மியான்மர் அகதிகளுக்கு ஆதரவாக காலணி போராட்டம்

முகம் தெரியாத அகதிகளுக்காக 1,086 காலணிகளை வரிசைப்படுத்தி, ஒவ்வொரு ஜோடி காலணியும் ஒவ்வொரு அகதிகளுக்கானது என்ற அடிப்படையில் 1,086 காலணிகள் கொண்ட போராட்டம் ஒன்று அமைதியான முறையில் நேற்று நடைபெற்றது.

மலேசியாவில் தஞ்சம் அடைந்திருந்த 1,200 மியான்மர் அகதிகளில், 1,086 அகதிகளைத் திரும்ப மியான்மர் நாட்டுக்கே நாடு கடத்திய விவகாரத்தில், தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றன, மனித உரிமை தன்னார்வ அமைப்புகள் சில இந்த அறப்போராட்டத்தை முன்னெடுத்தன.

மியான்மர் உள்நாட்டு அரசியல் உட்பூசல் காரணமாக, அங்குப் போராட்டம் வெடித்திருக்கும் வேளையில், மக்கள் பாதுகாப்பில்லாத சூழலில் இருக்கிறார்கள். இந்த நிலையில், மலேசியாவில் தஞ்சமடைந்திருந்த குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் உள்ளிட்ட 1,086 அகதிகளை, மலேசியக் குடிநுழைவுத் துறை மியான்மர் இராணுவத்திடம் ஒப்படைத்தது.

பேராக், லுமூட்டிலுள்ள அரச மலேசியக் கடற்படை தளத்திலிருந்து, மியான்மர் கடற்படையின் மூன்று கப்பல்களில் அவர்கள் நாடு கடத்தப்பட்டனர்.

மியான்மர் அகதிகள்

முன்னதாக, கடந்தாண்டு முதல், அகதிகள் முகாமில் இருக்கும் மியான்மர் அகதிகள் 1,200 பேரை அவர்களின் சொந்த நாட்டுக்கு அனுப்பப்போவதாக மலேசியக் குடிநுழைவுத் துறை அறிவித்திருந்த வேளையில், அதை எதிர்த்து எம்னெஸ்டி இன்டர்நேஷனல் மலேசியா (Amnesty International Malaysia) மற்றும் அசைலம் அக்சஸ் மலேசியா (Asylum Access Malaysia) எனும் இரு மனித உரிமை குழுக்களும் வழக்கு தொடுத்தனர்.

மியான்மர் அகதிகளை நாடு கடத்தும் குடிநுழைவு துறையின் முயற்சிக்கு, உயர் நீதிமன்றம் தற்காலிகமாகத் தடைவிதித்தது. ஆனால், அன்றைய தினமே (பிப்ரவரி 23-ம் தேதி) அகதிகள் 1,086 பேரை மலேசிய அரசு நாடு கடத்தியது.

இந்த மனிதாபிமானமற்ற செயலுக்கு ஆட்சேபத்தைத் தெரிவிக்கவும், நாடுகடத்தப்பட்ட 1,086 அகதிகளுக்கு ஆதரவாகவும் வித்தியாசமான முறையில், இந்த காலணி அறப்போராட்டத்தை முன்னெடுத்தன மனித உரிமைக் குழுக்கள்.

பிப்ரவரி மாதத் தொடக்கத்திலிருந்து, தேசிய ஜனநாயக லீக் (என்.எல்.டி.) அரசாங்கத்திடமிருந்து, மியான்மர் இராணுவம் அதிகாரத்தைக் கைப்பற்றியது. இதனால், அங்குக் கிளர்ச்சி வெடித்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். இந்தப் போராட்டத்தில் இதுவரை 50-க்கும் அதிகமான உயிர்கள் பலியாகியிருக்கின்றன.

சரியான அரசியல் சூழல் இல்லாத இன்றைய சூழ்நிலையில், அகதியாகத் தஞ்சமடைந்திருக்கும் மக்களை நாடு கடத்தியது எந்த வகையில் நியாயம் என்றும், இதற்கு அரசாங்கம் பதில் சொல்ல வேண்டும் என்றும் மீண்டும் வழக்கு தொடுக்கப்பட்டிருக்கிறது.

அதன் விசாரணை மார்ச் 9-ம் தேதி நடைபெறப்போகும் நிலையில், குடிநுழைவுத்துறை அதிகாரி கைருல் டிசைமி தாவுத், “அகதிகள் யாரையும் கட்டாயப்படுத்தி அனுப்பவில்லை. இந்த நடவடிக்கைக்கு ஒப்புக்கொண்டதன் அடிப்படையில்தான் அவர்கள் நாட்டுக்குத் திருப்பி அனுப்பப்பட்டிருக்கிறார்கள்,”  என்று கூறியிருக்கிறார்.

அதோடு, ரோஹிங்கியா அகதிகள், யு.என்.எச்.சி.ஆர் அட்டைதாரர்கள் மற்றும் அரசியல் புகலிடம் கோரியவர்களைத் திருப்பி அனுப்பவில்லை என்றும் அவர் கூறியிருந்தார்.

ஆனாலும், திருப்பி அனுப்பப்பட்டவர்களில் அரசியல் புகலிடம் கோரியவர்களும் இருக்கக்கூடும் என நம்பப்படுகிறது.

இதற்கிடையில், கோவிட்-19 தொற்றின் அச்சம் காரணத்தால், மலேசியாவில் இன்னும் கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும் நிலையில், விதிமுறைகளுக்கு உட்பட்டு இந்தக் காலணி அறப்போராட்டம் செய்யப்பட்டிருக்கிறது.

