ஐ.நா தீர்மானம் நிறைவேற்றத்தால் இலங்கையில் நிலைமை மாறுமா?

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் கவுன்சிலில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில், உண்மையிலேயே அந்த நடவடிக்கை அந்நாட்டில் மனித உரிமைகள் பாதுகாப்புக்கு உதவுமா என பரவலாக பேசப்பட்டு வருகிறது.

அந்த தீர்மானத்தால் இலங்கை எதிர்கொள்ளும் பிரச்னைகள் குறித்து இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளரும், சட்டத்தரணியுமான அம்பிகா சற்குணநாதனிடம் பிபிசி தமிழ் பேசியது.

“ஐ.நா தீர்மானமானது, இலங்கையில் மனித உரிமை பாதுகாப்பை மேலும் முன்னோக்கி கொண்டு செல்வதற்கான யோசனையாகவே பார்க்கிறேன். இது இலங்கைக்கு எதிரான தீர்மானம் கிடையாது. அதற்கான வேறுபாட்டை புரிந்து கொள்ள வேண்டும்,” என்று அவர் குறிப்பிட்டார்.

“அந்த தீர்மானத்தில், உள்நாட்டு பொறுப்புக்கூறல் வழிமுறைகள் இல்லை என்பது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அதற்கான முயற்சிகளை மேற்கொண்டு ஆதாரங்களை சேகரித்து மனித உரிமைகளை பாதுகாப்பதற்கான பொறுப்பை இந்த தீர்மானம், ஐ.நா மனித உரிமைகள் அமைப்பின் தலைமை அதிகாரிக்கு வழங்கியுள்ளது,” என்றும் அம்பிகா சற்குணநாதன் தெரிவித்தார்.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமை உயர்ஸ்தானிகர் அலுவலகம் ஆதாரங்களை சேகரித்தல், பகுப்பாய்வு செய்தல், பாதுகாத்தல், எதிர்கால பொறுப்புக்கூறல் செயல்முறைகளுக்கான உத்திகளை முன்வைத்தல் மற்றும் உறுப்பு நாடுகள் முன்னெடுக்கும் நீதி சார்ந்த நடவடிக்கைகளுக்கு ஆதரவளித்தல் ஆகியவற்றை முன்னெடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

ராணுவமயமாக்கல், தமிழர்கள் மற்றும் முஸ்லிம்களை ஒதுக்குதல், ஊடக சுதந்திரத்தை முடக்குதல் மற்றும் சிவில் சமூக அச்சுறுத்தல் ஆகியவை நடப்பதாக சுட்டிக்காட்டும் அந்த தீர்மானம், இலங்கையில் மனித உரிமை நிலவரம் மோசமடைந்து வருவதாக மேற்கோள்காட்டியிருக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.

மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை செய்வதற்கும், மனித உரிமை ஆணைக்குழு உள்ளிட்ட அமைப்புகளின் சுதந்திரத்தை உறுதிப்படுத்துமாறும் ஐ.நா தீர்மானம் கோருகிறது என்றும் அவர் தெரிவித்தார்.

அத்துடன், பயங்கரவாத தடுப்பு சட்டத்தை மறு பரிசீலனை செய்யவும் இலங்கை அரசாங்கத்தை சர்வதேச மற்றும் தேசிய மனித உரிமைகள் கடமைகளுக்கு இணங்கச் செய்யும் வகையில் சட்டத்தை மாற்றி அமைக்க வேண்டும் என்றும் அந்த தீர்மானம் கோருகிறது என்று அம்பிகா சற்குணநாதன் கூறினார்.

எதிர்காலத்தில் மாற்றம் நிகழுமா?

இலங்கைக்கு எதிரான தீர்மானத்தின் ஊடாக, எதிர்காலத்தில் என்ன நேரும் என அம்பிகா சற்குணநாதனிடம் கேட்டோம்.

அதற்கு அவர், “இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருப்பதால், குறுகிய காலத்திற்கு இலங்கையை, மனித உரிமைகள் கவுன்சிலின் நிகழ்ச்சி நிரலில் வைத்திருக்க நடவடிக்கை எடுக்கப்படும். அடுத்த 6 மாதங்களில் (செப்டம்பர் 2021) சபைக்கு வாய் மூலமான அறிக்கையை உயர்ஸ்தானிகர் முன்வைப்பார் எனவும், அதன் பின்னரான 3 மாதங்களில் எழுத்துப்பூர்வ அறிக்கையை அவர் முன்வைப்பார்,” என்றும் கூறினார்.

இலங்கையில் மனித உரிமைகள் பராமரிப்பு நிலையை அவதானித்து, வரும் செப்டம்பர் மாதம் முழு அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என கூறப்படுகிறது. இதனூடாக இலங்கையின் மனித உரிமைகளின் நிலவரம், ஒரு சர்வதேச அமைப்பில் பகிரங்கப்படுத்தப்படும் நிலை ஏற்படும் என்று அம்பிகா சற்குணநாதன் தெரிவித்தார்.

அம்பிகா சற்குணநாதன்

மனித உரிமை மீறல்களுக்கான ஆதாரங்களை சேகரித்து, ஆவணப்படுத்துதல் பணியை தொடங்க மனித உரிமை உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் பிரிவு இலங்கையில் நிறுவப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

அத்துடன், பொறுப்புக்கூறலை தொடரக்கூடிய வழி முறைகளை உயர்ஸ்தானிகரின் அலுவலகம் முன்மொழியும். இதன் பிறகு, எதிர்காலத்தில் இந்த விடயம் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் பரிந்துரைகள் அல்லது சிறப்பு நீதிமன்றத்தில் ஏனைய பொறுப்புக்கூறல் வழிமுறைகளுக்கு வழிவகுக்கக்கூடும் என்றும் அவர் குறிப்பிடுகிறார்.

ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கையின்படி, தனது உலகளாவிய அதிகாரத்தை பயன்படுத்தி, உறுப்பு நாடுகள், குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுள்ள நபர்களுக்கு எதிராக தமது நாட்டிலேயே சட்ட நடவடிக்கை எடுக்கக்கூடும் என்றும் அவர் தெரிவித்தார்.

இது ஒருவேளை நடந்தால், குற்றச்சாட்டுக்கு உள்ளான நபர்கள், அந்தந்த உறுப்பு நாடுகளுக்கு செல்லும் போது கைது செய்யப்படுவதற்கான சாத்தியம் உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

அத்தகைய நபர்களுக்கு எதிராக தனி நபர் பயணத் தடைகள் மற்றும் சொத்து முடக்கங்கள் போன்ற நடவடிக்கைகளை உறுப்பு நாடுகள் மேற்கொள்ளவும் இந்த தொடர்ச்சியான செயல்முறைகள் வழிவகுக்கலாம் என்று அம்பிகா சற்குணநாதன் தெரிவித்தார்.

இதற்கான சட்ட நடவடிக்கைகளுக்கு உதவி வழங்க உறுப்பு நாடுகள், இந்த தீர்மானத்தின் ஊடாக கேட்டுக் கொள்ளப்படும். இதேவேளை, ஐ,நாவின் பரிந்துரைகளை இலங்கை அரசாங்கம் நிறைவேற்ற முயற்சிக்குமா? என அவரிடம் கேட்டதறகு, இலங்கையின் தற்போதைய நடவடிக்கைகளின் அடிப்படையில் பார்த்தால், தீர்மானத்தில் முன்மொழியப்பட்ட பரிந்துரைகளை இலங்கை செயல்படுத்த முயற்சிக்காது என்றே தோன்றுகிறது என அவர் பதிலளித்துள்ளார்.

இலங்கை

அவ்வாறு முயற்சிக்காத பட்சத்தில், எதிர்காலத்தில் எவ்வாறான பிரச்னைகளை இலங்கை எதிர்நோக்கும் என அம்பிகாவிடம் கேட்டோம்.

அதற்கு அவர், மனித உரிமை மீறல்களால் குற்றம்சாட்டப்பட்ட தனி நபர்கள் மீது தனிப்பட்ட நாடுகள் நடவடிக்கை எடுக்க இந்த தீர்மானத்தின் ஊடாக முடியும். என்று அவர் பதிலளித்தார்.

ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் மீதான வாக்கெடுப்பில் இந்தியா பங்கேற்காமல் தவிர்த்தது பற்றி கேட்டதற்கும் அம்பிகா சற்குணநாதன் பதில் அளித்தார்.

‘இந்தியா விலகுவது ஆச்சரியமான விஷயமல்ல’

சர்வதேச மனித உரிமை பொறிமுறை மற்றும் தேசிய மனித உரிமை பிரச்னைகள் தொடர்பில் ஐ.நாவின் தலையீடு ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இல்லை என கருதி இந்தியா வாக்களிப்பதில் இருந்து விலகியிருக்கலாம் என்று அவர் கூறினார்.

இந்தியா விலகுவது ஆச்சரியமான விடயமல்ல என கூறிய அவர், தீர்மானத்திற்கு இந்தியா வாக்களித்திருந்தால் மாத்திரமே அது ஆச்சரியமளித்திருக்கும் என்று குறிப்பிட்டார்.

இந்தியா வாக்களிக்காமல் தவிர்த்தது, இலங்கை அரசாங்கத்தின் மீது அதன் அதிருப்தியின் வெளிப்பாடாக இருக்கலாம். மேலும், தமிழக தேர்தல்கள் மற்றும் சீன சார்பு விடயங்கள் காரணமாகவும் இது இருக்கலாம் என அம்பிகா கருத்து தெரிவித்தார்.

தீர்மானத்திற்கு எதிராக சீனா, பாகிஸ்தான் ஆகிய நாடுகள் எதிர்த்து வாக்களித்தது குறித்துப் பேசிய அவர், “இலங்கை மட்டுமின்றி பல நாடுகளில் நடக்கும் மனித உரிமைகள் மீறல்கள் தொடர்பான தீர்மானங்கள் மீதும் சீனா தொடர்ந்து எதிராகவே வாக்களித்து வருகிறது. பாகிஸ்தானின் வாக்குகள், சீனாவின் செயலால் ஏற்பட்ட தாக்கமாகக் கூட இருக்கலாம்” என்று தெரிவித்தார்.

இலங்கையில் முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் மீறல்களை கண்டு கொள்ளாமல், ஐ.நாவில் முன்வைக்கப்பட்ட இலங்கைக்கு எதிரான தீர்மானத்தில் பாகிஸ்தான் வாக்களித்தது என்றும் அவர் குறிப்பிட்டார்.

உலக அளவில் நாடுகள் தற்போது எதிர்கொள்ளும் சூழ்நிலை, புவிசார் அரசியல் காரணங்கள் போன்றவற்றால் இலங்கைக்கு எதிராக பொருளாதார தடைகள் அல்லது பிற கட்டுப்பாடுகள் உடனடியாக வராது என்றும் அம்பிகா சற்குணநாதன் தெரிவித்தார்.

BBC