‘மூன்றாவது பி.கே.பி. இல்லை’, பிரதமர் வணிகர்களுக்கு அறிவிப்பு

நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை (பி.கே.பி.) மூன்றாவது முறையாக செயல்படுத்த அரசாங்கம் விரும்பவில்லை என்று வணிகர் சங்கங்கள் மற்றும் வர்த்தக மன்றங்களுக்குப் பிரதமர் தெரிவித்தார்.

எவ்வாறாயினும், தொழில்துறையாளர்கள் செந்தர இயங்குதல் நடைமுறைகளுக்கு (எஸ்ஓபி) இணங்க செயல்படுவதை உறுதிப்படுத்த வேண்டும், குறிப்பாகப் பணியாளர் தங்குமிட வசதிகள் சம்பந்தப்பட்டவை என்றார்.

“தயவுசெய்து பாதுகாப்பான மற்றும் பொருத்தமான வசதிகளைத் தொடர்ந்து ஏற்பாடு செய்து வழங்கவும், இது நெரிசலை தடுக்கவும் தொழிலாளர் தங்குமிடங்களின் தூய்மையை மேம்படுத்த உதவுவதோடு, வைரஸ் பரவும் அபாயத்தையும் குறைக்க உதவும்.

“இது பி.கே.பியை மீண்டும் செயல்படுத்த அரசாங்கம் விரும்பவில்லை என்பதற்கான நினைவூட்டலாகும்.

“இருப்பினும், பரவலைத் தூண்டும் நிலையில் இருக்கும் சில இடங்களில் இலக்கு வைக்கப்பட்ட பி.கே.பி. செயல்படுத்தப்படும்,” என்றும் அவர் கூறினார்.