரிமை மீறல்கள்: ஐ.நா-வில் புதிய தீர்மானம்

காணாமல் போன தங்கள் உறவினர்கள் பற்றி இன்னும் பல தமிழர்களுக்கு தகவல் எதுவும் இல்லை

இலங்கையில் 26 ஆண்டு காலமாக நடந்த கொடூரமான உள்நாட்டுப் போரில் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்களை பொறுப்பேற்கச் செய்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்க வேண்டும் என, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையத்தில் கொண்டு வரப்பட்டுள்ள புதிய தீர்மானத்தை எதிர்கொள்கிறது இலங்கை அரசு. பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள், இந்த தீர்மானத்தின் வரைவை வெளியிட்டுள்ளன.

இந்த வரைவு, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையத்தின் நான்கு வார வசந்த கால கூட்டத் தொடரின் இறுதியில் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வசந்த கால கூட்டத் தொடர் திங்கட்கிழமை முதல் ஜெனீவாவில் தொடங்கியுள்ளது.

இலங்கையில் நடந்த போரில் இலங்கை அரசுப் படை மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு என இரு தரப்பினரும் மோசமான அடாவடிச் செயல்களில் ஈடுபட்டதாகக் குற்றம் சுமத்தப்படுகிறது. இப்போரில் குறைந்தபட்சம் 1,00,000 பேர் கொல்லப்பட்டனர்.

“இலங்கை உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்டவர்கள் அனைத்து சமூகத்தவர்களும், தங்கள் அன்பிற்குரியவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டுமெனக் காத்திருக்கிறார்கள். போரினால் ஏற்பட்ட பின்விளைவுகளையும், முரண்களையும் எதிர்கொண்டு வருகிறார்கள்” என பிரிட்டனின் தெற்காசிய மற்றும் காமன்வெல்த் நாடுகளுக்கான இணை அமைச்சர் லார்ட் அஹ்மத் கூறியுள்ளார்.

ஜெர்மனி, கனடா உள்ளிட்ட ஆறு நாடுகள், இலங்கை மீதான பிரிட்டனின் முன்னெடுப்பின் முக்கிய நாடுகளாக இருக்கின்றன.

இலங்கையில் உள்ள எல்லா இனக் குழு மற்றும் பல்வேறு நம்பிக்கை கொண்ட குழுவினர் அமைதியாகவும், சமாதானத்தோடு நல்லிணக்கமாகவும் வாழ இந்தத் தீர்மானம் ஒரு முக்கிய முன்னெடுப்பு எனக் கூறினார் லார்ட் அஹ்மத்.

இலங்கை அரசு மற்றும் விடுதலைப் புலிகளுக்கு இடையில் நடந்த இறுதிக் கட்டப் போரில், இலங்கை அரசு விடுதலைப் புலிகளை நசுக்கிவிட்டது. போரின் இறுதிக் கட்டத்தில் 40,000-க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டதாக ஐ.நா மற்றும் பிற தொண்டூழிய அமைப்புகள் மதிப்பிடுகின்றன.

இதில் தமிழ் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் அதிகம் எனவும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இப்போரில் இலங்கை அரசு மற்றும் விடுதலைப் புலிகள் என இரண்டு தரப்புமே மோசமான அடாவடிச் செயல்களில் ஈடுபட்டதாக ஐ.நா மனித உரிமைகள் ஆணையம் குற்றம் சுமத்தி இருக்கிறது.

படக்குறிப்பு,

இறுதிப்போரின்போது சுமார் 1,50,000 பேர் கடலோரப் பகுதிகளில் சிக்கியிருந்ததாக கணிக்கப்பட்டுள்ளது.

பல்லாயிரக் கணக்கானோர் இந்தப் போர் காலத்தில் காணாமல் போய்விட்டனர். இலங்கை அரசுக்கு எதிராகப் போராடிய தமிழ் மக்கள், இலங்கையிடம் சரணடைந்தவர்கள் அல்லது பிடிபட்டவர்கள் காணாமல் போனதற்கு, இலங்கை அரசுப் படையினர் மீது குறை கூறப்பட்டது.

