இலங்கை நிதி ராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் எம்பி பதவியை ராஜநாமா செய்தார்

மப்றூக், இலங்கை

இலங்கையின் நிதி ராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால், தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜநாமா செய்துள்ளார்.

நாடாளுமுன்ற பொதுச் செயலாளர் தம்மிக தஸநாயக்கவிடம், இன்று திங்கட்கிழமை தனது ராஜிநாமா கடிதத்தை கப்ரால் ஒப்படைத்தார்.

மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஆளும் பொதுஜனபெரமுன கட்சியின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக 2020ஆம் ஆண்டு அஜித் நிவாட் கப்ரால் நியமிக்கப்பட்ட நிலையிலேயே, தற்போது அந்தப் பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.

மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்த காலப்பகுதியில் 2006ஆம் ஆண்டு தொடக்கம் 2015ஆம் ஆண்டு வரை, இலங்கை மத்திய வங்கியின் ஆளுநராக அஜித் நிவாட் கப்ரால் பதவி வகித்தார்.

பின்னர், கோட்டாபய ராஜபக்ஷ ஆட்சிக்கு வந்த பிறகு அமைந்த அரசாங்கத்தில் தேசியப்பட்டில் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்ட கப்ரால் -நிதி, மூலதனச் சந்தை மற்றும் அரச தொழில் முயற்சி மறுசீரமைப்பு ராஜாங்க அமைச்சராகவும் நியமனம் பெற்றார்.

இதேவேளை, மத்திய வங்கியின் ஆளுநர் பதவியைப் பொறுப்பேற்பதற்காகவே நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜிநாமா செய்வதாக அஜித் நிவாட் கப்ரால் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.மத்திய வங்கியின் ஆளுநராகப் பதவி வகித்து வரும் பேராசிரியர் டப்ளியு.டி. லக்ஷ்மன் தனது பதவியிலிருந்து இம்மாதம் 14ஆம் தேதி விலகவுள்ளதாக ஏற்கனவே அறிவித்துள்ளார்.

பேராசிரியர் லக்ஷ்மன் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநராக 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டார்.

தற்போது 80 வயதாகும் பேராசிரியர் லக்ஷ்மன் ஓய்வுபெறவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இது இவ்வாறிருக்க, அஜித் நிவாட் கப்ரால் ராஜிநாமா செய்தமையினை அடுத்து ஏற்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வெற்றிடத்துக்கு ஜயந்த கெட்டாகொட நியமிக்கப்படவுள்ளார் என பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

தற்போதைய அரசாங்கத்தில் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக ஏற்கனவே நியமிக்கப்பட்ட ஜயந்த கெட்டாகொட; மஹிந்த ராஜபக்ஷவின் சகோதரரான தற்போதைய நிதியமைச்சர் பஸில் ராஜபக்ஷ நாடாளுமன்ற உறுப்பினர் ஆகுவதற்காக, தனது பதவியை சில மாதங்களுக்கு முன்னர் ராஜிநாமா செய்திருந்தார்.

இந்த நிலையில், மீண்டும் ஜயந்த கெட்டாகொட நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

(நன்றி BBC TAMIL)