தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மீனவர்கள் 54 பேரை கைது செய்து, படகுகளை கைப்பற்றிய இலங்கை கடற்படை

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியை சேர்ந்த 54 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்து அவர்களது படகுகளையும் கைப்பற்றிய சம்பவம் மீனவர் பகுதிகளில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

54 இந்திய மீனவர்களை கைது செய்துள்ளதை இலங்கை கடற்படையும் உறுதிப்படுத்தியுள்ளது.

யாழ்ப்பாணம் – கோவிலன் பகுதியிலிருந்து 3 கடல் மைல் தொலைவில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 3 படகுகளுடன், 14 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன், மன்னார் – பேசாலை பகுதியிலிருந்து 7 கடல் மைல் தொலைவிலும், இரணைதீவு பகுதியிலிருந்து 5 கடல் மைல் தொலைவிலும் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 5 படகுகளுடன் 20 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், முல்லைத்தீவு பகுதியிலிருந்து 07.5 மற்றும் 08.5 கடல் மைல் தொலைவில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 2 மீன்பிடி படகுகளுடன் 20 இந்திய மீனவர்களும் கைதுசெய்யப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை பேச்சாளர் குறிப்பிட்டார்.

ராமேஸ்வரத்தை சேர்ந்த 20 மீனவர்கள் 2 விசைப்படகு, காரைக்காலை சேர்ந்த 14 மீனவர்கள் ஒரு விசைப்படகு, நாகபட்டிணத்தை சேர்ந்த 20 மீனவர்கள் 2 விசைப்படகுகள் என மொத்தம் 54 மீனவர்கள் மற்றும் 5 விசைப்படகுகளை நேற்று ஒரே நாள் இரவில் இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளது குறிப்பிடதக்கது.

விசாரணைக்குப் பின்னர் இலங்கை மீன்வளத்துறை அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்ட சொந்த படகுகளில் அவர்கள் தனிமைப் படுத்தப்படுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்பட்ட மனித உரிமை மீறல் தொடர்பான தீர்மானத்தில், இந்தியா இலங்கைக்கு ஆதரவாகவோ, எதிராகவோ வாக்களிக்காமல் புறக்கணித்த சம்பவம் நடந்த மறுநாள் இந்தக் கைதுகள் நடந்துள்ளன.

மீனவர்கள் சிறை பிடிக்கும் போது உடன் மீன்பிடித்து கொண்டிருந்த மீனவர் பாபு பேசுகையில், “புதன்கிழமை காலை மீன்பிடி அனுமதி சீட்டு பெற்று ராமேஸ்வரத்தில் இருந்து 400 க்கும் மேற்பட்ட விசைப் படகில் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் சென்றோம். நாங்கள் புதன்கிழமை நள்ளிரவு தனுஷ்கோடிக்கும் கச்சத்தீவுக்கும் இடையே மீன்பிடித்துக் கொண்டிருக்கும் போது அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த இலங்கை கடற்படையினர் இது இலங்கை கடற்பரப்பு எனவே இங்கு இந்திய மீன் பிடிக்க வேண்டாம் என ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை விடுத்தனர். இதனால் அப்பகுதியில் இருந்து மீனவர்கள் நாலாபுறமும் சிதறி இந்திய எல்லைக்குள் வர முயற்சித்த போது ராமேஸ்வரத்ததை சேர்ந்த இரண்டு விசைப்படகுகளை இலங்கை கடற்படையினர் கைது செய்து இரணை தீவு கடற்படை முகாமுக்கு அழைத்துச் சென்றனர்.” என்றார்.

இலங்கை கடற்படையின் கைது நடவடிக்கைக்கு அஞ்சி மீனவர்கள் மீன் பிடி வலைகளை கடலில் வெட்டிவிட்டு இந்திய கடல் எல்லைக்குக்கு வந்தததக பாபு தெரிவித்தார்.

மீனவர்கள் கைது நடவடிக்கை குறித்து ராமேஸ்வரம் மீனவ சங்க தலைவர் ஜேசு ராஜா பேசுகையில், “கடந்த இரண்டு மாதங்களாக ராமநாதபுரம், நாகை, புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் மற்றும் கைது நடவடிக்கை இல்லாமல் இருந்தது. ஆனால் ஐநா மனித உரிமை ஆணையத்தில் இந்திய அரசு வாக்களிக்காமல் புறக்கணித்தையடுத்து புதன்கிழமை ராமேஸ்வரம், நாகை, காரைக்கால் பகுதிகளில் இருந்து மீன் பிடிக்க சென்ற மீனவர்களை திட்டமிட்டே இலங்கை கடற்படையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளதனர்,” என்றார்.

