விடுதலைப் புலிகள் சீருடை சர்ச்சை: யாழ்ப்பாணம் மாநகர சபை முதல்வர் மணிவண்ணன் கைது

விடுதலைப் புலிகள் சீருடை சர்ச்சை: யாழ்ப்பாணம் மாநகர சபை முதல்வர் மணிவண்ணன் கைது

2 மணி நேரங்களுக்கு முன்னர்

மணிவண்ணன் விஸ்வலிங்கம்

இலங்கையில், யாழ்ப்பாணம் மாநகர சபை முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் கைது செய்யப்பட்டுள்ளார். அவரைக் கைது செய்வதற்கு சொல்லப்பட்ட காரணம் தற்போது விவாதப் பொருளாகிவருகிறது.

பயங்கரவாதத் தடுப்பு பிரிவு அதிகாரிகள் இன்று (09 ஏப்ரல் 2021) அதிகாலை 1.40 மணி அளவில் அவரைக் கைது செய்ததாக, யாழ்ப்பாணம் போலீஸார், பிபிசி தமிழுக்கு உறுதிப்படுத்தினர்.

யாழ்ப்பாணம் போலீஸ் நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்ட யாழ். மாநகர முதல்வர், வவுனியா பயங்கரவாதத் தடுப்பு பிரிவுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும் போலீசார் குறிப்பிட்டனர்.

ஏன் கைது செய்யப்பட்டார்?

யாழ்ப்பாணம் மாநகரத்தின் பொது இடங்களில் குப்பைகளை கொட்டுவதற்கும், வெற்றிலை எச்சில் துப்புவதற்கும் தடை விதிக்க நடவடிக்கை எடுத்திருப்பதாக யாழ்ப்பாணம் மாநகர சபை முதல்வர் என்ற முறையில் மணிவண்ணன் நேற்று முன்தினம் (7 ஏப்ரல்) தெரிவித்திருந்தார்.

இதன்படி, யாழ். மாநகர எல்லைக்குள் பொது இடங்களில் குப்பை கொட்டுபவர்களுக்கு 5000 ரூபாவும், வெற்றிலை எச்சில் துப்புவோருக்கு 2000 ரூபாவும் தண்டப்பணம் விதிக்க நடவடிக்கை எடுத்ததாக அவர் குறிப்பிட்டிருந்தார்.

யாழ். மாநகர காவல்படை

இந்த நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக யாழ். மாநகர காவல்படை என்ற பெயரில் குழுவொன்றையும் அவர் அமைத்திருந்தார்.

இந்த குழு, ஐந்து பேரை கொண்டதாக அமைக்கப்பட்டிருந்தது.

இவ்வாறு அமைக்கப்பட்ட குழுவிற்கு சீருடையொன்றும் வழங்கப்பட்டது. அந்த சீருடை அணிந்த குழுவினர் புகைப்படங்கள் கடந்த இரு தினங்களாக சமூக வலைத்தளங்களில் அதிக அளவில் பகிரப்பட்டன.

இந்த குழுவிற்கு வழங்கப்பட்ட சீருடை, தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் காவல்துறை சீருடை போலவே இருப்பதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருந்தன.

இந்த நிலையில், குறித்த சீருடை தொடர்பில் மணிவண்ணன், ஊடகங்களுக்கு தமது தெளிவூட்டல்களை வழங்கியிருந்தார்.

மணிவண்ணன் விஸ்வலிங்கம் கைது குறிப்பு

யாழ். மாநகரை சுத்தமாக வைத்திருக்கும் நோக்குடன், மாநகர சபையினால் தீர்மானமொன்று நிறைவேற்றப்பட்டு, அந்த தீர்மானம் வர்த்தமானி ஊடாக அறிவிக்கப்பட்டதாகவும் அவர் கூறியிருந்தார்.

இந்த நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக விசேட குழுவொன்றையும் தாம் அமைத்திருந்ததாக அவர் குறிப்பிடுகிறார்.

குறித்த அதிகாரிகளை மக்கள் இலகுவாக அடையாளம் கண்டுக்கொள்ளும் வகையிலேயே தாம் இந்த சீருடையை அறிமுகப்படுத்த தீர்மானித்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

கொழும்பு மாநகர சபை ஊழியர்களின் சீருடையை அவதானித்து, அதே போன்றே, தமது ஊழியர்களுக்கும் இந்த சீருடையை அறிமுகப்படுத்தியதாக அவர் குறிப்பிடுகிறார்.

இதைதவிர, குறித்த சீருடையை அறிமுகப்படுத்துவதற்கு வேறு எந்தவொரு உள்நோக்கமோ அல்லது வேறு எந்தவொரு திட்டமோ கிடையாது என மணிவண்ணன் தெரிவிக்கிறார்.

இந்த சீருடை, விடுதலைப் புலிகளின் காவல்துறை சீருடையுடன் பொருந்தியிருக்கக்கூடும் என கூறிய அவர், தான் கொழும்பு மாநகர சபை ஊழியர்களின் சீருடைக்கு ஒத்ததாகவே இந்த சீருடையை வழங்கியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

பயங்கரவாதத் தடுப்பு பிரிவு கைது

மணிவண்ணன் விஸ்வலிங்கம் கைது

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் காவல் துறை சீருடைக்கு ஒத்ததான சீருடையை வழங்கியமை குறித்து விசாரணைகளை நடத்துவதற்காக மணிவண்ணன், யாழ்ப்பாணம் போலீஸ் நிலையத்துக்கு நேற்றிரவு 8 மணிக்கு அழைக்கப்பட்டார்.

இவ்வாறு அழைக்கப்பட்ட மணிவண்ணனிடம், பயங்கரவாதத் தடுப்பு பிரிவு சுமார் 6 மணிநேர விசாரணை நடத்தியுள்ளது.

விசாரணைகளின் பின்னர், மணிவண்ணன், பயங்கரவாதத் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டு, யாழ்ப்பாணத்திலிருந்து, வவுனியா பயங்கரவாதத் தடுப்பு பிரிவு அலுவலகத்திற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார்.

இலங்கையில் தடை செய்யப்பட்ட அமைப்பான, விடுதலைப் புலிகள் அமைப்பை உருவாக்க முயற்சித்த குற்றச்சாட்டின் கீழ், மணிவண்ணன் கைது செய்யப்பட்டுள்ளதாக, கைது செய்யப்பட்டமை குறித்து வழங்கப்படும் ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

BBC