அப்போதிலிருந்து, கொல்லப்பட்ட அல்லது காணாமல் போன தமிழர்களின் குடும்பம் நீதிகேட்டும், சம்பந்தப்பட்டவர்கள் பொறுப்பேற்க வேண்டும் எனவும் கோரி வருகிறார்கள். ஆனால் இலங்கை அரசோ தமிழ் மக்கள் காணாமல் போனதற்கு, தான் பொறுப்பல்ல என தன் மீதான குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து மறுக்கிறது.

சர்வதேச அளவிலான அழுத்தத்தினால், கடந்த 2015-ம் ஆண்டு போர் குற்றம் மற்றும் விதிமீறல்களை, வெளிநாட்டு நீதிபதிகளைக் கொண்டு விசாரிக்க ஒப்புக் கொண்டது இலங்கை அரசு. இது ஐ.நாவின் மனித உரிமைகள்ஆணைய தீர்மானத்தின் ஒரு பகுதியாக முன்னெடுக்கப்பட்டது.

ஆனால் தற்போதைய இலங்கை அதிபர் கோட்டாபய ராஜபக்‌ஷ, சிங்களப் பெரும்பான்மை வாக்குகளைக் கொண்டு தேர்தலில் வெற்றி பெற்ற பின், இந்த ஐநா மனித உரிமைகள் சபையின் தீர்மானத்தில் இருந்து, கடந்த பிப்ரவரி 2020-ல் பின்வாங்கினார். “இலங்கைப் போர் நாயகர்களுக்கு துரோகம் இழைப்பதை ஒரு முடிவுக்குக் கொண்டு வருவேன்” எனக் கடந்த ஆண்டு தன் ஆதரவாளர்களிடம் மீண்டும் உறுதி கூறினார் கோட்டாபய ராஜபக்‌ஷ.

மகிந்த ராஜபக்‌ஷ 2005 – 2015 வரை இலங்கை அதிபராக இருந்த போது, அவருக்குக் கீழ் பாதுகாப்புத் துறைச் செயலர் என்கிற வலுவான பதவியில் இருந்து கொண்டு உள்நாட்டுப் போரை தலைமை தாங்கி நடத்தினார் கோட்டாபய ராஜபக்‌ஷ. தன் உத்தரவின் பெயரில் போர்க் குற்றங்கள் நடந்தது என்கிற குற்றச்சாட்டை மறுக்கிறார் கோட்டாபய.

பட மூலாதாரம்,REUTERS

“இலங்கையின் அரசியலமைப்புச் சட்டத்துக்கு உட்பட்டு பொறுப்பு ஏற்கச் செய்வதை இலங்கை அரசு எதிர்க்கவில்லை. ஆனால் இலங்கையின் அரசியலமைப்பு, வெளிநாட்டு நீதிபதிகள் விசாரிக்க வாய்ப்புகளை வழங்கவில்லை” என இலங்கையின் வெளியுறவுத் துறை அமைச்சர் தினேஷ் குணவர்தன பிபிசியிடம் கூறியுள்ளார்.

“இலங்கை இறுதிப் போர் முடிந்து கிட்டத்தட்ட 12 ஆண்டுகளுக்குப் பிறகும், இலங்கையில் சமாதானம் மற்றும் நல்லிணக்க நடவடிக்கைகள் தொடர்ந்து தோல்வி அடைந்து வருகின்றன. இது சூழலை மேலும் மோசமாக்குகிறது. பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு அமைப்புகளின் மீதிருக்கும் அவநம்பிக்கையை அதிகரிக்கச் செய்கிறது” எனக் கூறியுள்ளார் ஐ.நா மனித உரிமைகள் ஆணையர் மிஷெல் பாசெலேட். இவரின் அறிக்கை இந்த வாரத்தில் ஐநா சபைக் கூட்டத்தில் சமர்பிக்கப்படும்.

“இலங்கையில் நிலவும் எதார்த்த கள சூழலும், ஐநா மனித உரிமைகள் ஆணையரின் அறிக்கையும் வெவ்வேறாக இருக்கின்றன. எனவேதான் இலங்கை அரசு, ஆணையரின் அறிக்கையை தகுந்த ஆதாரங்கள் மற்றும் விரிவான அறிக்கைகளோடு மறுத்தது” எனக் கூறியுள்ளார் வெளியுறவுத் துறை அமைச்சர் தினேஷ் குணவர்தன.

தற்போதைய இலங்கை அரசின் கீழ், போர் காலத்தில் நடந்த குற்றங்களுக்கு நீதி கேட்கும் செயற்பாட்டாளர்கள் அச்சுறுத்தலுக்கு ஆளாகிறார்கள் என மனித உரிமைகள் குழுவினர் கூறுகின்றனர்.

