‘அமைச்சர்களைக் குறையுங்கள், அரசு ஊழியர்களிடம் வாக்காஃப் கேட்காதீர்கள்’ – சட்டமன்ற உறுப்பினர்

நாடு பணத் தட்டுப்பாட்டில் இருப்பதாகப் பிரதமர் முஹைதீன் யாசின் கூறியதைத் தொடர்ந்து, டுரியான் துங்கால் சட்டமன்ற உறுப்பினர் மொஹமட் சோஃபி அப்துல் வஹாப் அமைச்சர்களின் எண்ணிக்கையைக் குறைத்து, அரசாங்கம் அமைச்சரவையை மாற்றியமைக்க வேண்டுமெனப் பரிந்துரைத்தார்.

சிறப்பு தூதர்களின் பதவிகளை நிறுத்துவதோடு, அரசாங்கத்துடன் இணைக்கப்பட்ட அமைப்புகளின் (ஜி.எல்.சி) தலைவர்களுக்கான கொடுப்பனவுகளையும் குறைக்க வேண்டும் என்றும் சோஃபி பரிந்துரைத்தார்.

“அரசாங்கச் செலவினங்களைக் குறைக்க அமைச்சரவையை மறுசீரமைப்பு செய்யுங்கள், அமைச்சர்கள் மற்றும் துணை அமைச்சர்களுக்கான செலவுத் தொகையை, நிச்சயமாக மக்களுக்கு உதவவும் நாட்டின் வளர்ச்சிக்கும் பயன்படுத்தப்படலாம்.

“ஜி.எல்.சி. தலைவர்களுக்கான கொடுப்பனவுகளை நிறுத்துவதோடு, சிறப்பு தூதர்கள் அனைவரையும் நீக்க வேண்டும், ஏனெனில் அவர்களின் எந்தச் செயல்பாட்டையும் நாம் காணவில்லை, சேவை வழங்காமலேயே அவர்களுக்குக் கொடுப்பனவுகளும் சம்பளமும் வழங்கப்படுகிறது,” என்று அவர் இன்று மலேசியாகினியிடம் கூறினார்.

முன்னதாக, 2021 வரவுசெலவுத் திட்டத்தில் RM600 பில்லியன் மற்றும் பாதிக்கப்பட்ட மலேசியர்களுக்கு உதவ பல தூண்டுதல் தொகுப்புகள் என அரசாங்கம் நிறையப் பணத்தைச் செலவழித்ததாக முஹைதீன் கூறினார்.

அதன் காரணமாக, இப்போது நாட்டில் அதிகப் பணம் இல்லை என்றார் அவர்.

மேலும் கருத்து தெரிவித்த சோஃபி, நாட்டின் பொருளாதாரத்திற்கு உதவுவதற்காக அரசு ஊழியர்கள் அவர்கள் சம்பளத்தை வழங்க ஊக்குவிப்பது அரசாங்கத்திற்கு பொருத்தமானதல்ல என்றார்.

அரசு ஊழியர்களை வாக்காஃப் (நன்கொடை) செய்ய ஊக்குவிப்பதற்கான அரசாங்கத்தின் முயற்சி குறித்து அவர் கருத்து தெரிவித்தார், குறிப்பாக வழக்கமான சம்பள விலக்குகளின் அடிப்படையில்.

வாக்காஃப் -இன் வழி, நாட்டின் பொருளாதாரத்திற்கு உதவுவதில் அரசு ஊழியர்கள் முக்கியப் பங்கு வகிக்க முடியும் என்று முஹைதீன் விளக்கினார்.

அமைச்சர்கள் மற்றும் துணை அமைச்சர்களுக்கு நியாயமற்ற தொகை வழங்கப்படும்போது, அரசாங்க அதிகாரிகளிடம் அவர்களின் சம்பளத்தை குறைக்குமாறு கேட்க வேண்டாம்.

“அரசு ஊழியர்கள் தங்கள் சம்பளத்தை வழங்க வேண்டும் என்று அரசாங்கம் முன்மொழிவதைவிட, அமைச்சரவையை மாற்றியமைப்பது நல்லது,” என்று அவர் விளக்கினார்.