‘மிஸ்ஸஸ் ஸ்ரீ லங்கா 2021’
திருமதி இலங்கை அழகிப் போட்டியில் வெற்றியாளராக தெரிவு செய்யப்பட்டு, கிரீடம் சூட்டப்பட்ட பெண்ணிடமிருந்து, அதே மேடையில், அடுத்த சில நிமிடங்களில் கீரிடம் பறிக்கப்பட்ட சம்பவமொன்று இலங்கையில் பதிவானது.
பட்டத்தை வென்ற பெண் திருமணமாகி மணமுறிவானவர் என்று காரணம் கூறி அவரது பட்டம் அப்போதே பறிக்கப்பட்டது. தாம் மணமுறிவானவர் அல்ல என அப்பெண் கூறியுள்ளதை அடுத்து அவருக்கு மீண்டும் ‘மிஸ்ஸஸ் ஸ்ரீ லங்கா’ கிரீடத்தை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கட்டுள்ளது.
கொழும்பு தாமரை தடாகம் அரங்கில் திருமதி இலங்கை அழகிப் போட்டியின் இறுதிப் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இந்த போட்டியின் பிரதம விருந்தினராக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ஷ பங்கேற்றிருந்தார்.
மிக பிரமாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வில் திருமதி இலங்கை அழகி தெரிவு அறிவிக்கப்பட்டார்.
இதன்படி, திருமதி இலங்கை அழகிப் போட்டியின் வெற்றியாளராக திருமதி புஷ்பிகா டி சில்வா என்பவர் தெரிவு செய்யப்பட்டதை, நிகழ்ச்சி தொகுப்பாளர் அறிவித்தார்.
அதையடுத்து, புஷ்பிகா டி சில்வாவிற்கு, திருமதி இலங்கை படத்துக்கான கிரீடம் சூட்டப்பட்டது.
கிரீடம் சூட்டப்பட்டு, ஓரிரு நிமிடங்களில், திருமதி உலக அழகு ராணியான கரோலின் ஜுரி, இந்த கிரீடத்தை பெறுவதற்கு புஷ்பிகா டி சில்வா தகுதியற்றவர் என அறிவித்தார்.
திருமணமாகி, விவாகரத்தான பெண்ணொருவருக்கு இந்த கிரீடத்தை வழங்க முடியாது என கரோலின் ஜுரி, மேடையில் பகிரங்கமாகவே அறிவித்திருந்தார்.
இவ்வாறு கரோலின் ஜுரி அறிவித்திருந்த நிலையில், புஷ்பிகா டி சில்வாவிற்கு அணிவிக்கப்பட்ட கிரீடத்தை, கரோலின் ஜுரி மேடையிலேயே மீளப் பெற்றுக்கொண்டார்.
கிரீடத்தை மீளப் பெற்றுக்கொண்ட கரோலின் ஜுரி, அதே மேடையில் இரண்டாவது இடத்தை (ஃபர்ஸ்ட் ரன்னர்-அப்) பெற்றவருக்கு அந்த கிரீடத்தை அணிவித்திருந்தார். இந்த நிலையில், மேடையில் அமைதியின்மை ஏற்பட்டது.
குறித்த விடயம் சமூக வலைத்தளங்களிலும், பிரதான ஊடகங்களிலும் இன்று பேசுப் பொருளாக மாறியுள்ளது.
“விவாகரத்து ஆகவில்லை” – புஷ்பிகா டி சில்வா
இந்த நிகழ்வை அடுத்து, புஷ்பிகா டி சில்வா, தனது ஃபேஸ்புக் பக்கத்தில் கருத்து வெளியிட்டுள்ளார்.
இலங்கை அன்றி, உலக வரலாற்றில் உலக அழகி போட்டியில் வெற்றியீட்டிய ஒருவரிடமிருந்து கிரீடத்தை பறித்துக்கொண்ட முதலாவது சந்தர்ப்பம் இதுவென புஷ்பிகா டி சில்வா தெரிவித்துள்ளார்.
