பி.கே.ஆர். : எதிர்க்கட்சி எம்.பி.க்களின் ஆதரவை மாற்றுவதற்கான அச்சுறுத்தல்

மக்கள் பிரதிநிதிகளின் பலத்தைப் பலவீனப்படுத்த, குறிப்பாக பி.கே.ஆர். உட்பட எதிர்க்கட்சி எம்.பி.க்களின் ஆதரஐ திசை மாற்ற, சில தரப்பினர் திட்டமிட்டு நடவடிக்கைகளை மேற்கொள்வதாக பி.கே.ஆர் பொதுச் செயலாளர் சைபுதீன் நாசுஷன் இஸ்மாயில் கூறினார்.

“இது வருமான வரி சிக்கல்கள், போலிஸ் மற்றும் எம்.ஏ.சி.சி. விசாரணை அச்சுறுத்தல்கள் அல்லது ஜி.எல்.சி.களில் திட்டச் சலுகைகள் மற்றும் பதவிகள் எனும் அணுகுமுறைகள் மேற்கொள்ளப்படுகிறது,” என்று அவர் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

இருப்பினும், பி.கே.ஆர். பொதுச்செயலாளர் அவர் கூறிய, ‘அந்த சில தரப்பினரை’ விரிவாக விளக்கவில்லை.

பி.கே.ஆரின் மக்கள் பிரதிநிதிகள் “கட்சியை விட்டு வெளியேறுதல் அல்லது அரசாங்கக் கட்சியில் சேருதல்” போன்ற நடவடிக்கைகளை, அச்சுறுத்தல்கள் அல்லது பரிசுகள் மூலம் செய்ய முயற்சிப்பதை, பி.கே.ஆர். கடுமையாகப் பார்ப்பதாக சைஃபுதீன் வலியுறுத்தினார்.

“பி.கே.ஆர். எம்.பி.க்கள் போராட்டக் கோட்பாடுகளையும் சீர்திருத்த உணர்வையும் கடைபிடிக்க வேண்டும், மக்கள் நமது ஒவ்வொரு செயலையும் மதிப்பீடு செய்கிறார்கள் என்பதையும், 15-வது பொதுத் தேர்தலில் அதற்குப் பதிலளிக்கத் தயாராக இருப்பதையும் எப்போதும் நினைவில் கொள்ளுங்கள்,” என்று அவர் கூறினார்.

சைபுதீனின் கூற்றுப்படி, தற்போதைய அரசாங்கம் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையினரின் ஆதரவை இழந்து, நாடாளுமன்ற அமர்வை அவசரகாலத்தில் நடத்த முடியும் என்ற நிலையில் இது நடக்கிறது என்றார்.

“அதே நேரத்தில், கல்வி, வேலைவாய்ப்பு, அல்லது பொது சுகாதாரம் ஆகியவற்றுடன் தொடர்புடைய மக்களின் பல்வேறு பிரச்சினைகளை அரசாங்கத்தால் இப்போது தீர்க்க முடியவில்லை என்பது பலரின் பார்வையில் தெளிவாகிறது,” என்று அவர் மேலும் கூறினார்.