சீனாவை ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் நூறாவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, இலங்கையில் புதிய 1,000 ரூபாய் நாணயக் குற்றி, செவ்வாய்க்கிழமை (ஜூலை 06) வெளியிடப்பட்டது.
சர்வதேச ரீதியில், நாடுகளுக்கு இடையிலான இராஜதந்திர உறவை மேம்படுத்தும் நோக்கில், இன்னொரு நாட்டின் பெருமையான விடயங்கள் குறித்து, மற்றொரு நாடு, தன்னுடைய கௌரவங்களை வெளிப்படுத்துவது உண்டு.
ஆனால், ஒரு நாட்டை ஆளும் கட்சியொன்றைக் கௌரவப்படுத்தும் நோக்கில், இன்னொரு நாட்டில் நாணயக் குற்றி வெளியிடப்படுவது ஆச்சரியமானது. ஏனெனில், இராஜதந்திர உறவு அல்லது, வெளிநாட்டு உறவு என்பது, அரசுகளுக்கு இடையிலான ஒன்றாகவே பார்க்கப்பட்டு வந்திருக்கின்றது. கட்சிகள், அமைப்புகள் உள்ளிட்ட கட்டமைப்புகளுடன், இன்னொரு நாடு உறவைப் பேணினாலும், அதைப் பெரிய கௌரவமாக வெளிப்படுத்துவது, அரசுகளின் நெறியல்ல. ஆனால், சீனக் கம்யூனிஸ்ட் கட்சியைக் கௌரவப்படுத்துவதற்காக நாணயக் குற்றி வெளியிட்டதன் மூலம், இலங்கை அரசு அதைச் செய்திருக்கின்றது.
பல நாடுகளும், நாணயங்களில் தங்களது தலைவர்களது படங்களைப் பொறிப்பதுண்டு. இந்திய ரூபாய்களில் காந்தியின் படம் இருக்கும். மன்னராட்சி அல்லது, அதையொத்த ஆட்சி முறையைக் கொண்ட நாடுகள், ஆட்சியிலுள்ள தலைவர்களின் படங்களையே பொறித்திருக்கின்றன. அவ்வாறானதொரு நிலையை, முள்ளிவாய்க்கால் மோதல்கள் முடிவுக்கு வந்த தருணத்தில், அப்போதைய மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கமும் செயற்படுத்தியது.
நீல வண்ணத்தில், மஹிந்த ராஜபக்ஷவின் படத்துடன் ஆயிரம் ரூபாய் பணத்தாள் வெளியிடப்பட்டது. அது, நாட்டு மக்கள் மத்தியில் ஒருவித எரிச்சலை உண்டாக்கியது. அதாவது, தங்களது உழைப்பைக் கொட்டி ஊதியமாகவோ, வருமானமாகவோ பெறும் பணத்தில், அரசியல் தலைவர் ஒருவர் அத்துமீறி அமர்ந்திருப்பது மாதிரியான உணர்வை, மக்களிடம் ஏற்படுத்தியது.
தேசத் தந்தையாக பார்க்கப்படும் மறைந்த தலைவர் ஒருவரது படம், பணத்தாள்களில் அச்சிடப்பட்டு இருப்பதற்கும், ஆட்சியிலுள்ள தலைவர் ஒருவர் பணத்தாள்களில் படமாக வலம் வருவதற்குமான வித்தியாசம் பெரியளவானது.
மஹிந்தவின் படத்தைத் தாங்கிய பணத்தாள்கள், மன்னராட்சிக்குரிய அம்சங்களில் ஒன்றாகப் பார்க்கப்பட்டது. ராஜபக்ஷர்கள் தோற்கடிக்கப்பட்ட 2015ஆம் ஆண்டுக்குப் பின்னரான காலப்பகுதியில், மஹிந்தவின் படத்தைத் தாங்கிய ஆயிரம் ரூபாய் பணத்தாள்கள், மெல்ல மெல்ல காணாமற்போயின. அது, வங்கிகளுக்கு ஊடாக, அரசாங்கத்தால் மீளப்பெறப்பட்டு இருக்கலாம். வெளிப்படையாக எந்த அறிவித்தலும் விடுக்கப்பட்டு இருக்கவில்லை. ஆனாலும் இன்றைக்கு அந்தப் பணத்தாள்கள், பாரியளவில் புளக்கத்தில் இல்லை.