இந்த பதிவை எழுதும் சந்தர்ப்பத்திலும், தான் தலை நிமிர்ந்து, முன்னரை போன்றே அபிமானத்துடன் உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
நான் நானாகவே உள்ளேன். இது எனக்கு நிகழ்ந்த ஒரு சம்பவம் மாத்திரமே என அவர் குறிப்பிட்டுள்ளார்.
உலக அழகு ராணியினால் எனது தலையிலிருந்த கிரீடம் பறிக்கப்பட்ட போது ஏற்பட்ட காயங்கள் மற்றும் கிரீடம் பறிக்கப்பட்டதன் பின்னர் மனதில் ஏற்பட்ட வேதனை ஆகியவற்றை விடவும், ”அம்மா தலையில் காயம் ஏற்பட்டுள்ளது அல்லவா? வலிக்கின்றதா? என தனது மகன் கேட்ட போது ஏற்பட்ட வலியே அதிகம்,” என அவர் கூறியுள்ளார்.
அதேபோன்று, தனித்து வாழும் பெண்மணியான தனக்கு உலகம் முழுவதும் உள்ள பெண்கள் மாத்திரமன்றி, ஆண்களும் ஆதரவு தெரிவித்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இனம், மதம், கட்சி, நிறம் என்ற எந்தவொரு பாகுபாடும் இன்றி, தனக்கு ஆதரவு வழங்கும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சந்தர்ப்பம் இதுவென அவர் கூறுகின்றார்.
இதேவேளை, தான் இந்த பதிவை எழுதும் சந்தர்ப்பத்தில் கூட தான் விவாகரத்து ஆகவில்லை என புஷ்பிகா டி சில்வா தெரிவித்துள்ளார்.
தான் விவாகரத்து ஆகியிருந்தால், அதற்கான ஆவணங்களை சமர்ப்பிக்குமாறு தான் சவால் விடுப்பதாகவும் அவர் கூறுகின்றார்.
‘மிஸ்ஸஸ் ஸ்ரீ லங்கா’ – அழகிப் பட்டத்தை சில நிமிடங்களில் மேடையிலேயே இழந்த பெண்
தான் தனது பிள்ளையுடன் வாழ்ந்து வருவதாகவும், தனிப்பட்ட காரணங்களினாலேயே தான் அவ்வாறு வாழ்ந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தனிமையில் வாழ்வது வேறு, விவாகரத்து என்பது வேறு எனவும் புஷ்பிகா டி சில்வா தெரிவித்துள்ளார்.
தான் இந்த இடத்திற்கு தகுதியில்லை என்றால், ஆரம்பத்திலேயே தன்னை நிராகரித்திருக்க முடியும் எனவும் கூறிய அவர், தான் இந்த இடத்திற்கு வரும் வரை அவர்கள் தூக்கத்திலா இருந்தார்கள் என கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்த பதிவில் இறுதியாக ”வரலாற்றில் முதல் தடவையாக கிரீடத்தை தலையில் அணிவித்து, அடுத்த நொடியில், உலக திருமதி அழகியினால் பறிக்கப்பட்ட முதலாவது திருமதி இலங்கை அழகு ராணி நான்” என கூறி முடித்துள்ளார்.
மீண்டும் கிரீடத்தை வழங்க ஏற்பாடு
திருமதி இலங்கை அழகு ராணியில் வெற்றியீட்டி, கிரீடம் பறிக்கப்பட்ட புஷ்பிகா டி சில்வாவிற்கு மீண்டும் கிரீடத்தை வழங்க ஏற்பாட்டு குழு நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்த கிரீடத்தை நாளைய தினமே வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக ஏற்பாட்டு குழு அறிவித்துள்ளது.
புஷ்பிகா டி சில்வா, விவாகரத்து பெறவில்லை என உறுதியாகியுள்ள நிலையிலேயே, கிரீடத்தை வழங்க ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் ஏற்பாட்டு குழு தெரிவித்துள்ளது.
BBC