நாட்டை மூடுமாறு கோரிய அமைச்சர்களை கடுமையாக எச்சரித்த மஹிந்த

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சி தலைவர்களுக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அமைச்சரவை கூட்டத்தில் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கொவிட் தொற்றினை தடுப்பதற்காக 3 வாரங்கள் நாட்டை மூடுமாறு ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பிவிட்டு அதனை ஊடகத்திடம் வழங்கிய கட்சி தலைவர்களையே மஹிந்த இவ்வாறு எச்சரித்துள்ளார்.

நேற்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இந்த கட்சி தலைவர்களுக்கு பிரதமர் கடுமையான அறிவுரைகளையும் வழங்கியுள்ளார்.

நாட்டை மூட வேண்டாம் என அமைச்சரவையில் இணக்கம் வெளியிட்டு, வெளியே சென்று எதிர்ப்பு வெளியிடுவது பொருத்தமான செயல் அல்ல என பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்ப்பு என்றால் வாயை மூடிக்கொண்டு இருக்காமல் அமைச்சரவையில் அதனை கூறியிருக்கலாம். ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியது தவறு இல்லை என்ற போதிலும் அதனை ஊடகங்களிடம் வழங்குவது தவறு என பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறு செயல்படுவதன் மூலம், அமைச்சரவையில் பேசுவதற்கு போதுமான ஜனநாயகம் இல்லை எனவும், அமைச்சர்களிடையே ஒற்றுமை இல்லை எனவும் மக்கள் உணர்கிறார்கள் என்று பிரதமர் கூறியுள்ளார்.

இம்முறை அமைச்சரவைக் கூட்டத்தில் ஜனாதிபதி கேட்டபாய ராஜபக்ஷ கலந்து கொள்ளாத நிலையில் பிரதமரின் தலைமையில் கூட்டம் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

(நன்றி TAMILWIN)