தென் இலங்கையால், பிரிவினையைத் தோற்கடித்த தலைவராக, பௌத்த சிங்களத்தின் தலைவராக, துட்டகைமுனுவின் வாரிசாகப் பார்க்கப்பட்ட மஹிந்த ராஜபக்ஷவின் படம் அச்சிடப்பட்ட பணத்தாள்கள் மீதான அதிருப்தியே, பலமாக இருந்திருக்கின்றது. அப்படியான நிலையில், சீனாவை ஆளும் கட்சியொன்றுக்காக, நாணயக்குற்றியை வெளியிடுவது என்பது, ஏற்படுத்தும் அதிருப்திகள் சொல்ல முடியாதவை. தென் இலங்கையில் ராஜபக்ஷர்கள் மீதான அதிருப்தி, என்றும் இல்லாதளவுக்கு அதிகரித்து இருக்கின்றது. குறிப்பாக, நாட்டைச் சீனாவிடம் ஒட்டுமொத்தமாக அடகுவைக்கும் நிலைக்கு தற்போதைய ஆட்சியாளர்கள் கொண்டு சென்றுவிட்டார்கள் என்பது, அதற்கான காரணமாகும்.
வீதி அபிவிருத்திப் பணிகள், பாரிய கட்டட கட்டுமானப் பணிகள், குளங்கள் அபிவிருத்திப் பணிகள், கடலட்டை பிடிப்பு தொடங்கி, நாட்டின் அனைத்து தொழிற்றுறைக்குள்ளும் சீனா நுழைந்துவிட்டது.
நாட்டில் வேலையில்லாப் பட்டதாரிகளின் போராட்டம் என்பது, தொடர் கதையானது. ஒவ்வொரு தேர்தல் காலத்திலும் ஆட்சிக்கு வரத் துடிக்கும் கட்சிகள், வேலையில்லாப் பட்டதாரிகளுக்கான வாக்குறுதிகளைத் தேர்தல் அறிக்கையின் ஒரு சரத்தாகவே பேணுவதுண்டு.
கடந்த ஜனாதிபதித் தேர்தலில், கோட்டாபய ராஜபக்ஷவும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவும் கூட, வேலையில்லாப் பட்டதாரிகளுக்கான வாக்குறுதிகளை வழங்கி இருக்கின்றன. குறிப்பாக, ஒரு இலட்சம் இளைஞர் யுவதிகளுக்கு வேலை வாய்ப்பு என்கிற விடயத்தை முன்வைத்திருந்தன.
ஆனால், அப்படியான வேலை வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்கும் அளவுக்கு, அரசாங்கத்திடம் திட்டங்கள் ஏதும் இல்லை. ஏற்கெனவே முறையான திட்டங்கள் இன்றி, தேர்தல் நோக்கங்களுக்காக அரச பணியில் இணைக்கப்பட்ட இலட்சக்கணக்கானவர்கள் இருக்கிறர்கள். அவர்களுக்கான பணி, அதன் பொறுப்புப் பற்றியெல்லாம் எந்த வரையறையும் இல்லை. பலரும் பிரதேச செயலகங்கள், மாவட்டச் செயலகங்கள் உள்ளிட்ட அரச செயலகங்களில் பணியாளராக இணைக்கப்பட்டு இருக்கிறார்களே அன்றி, அவர்களுக்கான உண்மையான பணி என்ன என்பது குறித்த தெளிவு இல்லை.
மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் என்ற பெயரில் இணைக்கப்பட்ட ஆயிரக்கணக்கானவர்களின் நிலை, அதற்கு நல்ல உதாரணமாகும். அத்தோடு, தேவைக்கு அதிகமாக பணியாளர்களை அரச சேவையில் இணைத்துவிட்டு, அவர்களுக்கு ஊதியம் வழங்குவதற்காகவும் வெளிநாடுகளிடம் கையேந்தும் நிலையும் ஏற்பட்டிருக்கின்றது.
இப்படியான நிலையில், ஆக்கபூர்வமான வேலை வாய்ப்புகளின் பக்கம், இளைஞர் யுவதிகளைத் திருப்பாது, அந்த இடங்களில் வெளிநாட்டுப் பிரஜைகளைப் பணிக்கு அமர்த்திவிட்டு, சொந்த நாட்டு இளைஞர்களின் திறன்களை மழுங்கடிக்கும் வேலைகளை அரசாங்கம் செய்கின்றது.