“இப்போதும் தமிழர்கள் அதிகம் இருக்கும் இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதியில் கண்காணிப்புகள் அதிகமாக இருக்கின்றன. மக்கள் அமைப்புகளுக்கு இலங்கையின் பாதுகாப்புப் படையினர் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறார்கள். இது ஒரு வகையான துன்புறுத்தல் தான்” என்கிறார் மனித உரிமைகள் வழக்குரைஞர் பவானி ஃபொன்சேகா.

இந்த மாத தொடக்கத்தில் ஆயிரக் கணக்கான தமிழர்கள், இஸ்லாமிய மற்றும் கிறிஸ்துவ சமூகத்தைச் சேர்ந்தவர்கள், கிழக்கு மாகாணத்தில் இருந்து வடக்கு மாகாணம் நோக்கி ஒரு பெரிய பேரணியை நடத்தினார்கள். கொரோனா தடைகள் இருந்த போதும், தங்களின் பிரச்சனைகளை வெளிப்படுத்த இந்த பேரணியை நடத்தினார்கள்.

பட மூலாதாரம்,KAJEEBAN

படக்குறிப்பு,

சமீபத்தில் நடந்த பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான பேரணியில் சிறுபான்மையினரான தமிழர்கள், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர்.

தமிழ் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் போர்க் காலத்தில் நடந்த குற்றங்களுக்கு பொறுப்பேற்கச் செய்வது மற்றும் நீதி பெறுவதற்காகப் போராடினார்கள் என்றால், கொரோனாவால் இறந்த இஸ்லாமியர்களின் உடலை கட்டாயப்படுத்தி அரசு எரியூட்டுவது தொடர்பாகப் புகார் கூறினார்கள் இஸ்லாமியர்கள். இது இஸ்லாமிய வழக்கத்துக்கு எதிரானது என்கிறார்கள்.

சமாதானம் மற்றும் நல்லிணக்க செயல்பாடுகள் மற்றும் போர் குற்றம் புரிந்தவர்களை பொறுப்பேற்கச் செய்வது போன்றவை தொடர்ந்து தற்போதைய அரசால் அமைப்பு ரீதியாக மழுங்கடிக்கப்பட்டு வருகிறது என இலங்கைத் தமிழர்கள் கூறுகிறார்கள்.

உதாரணமாக, கடந்த ஆண்டு சுனில் ரத்னநாயக என்கிற ராணுவ வீரருக்கு அதிபர் ராஜபக்‌ஷ பொது மன்னிப்பு வழங்கினார். கடந்த 2000-ம் ஆண்டில் இலங்கையின் வடக்கிலுள்ள யாழ்ப்பாணம் பகுதியில் இருக்கும் மிருசுவில் எனுமிடத்தில், ஐந்து வயது குழந்தை, இரண்டு பதின் வயது இளைஞர்கள் உட்பட, 8 பொது மக்களை கொன்ற குற்றத்துக்காக, சுனிலுக்கு இறக்கும் வரை சிறை தண்டனை வழங்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த பொது மன்னிப்பு, போரால் பாதிக்கப்பட்டவர்களை அவமதிப்பது போன்ற செயல் என ஐ.நா சபை கூறியது.

எப்போதைக் காட்டிலும் இப்போது நீதி வெகு தொலைவில் இருப்பது போலத் தோன்றுகிறது என திரிகோணமலையைச் சேர்ந்த ஆஷா நாகேந்திரன் கூறியுள்ளார்.

இவரது மகனை கடந்த 2008-ம் ஆண்டு இலங்கை பாதுகாப்புப் படையினர் விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். இதுவரை அவர் மகனிடம் இருந்து எந்த தகவலும் கிடைக்கவில்லை.

“ஐ.நா சபை இதற்கு மேலும் இலங்கை அரசுக்கு கால அவகாசம் கொடுக்கக் கூடாது. சர்வதேசப் பிரதிநிதிகளால் ஒரு குழு அமைக்கப்பட்டு விசாரணை நடத்தி எங்கள் அவல நிலையை விசாரித்து தீர்வு வழங்க வேண்டும்” என்கிறார் ஆஷா நாகேந்திரன்

தகவல் BBC