‘சேலஞ்சர் மலேசியா’ (Challenger Malaysia), ‘மிசி சோலிடாரிட்டி’ (MISI Solidariti), மலேசிய சோசலிசக் கட்சியின் இளைஞர் அணி, மலேசிய சோசலிசக் கட்சி, சுவாராம், தேசிய ஜனநாயகவாதிகள் (Demokrat Kebangsaan), வடக்கு தெற்கு முயற்சி (North South Initiative), அகதிகளுக்கான புகலிடம் (Refuge for the Refugees), எல்லைகளுக்கு அப்பால் (Beyond Borders), தெனாகாநீத்தா, லிபராசி (Liberasi), அல்-ஹசன் தன்னார்வ வலையமைப்பு (Al-Hasan Volunteer Network) ஆகிய அமைப்புகள் இந்த அறப்போராட்டத்தில் தங்களை இணைத்துக்கொண்டன.

மனித உரிமைகள் மற்றும் கௌரவத்தை உணரும் மனப்பான்மையில், அவர்கள் முன்வைத்த நான்கு கோரிக்கைகளின் பட்டியல் :

  1. டாட்மாடாவ் அரசாங்கத்துடன் ஒத்துழைப்பு இல்லை

மியான்மரின் தற்போதைய டாட்மாடாவ் (இராணுவ) அரசாங்கம் மியான்மர் மக்களின் விருப்பத்திற்கு எதிராக, முரட்டுத்தனமான சக்தியைப் பயன்படுத்தி, ஜனநாயகத்திற்கு விரோதமாக நிறுவப்பட்டது, பெரும்பாலும் வன்முறை மற்றும் ஆபத்தான சர்வாதிகார வழிமுறைகள் மூலம் அதன் அதிகாரத்தைப் பேணுகிறது.

மலேசியா இந்த அரசாங்கத்தைச் சட்டபூர்வமான ஒன்றாகக் காணக்கூடாது – இருதரப்பு ஒப்பந்தங்கள் மூலமாகவோ அல்லது எந்தவொரு வடிவத்திலும் ஒத்துழைப்பு மூலமாகவோ – அவர்களின் ஆளுகைக்கு மறைமுகமான ஒப்புதலை வழங்கக் கூடாது.

  1. யு.என்.எச்.சி.ஆருக்கு குடிநுழைவுத் தடுப்பு மையங்களுக்கு செல்ல அனுமதி

தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனரா, சர்வதேச மனித உரிமைக் செயற்கருவிகளின் கீழ் அவர்களுக்குச் சரியான முறையில் வழங்கப்பட வேண்டிய பாதுகாப்புகள் வழங்கப்பட்டுள்ளதா என்பதைக் கண்டறிய, குடிநுழைவுத் தடுப்பு மையங்களுக்குள் செல்ல அரசாங்கம் யு.என்.எச்.சி.ஆரை அனுமதிக்க வேண்டும்.

  1. நாடு கடத்தப்படுவதற்கான தடை, குடியேறியவர்களைக் காலவரையின்றியும் தன்னிச்சையாகவும் தடுத்து வைப்பது

புலம்பெயர்ந்தோர் மீது, இனி திடீர் சோதனைகள் நடத்தி, அவர்களைக் கைது செய்தல் மற்றும் தடுப்புக்காவலில் வைத்தல் போன்றவற்றிற்கு உட்படுத்தப்படக்கூடாது. இந்த நடைமுறைகள் மனிதாபிமானமற்றவை, அவர்களின் உரிமைகளைப் பெரிதும் மீறுகின்றன, தனிநபர் கௌரவத்தையும் கொள்ளையடிக்கின்றன. மேலும், அவர்கள் பயங்கரமான வாழ்க்கை நிலைமைகளுக்கு ஆளாவதோடு, உடல் மற்றும் வாய்மொழியாக துன்புறுத்தப்படுகின்றனர் என்பதனை மலேசிய மனித உரிமை அமைப்புகள் பல ஆவணப்படுத்தியுள்ளன.

மேற்கூறியவற்றிற்கு மேலதிகமாக, 2021 மார்ச் 9-ஆம் தேதி நடைபெறவிருக்கும் விசாரணையில், நாடு கடத்தப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைக்க, அரசாங்கம், குடிநுழைவுத் துறை தலைமை இயக்குநர் கைருல் டைமி டாவுட் மற்றும் உள்துறை அமைச்சு ஆகியோருக்கு எதிராக நீதித்துறை மறுஆய்வு செய்ய வேண்டும் என்று நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.

  1. குடிநுழைவுத் துறையின் முழு வெளிப்படைத்தன்மை

குடிநுழைவுத் துறை தடுப்புக்காவல்கள் தொடர்பான தரவுகளைப் பொதுவாகவும் அணுகக்கூடியதாகவும் மாற்ற வேண்டும் – பாலினம், வயதுக் குழு மற்றும் தேசியம் ஆகியவற்றால் பிரிக்கப்பட்ட கைதிகளின் எண்ணிக்கை, அகதி நிலை ஆகியவற்றோடு; கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ள சரியான இடம்; கைதிகளின் தடுப்புகாலம், தடுப்புக்காவல் நீட்டிப்புக்கான காரணங்கள் போன்றவற்றையும் தெரிவிக்க வேண்டும்.

நீதிமன்ற உத்தரவு இருந்தபோதிலும், பிப்ரவரி 23-ம் தேதி நாடுகடத்தப்பட்டது ஏன், மீதமுள்ள 114 மியான்மர் நாட்டவர்கள் ஏன் திருப்பி அனுப்பப்படவில்லை, அத்துடன் அவர்களின் தற்போதைய நிலை குறித்தும் குடிவரவுத் துறையிடம் விளக்கம் கோருகிறோம்.