தமிழக ஊழியர் துன்புறுத்தப்பட்டார், உணவகத்தில் சட்ட அமலாக்கத்தினர் சோதனை

மலேசியாவில் உள்ள ஓர் உணவகத்தில் பணிபுரிந்தபோது, தான் துன்புறுத்தப்பட்டதாக வெளிநாட்டவர் ஒருவர் கூறியதைத் தொடர்ந்து, உள்துறை அமைச்சு (கே.டி.என்.) மற்றும் மனிதவள அமைச்சின் (கே.எஸ்.எம்.) அமலாக்க அதிகாரிகள் பெட்டாலிங் ஜெயாவில் உள்ள ஓர் உணவகத்தில் சோதனை நடத்தினர்.

தற்போது இந்தியாவில் இருக்கும் வேலாயுதம் என்ற அந்த இந்தியர், சமீபத்தில் தமிழ்நாட்டில் நடந்த ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில், அவரும் மற்றொரு இந்திய நாட்டு ஊழியரும் உணவக உரிமையாளர்களில் ஒருவரால் துன்புறுத்தப்பட்டதாகக் கூறினார்.

உணவகத்தில் பணிபுரியும் போது தனது நண்பர் வன்புணர்ச்சிக்கு ஆளானார் என்றும் அவர் கூறினார்.

பெட்டாலிங் ஜெயா ஓல்ட் டவுனில் அமைந்துள்ள அந்த உணவகத்தில், நேற்று சோதனை நடத்தப்பட்டது.

வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகள் நடப்பதாகப் புகார்களைப் பெற்றதை அடுத்து, தாங்கள் அந்த உணவகத்தில் சோதனை நடத்தியதாகக் கே.எஸ்.எம். அதிகாரி ரோஸ்லான் தெரிவித்தார்.

இந்தச் சோதனை குறித்து அமைச்சு விரைவில் ஓர் அறிக்கையை வெளியிடும் என்றும் அவர் கூறினார்.

முன்னதாக, 2018-இல் அந்த உணவகத்தில் பணிபுரிந்ததாக வேலாயுதம் கூறினார்.

ஆறு மாதங்களுக்குள் பணி அனுமதி சீட்டு பெறலாம் என்ற வாக்குறுதியுடன், சுற்றுலா விசாவில், ஒரு முகவரால் அவர் மலேசியாவுக்கு அழைத்து வரப்பட்டதாக அவர் சொன்னார்.

இருப்பினும், முகவர் தனது வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என்றார் அவர்.

“நான் அடிக்கடி தாக்கப்பட்டேன், சம்பளப் பணம் கொடுக்காமல், என்னை அடைத்து வைத்தனர். எனது கடப்பிதழும் எரிக்கப்பட்டது.

“என்னுடன் வேலை செய்த சக ஊழியரின் நிலை இன்னும் மோசமானது. அவர் வன்புணர்ச்சிக்கு ஆளாக்கப்பட்டார், மேலும் அவர் மீது பெட்ரோல் ஊற்றி எரித்தனர்,” என்று ‘நேர்கொண்டப் பார்வை’ எனும் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் வேலாயுதம் கூறினார்.

இருப்பினும், அங்கிருந்து தப்பித்து, 2019-ஆம் ஆண்டின் தொடக்கத்தில், இந்தியாவுக்குத் திரும்பியதாக அவர் கூறினார்.

இது குறித்து கருத்து தெரிவிக்க, சம்பந்தப்பட்ட உணவகத்தை மலேசியாகினி தொடர்பு கொள்ள முயற்சிக்கிறது.