‘அரசியல் நியமனங்கள் நம்பகத்தன்மையை, பல்கலைக்கழகத்தின் பிம்பத்தைப் பாதிக்கின்றன’

தகுதி இல்லாத அரசியல் நியமனங்கள் தொடர்ந்து அனுமதிக்கப்பட்டால், உயர்க்கல்வி நிறுவனங்களின் (ஐபிடிஏ) நம்பகத்தன்மையும் பிம்பமும் பாதிக்கப்படும் என்று பக்காத்தான் ஹராப்பான் (பிஎச்) கல்விக்குழு தெரிவித்துள்ளது.

“ஐபிடிஏ-க்களில் உள்ள பதவிகளைத் தேசியக் கூட்டணி (பிஎன்) அரசியல் பிரதிநிதிகளுக்குத் தகுதி அடிப்படையில் இல்லாமல் விநியோகிப்பது, உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் ஐபிடிஏ-க்களின் பிம்பத்தையும் நம்பகத்தன்மையையும் மோசமடையச் செய்யும்.

“கோவிட் -19 தொற்றுநோயை எதிர்கொண்டுள்ள இந்தத் தருணத்தில், உயர்க்கல்வி நிறுவனங்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளுக்குத் தீர்வுகாண, உயர்க்கல்வி அமைச்சு (கேபிதி) முற்போக்காக, புதுமையாக சிந்தித்து செயல்படாமல் இருப்பதற்கான காரணம் என்ன என்பதற்கு இந்த நிலைமை பதிலளிக்கிறது,” என்று அக்குழு நேற்று ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

முன்னதாக, மலேசியாகினியின் ஆய்வில், தேசியக் கூட்டணி (பிஎன்) அரசாங்கத்துடன் தொடர்புடைய குறைந்தது 13 பேர் பொது பல்கலைக்கழகங்களில் பல பதவிகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.

இப்ராஹிம் ஷா அபு ஷா

“உயர்க்கல்வி அமைச்சு, 2015-2025 கல்வி மேம்பாட்டுத் திட்டத்தில் (உயர்க்கல்வி) குறிப்பிட்டுள்ளதைத் தெரிந்துகொள்ள வேண்டும், இது எல்.பி.யு. உறுப்பினர்களை அவரவர் திறன்களின் படி நியமிக்க வேண்டியதன் அவசியத்தையும், அமைக்கப்பட்டுள்ள ‘திறன்-தொகுப்புகளையும்’ கோடிட்டுக் காட்டுகிறது, அத்தகையத் திறன் கொண்டவர்களாலேயே உயர்க்கல்வி பொது நிறுவனங்களை இயக்க முடியும் .

“பிஎன்-இன் அரசியல் உறுப்பினர்களை அடிப்படையாகக் கொண்ட நியமனங்கள், பல்கலைக்கழகத்தின் முன்னேற்றத்தைச் சீர்குலைக்கும்,” என்று அவர் மேலும் கூறினார்.

எனவே, நாட்டின் கல்வியின் நம்பகத்தன்மையையும் நல்ல பெயரையும் பேணுவதற்காக இந்த நியமனத்தை மறுஆய்வு செய்யுமாறு பிஎச் கல்விக் குழு உயர்க்கல்வி அமைச்சை வலியுறுத்துகிறது.

ஒரு தனி அறிக்கையில், மாரா தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் (யுஐடிஎம்) 20 முன்னாள் மாணவர் சங்கங்கள், இப்ராஹிம் ஷா அபு ஷா மற்றும் மொஹமட் சாசிலி ஷாஹிபி ஆகியோரின் நியமனங்களுக்கு ஆதரவு தெரிவித்தன.

அம்னோ கல்வி பணியகத்தின் தலைவராக இருக்கும் இப்ராஹிம், யுஐடிஎம் இயக்குநர்கள் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டார்.

செலாயாங் அம்னோவின் துணைத் தலைவர், மொஹமட் சசிலி பல்கலைக்கழகத் துணை துணைவேந்தராக (மாணவர் விவகாரங்கள்) நியமிக்கப்பட்டுள்ளார்.

“யுஐடிஎம் முன்னாள் மாணவர்கள் எப்போதும் கேபிதி-யின் தகுதிவாய்ந்த மற்றும் அனுபவம் வாய்ந்தவர்களின் நியமனங்களை ஆதரிக்கிறோம், குறிப்பாக எங்கள் ‘தரப்பை சார்ந்தவர்கள்’ (யுஐடிஎம் டிஎன்ஏ).

“அவர்கள் எந்த அரசியல் கட்சியில் உறுப்பினர்களாக இருக்கிறார்கள் என்பது இப்போது எங்களுக்குத் தேவையில்லாதது. அம்னோ, பாஸ், பி.கே.ஆர்., பெர்சத்து, அமானா, வாரிசான், ஜி.பி.எஸ். மற்றும் யுஐடிஎம் முன்னாள் மாணவர்களைக் கொண்ட பிற கட்சிகளைச் சேர்ந்த அரசியல் தலைவர்கள் குறித்து நாங்கள் மிகவும் பெருமைப்படுகிறோம்,” என்று அவர்கள் சொன்னார்கள்.

அவர்களைப் பொறுத்தவரை, 2001 முதல் 2009 வரை யுஐடிஎம்-இன் மிக நீண்ட கால துணைவேந்தராக இப்ராஹிம் உள்ளார். எனவே, விரிவான அனுபவம் கொண்ட அவர், பல்கலைக்கழக இயக்குநர்கள் குழுவிற்குத் தலைமை தாங்க தகுதியுடையவர்.

சி.எம்.ஓ. ஆசியா மற்றும் 2018 உலகக் கல்வி காங்கிரஸ் வழங்கிய, ஆசியக் கல்வி தலைமைத்துவ விருதைப் பெற்றவர்களில் மொஹமட் சாசிலியும் ஒருவர்.

“யுஐடிஎம் முன்னாள் மாணவர்களான அவர்கள் இருவருக்கும் முழு தகுதிகள் இருப்பதாகவும், மலேசியாவில் உயர்க்கல்வியின் தேவைக்கு ஏற்ப யுஐடிஎம்-ஐ மிகச் சிறந்த நிலைக்கு கொண்டு வர அவர்களால் முடியும் என்றும் நாங்கள் நம்புகிறோம்,” என்று அவர்கள் மேலும் தெரிவித்தனர்.