லைனாஸ் மீதான நிபந்தனைகளைக் கைவிடுமாறு கேட்டதில்லை – இராஜதந்திரி மறுப்பு

மலேசியாவிற்கான ஆஸ்திரேலிய உயர் ஆணையர் ஆண்ட்ரூ கோலெட்ஸினோவ்ஸ்கி, 2019-ஆம் ஆண்டில், லைனாஸ் மலேசியா (லைனாஸ்) மீதான உரிம நிபந்தனைகளைக் கைவிடுமாறு நாட்டின் பிரதமர் ஸ்காட் மோரிசன் டாக்டர் மகாதீர் முகமதுவிடம் கேட்டுக்கொண்டதாக வெளியான செய்திகளை மறுத்துள்ளார்.

லைனாஸுக்கு வழங்கப்பட்ட எந்தவொரு நிபந்தனையையும் நீக்கவோ மாற்றவோ ஆஸ்திரேலியா மலேசியாவிடம் கேட்கவில்லை; ஆனால் 2019 மற்றும் 2020-ஆம் ஆண்டுகளில், அந்நிறுவனத்திற்கு உரிமம் வழங்க புத்ராஜெயா எடுத்த முடிவை உண்மையில் வரவேற்றதாக அவர் கூறினார்.

“இந்தக் குற்றச்சாட்டு தவறானது. ஆகஸ்ட் 15, 2019 அன்று லைனாஸுக்கு வழங்கப்பட்ட ஆறு மாத உரிமத்தின் நிபந்தனைகளை நீக்கவோ மாற்றவோ ஆஸ்திரேலிய அரசு மலேசிய அரசாங்கத்திடம் கோரிக்கை வைக்கவில்லை.

“உண்மையில், ஆகஸ்ட் 2019-ல் லைனாஸுக்கு ஆறு மாத உரிமத்தையும், 2020 பிப்ரவரியில் மூன்று ஆண்டு உரிமத்தையும் வழங்க எண்ணிய மலேசிய அரசாங்கத்தின் முடிவை ஆஸ்திரேலிய அரசு வரவேற்றது.

“தனது உரிமத்தில் குறிப்பிடப்பட்டிருந்த புதிய நிபந்தனைகளைப் (கிடைக்கும்) பூர்த்தி செய்ய விரும்புவதாகவும் லைனாஸ் அறிவித்தது,” என்று அவர் மலேசியாகினிக்கு ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

ஆகஸ்ட் 21, 2019 அன்று, அப்போதையப் பிரதமராக இருந்த மகாதீர், எரிசக்தி, அறிவியல், தொழில்நுட்பம், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம் அமைச்சர் பதவியை வகித்த பக்ரி எம்.பி. இயோ பீ யின்-ஐ பதவி நீக்கம் செய்ய விரும்பியதாகக் கூறிய டிஏபி தலைவர் ஒருவரின் புத்தகத்தில் வெளியான கட்டுரை குறித்து கோல்ட்ஸினோவ்ஸ்கி இவ்வாறு கருத்து தெரிவித்தார்.

குவாந்தான், கேபேங்கில் செயல்படும் லைனாஸ் தொழிற்சாலை

லீயு சின் தோங்’கின் கூற்றுப்படி, லைனாஸ் பிரச்சினை மற்றும் பிறச் சுற்றுச்சூழல் பிரச்சினைகள் குறித்த இயோவின் உறுதியால் மகாதீரின் நோக்கம் உந்தப்பட்டது. இருப்பினும், எதிர்க்கட்சித் தலைவர்களின் வற்புறுத்தலுக்குப் பின்னர் மகாதீரின் நோக்கம் தொடரப்படவில்லை.

 

டிஏபி அரசியல் கல்வி இயக்குநரின் கூற்றுப்படி, அணுசக்தி உரிம வாரியம் (ஏஇஎல்பி) லைனாஸ் நிறுவனங்களுக்கு அரசாங்கத்திடமிருந்து உரிமம் பெற புதிய மற்றும் குறிப்பிடத்தக்க நிபந்தனைகளை அறிவித்த சில நாட்களில் இது நடந்தது.

அறிவியல் அடிப்படையிலான நியாயமான சான்றுகள்

இரண்டு மாதங்களுக்குப் பிறகு, நவம்பர் 2019-ல், தாய்லாந்து, பாங்காக்கில் 35-வது ஆசியான் உச்சநிலை மாநாட்டில் மகாதீர் மோரிசனைச் சந்தித்தார்.