மேலும் இந்திய அரசு இலங்கைக்கு ஆதரவாக செயல்படாததால் பழிவாங்கும் நோக்கத்தோடு தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. உடனடியாக மத்திய மாநில அரசுகள் இலங்கை அரசுடன் பேசி சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை மீன்பிடி படகுடன் விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளார் மீனவ சங்க தவைலர் ஜேசு ராஜா.

இது குறித்து மீன்வளத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது ராமநாதபுரம் மீன்வளத்துறை சார்பில் எல்லை தாண்டி மீனவர்கள் மீன்பிடிக்கு செல்ல வேண்டாம் என்கின்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் கடற்கரை கிராமங்களில் வாரமிருமுறை நடத்தப்பட்டு வருகிறது.

அது மட்டுமின்றி தடைசெய்யப்பட்ட வலைகள் மற்றும் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட மீன்பிடி முறைகளை பயன்படுத்தி மீன் பிடிக்கும் மீனவர்கள் மீது நடவடிக்கை எடுக்கபட்டு வருகிறது. எனினும் நேற்று ராமேஸ்வரத்திலிருந்து மீன்பிடிக்க சென்ற இரண்டு படகுகளில் இருந்த 20 மீனவர்கள் இலங்கை கடற்படையினர் கைது செய்து இலங்கை அழைத்து சென்றுள்ளனர். சர்வதேச கடல் எல்லையில் மீன் பிடிக்கும் மீனவர்கள் தவறுதலாக இலங்கை கடற்பரப்பிற்குள் செல்லாமல் இருக்க போதிய முன்னெச்சரிக்கை விழிப்புணர்வு தொடர்ந்து வழங்கப்படும் என தெரிவித்தனர்.

இலங்கை தரப்பில் சொல்வது என்ன?

இலங்கை எல்லைக்குள் கடற்றொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் கீழ் மீனவர்கள் கைது செய்யப்பட்டதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் கெப்டன் இந்திக்க டி சில்வா தெரிவிக்கின்றார்.

இந்திய மீனவர்களை கைது செய்த நடவடிக்கையானது, எந்தவிதத்திலும் பழிவாங்கும் செயல் கிடையாது எனவும் கெப்டன் இந்திக்க டி சில்வா கூறுகின்றார்.

இதற்கிடையில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவு வழங்காமையை அடிப்படையாகக் கொண்டு, பழிவாங்கும் வகையில் இந்திய மீனவர்கள் கைது செய்யப்படுவதாக எழுப்பப்படும் குற்றச்சாட்டை தான் முழுமையாக நிராகரிப்பதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

இலங்கை மீனவர்களையும், இலங்கை கடல் வளங்களையும் பாதுகாப்பதற்காகவே இவர்கள் கைது செய்யப்பட்டதாகவும் அவர் கூறுகின்றார்.

இந்திய மீனவர்களின் அத்துமீறிய பிரவேசத்தை கட்டுப்படுத்துமாறு இலங்கை மீனவர்கள் தன்னிடம் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருவதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.

இந்திய மீனவர்களின் பிரவேசத்தை கட்டுப்படுத்தாத பட்சத்தில், இலங்கையின் வடப் பகுதி மீனவர்கள் போராட்டங்களை ஆரம்பிக்க முயற்சித்து வருவதாகவும் அவர் கூறுகின்றார்.

இதனடிப்படையிலேயே, இலங்கை எல்லைக்குள் அத்துமீறி பிரவேசிக்கும் இந்திய மீனவர்களை கைது செய்வதாகவும் அவர் தெரிவிக்கின்றார்.

இதைவிடுத்து, ஐநாவில் இலங்கைக்கு, இந்தியா ஆதரவு வழங்காமைக்காக, தாம் இந்திய மீனவர்களை கைது செய்யவில்லை எனவும் அவர் குறிப்பிடுகின்றார்.

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கும், இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டமைக்கும் இடையில் எந்தவித தொடர்பும் கிடையாது என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிக்கின்றார்.

BBC