உயிர்தப்பிய பயணியின் திகில் அனுபவம்

பசறையில் விபத்துக்குள்ளாகி 14 பேர் உயிரிழந்த பஸ்ஸில் பயணித்த பயணி ஒருவர் தெரிவித்த அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது

விபத்துக்குள்ளான குறித்த பஸ்ஸில் பண்டாரவளை நகரத்தில்  கடந்த வாரம் பயணித்த சுப்புன் நலிந்த என்பவர் தனது அனுபவத்தை பேஸ்புக்கில் பதிவொன்றை பதிவிட்டுள்ளார்.

‘கடந்த வாரம் திங்கட்கிழமை காலை 9.20 மணியளவில் பண்டாரவளை நகரில் நான் இதே பேருந்தில் ஏறினேன். ஹப்புத்தளை பகுதியில் இதேபோன்ற வளைவு ஒன்றில் பஸ் திரும்பியது. அப்போதும் பள்ளத்தில் விழுவதற்கு நொடி பொழுதில் பஸ் தப்பியது.

பின்னர் பம்பஹின்ன சந்தியில் முன்னால் சென்ற வானை முந்தி செல்ல இந்த பஸ்ஸின் சாரதி முயற்சித்தார். இதனால் எதிரில் வந்த மற்றுமொரு பஸ்ஸூடன் இந்த பஸ் மோதப் பார்த்தது. அப்போதும் அதிஷ்டவசமாக பஸ் பாரிய விபத்தில் இருந்து தப்பியது.

இதன் போது பஸ்ஸில் இருந்த பெண் ஒருவர் கோபமடைந்து ஏன் இவ்வாறு பஸ்ஸை ஓட்டுகின்றீர்கள் என நடத்துனரிடம் கேட்டார்.

நீங்கள் கொடுத்த பணத்தை திருப்பி தருகின்றேன். வேண்டும் என்றால் இறங்கி வேறு ஒரு பஸ்ஸில் செல்லுங்கள் என அந்தப் பெண்ணிடம் நடத்துனர் கூறினார்.

அதன் பின்னர் பலாங்கொட பிரதேசத்தில் வைத்து மற்றுமொரு பஸ்ஸூடன் போட்டி போட்டு பேருந்தை ஓட்டிச் சென்று விபத்துக்குள்ளாவிருந்த நிலையில் மக்கள் சாரதியை கடுமையாக திட்ட ஆரம்பித்தனர். அத்துடன் பேருந்தின் உரிமையாளரின் தொலைபேசி இலக்கம் பஸ்ஸூக்குள் எழுதப்பட்டிருந்தது.

அதனை தொடர்பு கொண்ட மக்கள்,  சாரதிகளை உரிய முறையில் வாகனம் ஓட்டுமாறு கூறுங்கள் என கூறியுள்ளனர்.

இதனால் கோபமடைந்த சாரதி பஸ்ஸை மிகவும் மெதுவாக ஓட்டி சென்றார். இரத்தினரபுரியில் இருந்து கொட்டாவை வருவதற்கு 5 மணித்தியாலங்கள் எடுத்துக் கொண்டார்’ என அந்த பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறான சூழ்நிலையில் அதே பஸ், பசறை 13ஆம் மைல் கல்லில் வைத்து 200 அடி பள்ளத்தில் வீழ்ந்து கடந்த சனிக்கிழமை விபத்துக்குள்ளானது.

TamilMirror