அம்மாநாட்டில்தான், லைனஸ் மீது மலேசியா விதித்த நிபந்தனைகளை இரத்து செய்யுமாறு மோரிசன் கேட்டுக்கொண்டார் என மகாதீர் செய்தியாளர்களிடம் கூறியதாக பெர்னாமா செய்தி வெளியிட்டது. ​​

“அவர்கள் (ஆஸ்திரேலிய அரசாங்கம்) நாம் நிபந்தனைகளை கைவிடுவோம் என்று நம்புகிறார்கள்,” என்று மகாதீர் கூறினார்.

ஆகஸ்ட் 15, 2019 அன்று, லைனாஸ் நிறுவனங்களுக்கு அரசாங்கத்திடமிருந்து உரிமம் பெற புதிய மற்றும் குறிப்பிடத்தக்க – நிபந்தனைகளை ஏஇஎல்பி அறிவித்தது. ஏஇஎல்பி என்பது இயோ அமைச்சின் பொறுப்பில் உள்ள ஒரு நிறுவனமாகும்.

ஏஇஎல்பி வகுத்திருந்த நிபந்தனைகளில், லைனாஸின் அமிலத்தை முறித்து, தூய்மை செய்யும் வசதிகளை நான்கு ஆண்டுகளுக்குள் ஆஸ்திரேலியாவுக்கு நகர்த்த வேண்டும் என்பதும் அடங்கும்.

குவாந்தான், கேபெங்கில் உள்ள லைனாஸ் அரியப் பூமி பதப்படுத்தும் தொழிற்சாலையில் கதிரியக்கக் கழிவுகள் குவிந்ததற்கு இந்தச் செயல்முறையே காரணம்.

குறைந்த கதிர்வீச்சு அளவைக் கொண்டிருப்பதாகக் கூறப்படும் – காண்டிசோயில் (Condisoil) எனப்படும் உரமாக, அவற்றின் கழிவுகளை வணிகமயமாக்குவதற்கான திட்டங்களையும் லைனாஸ் கைவிட செய்ய வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டது.

அதுமட்டுமின்றி, 2012 முதல் உருவாக்கப்பட்டு 2023 வரை தொடரவுள்ள, அவற்றின் முறித்தல் மற்றும் தூய்மை செய்யும் செயல்முறை வசதிகளை ஆஸ்திரேலியாவுக்கு மாற்றும் வரை, அதனைச் சேமித்து வைக்க ஒரு நிரந்தர வைப்பு வசதியை (permanent deposit facility -PDF) லைனாஸ் உருவாக்க வேண்டும் என்றும் ஏஇஎல்பி நிபந்தனை விதித்தது.

 

நிபந்தனைகள் இறுதியில் உறுதி செய்யப்பட்டன.

கோல்ட்ஸினோவ்ஸ்கியின் கூற்றுப்படி, அறிவியலின் அடிப்படையில் மலேசியாவின் முடிவை அவர் பாராட்டினார், மேம்பட்ட உற்பத்தித் துறையில் தீவிர முதலீட்டிற்கு நாடு ஒரு பாதுகாப்பான இடமாக இருப்பதைக் குறிக்கிறது.

மலேசியாவில் தொழில்துறை கட்டுப்பாடு என்பது அரசாங்கத்தின் விஷயம் என்றாலும், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ஆய்வுகளின் அறிவியல் ஆதாரங்களின் அடிப்படையில் லைனாஸ் குறித்த முடிவுகள் எடுக்கப்பட வேண்டும் என்று கோல்ட்ஸினோவ்ஸ்கி கூறினார்.

“ஆஸ்திரேலியா என்ன கேட்கிறது என்றால், அறிவியல் சான்றுகளின் அடிப்படையில் முடிவுகள் எடுக்கப்பட வேண்டும், மலேசிய மற்றும் சர்வதேச அரசாங்கங்களின் பல்வேறு ஆய்வுகளில் (லைனாஸ்) உள்ளார்ந்த அளவில் குறைந்த ஆபத்துடன், நன்கு நிர்வகிக்கப்படுகிறது என்பதையேக் காட்டுகிறது.

“லைனாஸ் ஊடகங்கள் உட்பட பொதுமக்கள் மத்தியில் பெரும் விவாதத்திற்கு உள்ளாகியுள்ளது. இது ஒரு சுதந்திரமான மற்றும் ஜனநாயக சமுதாயத்துடன் ஒத்துப்போகிறது.

“ஆனால் இந்த விவாதத்தில் பங்கேற்றவர்கள் – ஊடகங்கள் உட்பட – அவர்களின் உண்மைகளைத் துல்லியமாகப் பெற வேண்டும்,” என்று அவர் மேலும் கூறினார்.