முல்லைப் பெரியாறு அணை பிரச்னையில், நேற்று இரண்டாவது நாளாக, 1 இலட்சம் பேர் கேரள- தமிழக எல்லையான குமுளியில் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கேரளா வனக்குழு பணிமனை, கயிறு மில் மற்றும் வாகனங்களுக்கு தீ வைத்தனர். தொடர்ந்து, அங்கு பதட்டமான சூழ்நிலை நிலவுகிறது.
முல்லைப் பெரியாறு அணை நீர் மட்டத்தை, 142 அடியாக உயர்த்த வேண்டும்; அணைக்கு மத்திய காவல்துறையினரை பாதுகாப்புக்கு நியமிக்க வேண்டும்; கேரள அரசு புதிய அணை கட்டும் திட்டத்தை கைவிட வேண்டும் என வலியுறுத்தி, கம்பம், கூடலூர் பொதுமக்கள், தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், கேரள சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம், கேரள அமைச்சர்களின் வரம்பு மீறிய பேச்சுக்கள், தேனி மாவட்ட மக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளன.
நேற்று முன்தினம், 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குமுளி நோக்கி ஊர்வலமாக சென்றனர். குமுளி எல்லையில், தமிழக காவல்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தி சமரசம் பேசி திருப்பி அனுப்பினர். இந்நிலையில், நேற்று காலை 9 மணிக்கு கூடலூரில் ஏராளமானோர் திரண்டனர். ஊர்வலமாக வந்த ஒரு பிரிவினர், கேரள வனத்துறை நடத்தி வந்த, விடியல் வனக் குழு பணிமனை உட்பட அனைத்து சொத்துக்களுக்கும் தீ வைத்தனர். கட்டடத்தையும் இடித்து தள்ளினர்.
பின், கூடலூர் அருகே, கேரள மாநிலம் கோட்டயத்தை சேர்ந்த, தோமச்சனின் கயிறு மில், அங்கிருந்த லாரி, வேன், டிராக்டர் உட்பட அனைத்துக்கும் தீ வைத்தனர். தீயை அணைக்க வந்த இரண்டு தீயணைப்பு வாகனங்களை கூடலூரில் ஆர்ப்பாட்டக்காரர்கள் தடுத்து திருப்பி அனுப்பினர்.
அவர்களை கட்டுப்படுத்த வந்த காவல்துறையினர் மீது, கல், செருப்புகள் வீசப்பட்டன. இதனால், காவல்துறையினர் ஒதுங்கிக் கொண்டனர். பின், ஊர்வலத்தினர் லோயர்கேம்ப் நோக்கி சென்றனர். தடுக்க முடியாத காவல்துறையினர் குமுளி நோக்கி செல்ல ஆர்ப்பாட்டகாரர்களை அனுமதித்தனர்.