நாட்டுக்குள் ஆயிரக்கணக்கான சீனப் பிரஜைகள் கட்டுமானப் பணியாளர்களாக, பொறியியலாளராக, ஒப்பந்தக்காரர்களாகப் பணியாற்றுகிறார்கள். அவர்கள் தொடர்பில், எவ்வாறான நெறிமுறைகளை அரசாங்கம் பேணுகின்றது என்ற தெளிவும் இல்லை. இந்நிலையில், தென் இலங்கையில், அரசாங்கத்துக்கு எதிரான அதிருப்தி பாரியளவில் எழுந்திருக்கின்றது. இக்கட்டத்தில்தான், சீனாவை ஆளும் கட்சியைக் கௌரவப்படுத்துவதற்காக நாணயமும் வெளியிடப்பட்டு இருக்கின்றது.
முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக யுத்தம் இடம்பெற்ற நாடு என்ற போதிலும், இலங்கை கடந்த ஆண்டு வரையில், மத்திய தர வருமானமுள்ள அபிவிருத்தி அடைந்து வரும் நாடாகவே கணிக்கப்பட்டது. ஆனால், இந்த ஆண்டு, அந்த இடத்திலிருந்து கீழிறக்கி, மிகவும் பின்தங்கிய மத்தியதர வருமானமுள்ள நாடாக இலங்கை தரப்படுத்தப்பட்டுள்ளது.
நாட்டின் வருமானம் என்பது, தொடர்ச்சியாக வீழ்ச்சியடையும் நிலையில், மக்களின் வாழ்க்கைத்தரம் மோசமாகி வருகின்றது. அதுவும், கொரோனா வைரஸ் பெருந்தொற்றால், வாழ்வாதாரச் சிக்கல்களோடு இருக்கின்ற மக்கள் மீது, பொருளாதாரக் கட்டுப்பாடுகள், வரிச்சுமைகள் பாரியளவில் ஏற்றி வைக்கப்படுகின்றன. நீண்டகாலத் திட்டங்கள் ஏதுமின்றி, பொருளாதாரக் கட்டமைப்பொன்றை தற்போதைய அரசு பேணுவதாலேயே, இவ்வாறான நிலை ஏற்பட்டு இருக்கின்றது.
இன்றைய அரசாங்கம், இந்த மாதம், இந்தக் கால எல்லைக்குள் இவ்வளவு பில்லியன் டொலர் மீளச் செலுத்தப்பட வேண்டிய கடன்கள் அல்லது அதற்கான வட்டி என்பதைச் சிந்தித்து, நாட்டின் பொருளாதாரத் திட்டங்களை வகுக்கின்றது. கடனை ஒரு தரப்பிடம் இருந்து வாங்கும் போது, அதை மீளச் செலுத்துவதற்கான வருமானத்தை எங்கிருந்து பெற்றுக்கொள்ளப் போகிறோம் என்ற சிந்தை, இலங்கையை ஆண்ட எந்த அரசாங்கத்துக்கும் இல்லை.
அதனாலேயே, ஒரு தரப்பிடம் வாங்கிய கடனைசச் செலுத்துவற்காக, இன்னொரு தரப்பிடம் கடன் வாங்கும் நிலை ஏற்பட்டு இருக்கின்றது. அமெரிக்க டொலர் ஒன்றுக்கு எதிரான, இன்றைய இலங்கை ரூபாயின் பெறுமதி 220 ரூபாய்கள் அளவில் இருக்கும் என்று கருதப்படுகின்றது. கடந்த இரு வாரங்களாக, டொலரின் பெறுமதி தொடர்பிலான வெளிப்படைத் தன்மையை இலங்கை மத்திய வங்கி வெளிப்படுத்தவில்லை. இவ்வாறான நிலைகளால், வாங்கிய கடன்களுக்காக, நாட்டை மெல்ல மெல்ல வெளிநாடுகளுக்கு எழுதிக் கொடுத்து வருகின்றார்கள்.
குறிப்பாக, இலங்கை சில தசாப்த காலங்களுக்குள், மீளச் செலுத்த முடியாத அளவு கடன்களை, சீனாவிடம் பெற்றிருக்கின்றது. அப்படியான நிலையில், கடன் கொடுத்தவர்கள் எஜமானர்களாவது இயல்பானது. அந்த எஜமானர்களை மகிழ்விப்பதற்காக, எந்த வேலையையும் செய்யும் நிலைக்கு, கடனாளிகள் செல்வார்கள். சீனக் கம்யூனிஸ்ட் கட்சியைக் கௌரவித்து வெளியிடப்பட்ட நாணயக்குற்றியும் அதன் ஓர் அம்சமேயாகும்.
புருஜோத்தமன் தங்கமயில்
TamilMirror