தேசிய டெங்கு நோய் ஒழிப்பு பிரிவு விடுத்துள்ள எச்சரிக்கை

2020 ஆம் ஆண்டுடன் ஒப்பிட்டுகையில் இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகமாகக் காணப்படுவதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

அதற்கமைய இவ் வருடத்தின் ஆரம்பத்திலிருந்து இன்று வியாழக்கிழமை வரை 16,497 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் தேசிய டெங்கு நோய் ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் தேசிய டெங்கு நோய் ஒழிப்பு பிரிவு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

ஜூன் மாதம் 2997 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதோடு, இம் மாதம் (நேற்று வரை) 3029 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

கொழும்பு, கம்பஹா, களுத்துறை, குருணாகலை, கண்டி, காலி, மாத்தறை, இரத்தினபுரி, கேகாலை மற்றும் அம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களில் அதிகளவான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

நாடளாவிய ரீதியில் அடையாளம் காணப்பட்டுள்ள டெங்கு நோயாளர்களில் , 70 சதவீதமானவர்கள் மேல் மாகாணத்தைச் சேர்ந்தவர்களாவர்.

தற்போது நிலவும் மழையுடன் கூடிய கால நிலை காரணமாக டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பதற்கான வாய்ப்பு அதிகமாக காணப்படுவதாகவும் எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு, மருத்துவ ஆய்வுக் கூடம், ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் டெங்கு நோய் பிரிவு ஆகியவற்றினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளுக்கமைய, டெங்கு நோயை பரப்பும் 4 வகையான வைரஸ்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றுள் 2, 3 ஆம் வகையைச் சேர்ந்த வைரஸ்களே நாட்டில் அதிகளவில் பரவியுள்ளன.

பல வருடகால இடைவெளிக்கு பின்னர் முதலாம் வகையைச் சேர்ந்த வைஸின் தாக்கமும் ஏற்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

இந்த வைரஸ்களின் செயற்பாடுகளில் மாற்றம் ஏற்படும் போது நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கான வாய்ப்பு காணப்படுவதால், பொது மக்கள் அது தொடர்பில் விசேட கவனம் செலுத்தி செயற்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

(நன்றி tamilwin )