இலங்கை விவகாரம்! – ஐ.நாவில் அதிருப்தி வெளியிட்ட பிரித்தானியா தலைமையிலான குழு

இலங்கையில் தற்போதைய மனித உரிமை முன்னேற்றங்கள், பொறுப்புக்கூறல், பயங்கரவாத தடுப்புச் சட்டம் உட்பட விடயங்கள் தொடர்பில், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் இலங்கைக்கான முக்கிய குழுவில் அங்கம் வகிக்கும் கனடா, ஜெர்மனி, வடக்கு மாசிடோனியா, மலாவி, மொண்டினீக்ரோ மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகள் கவலையை எழுப்பியுள்ளன.

ஒரு விரிவான நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் செயல்முறையின் முக்கியத்துவத்தை தொடர்ந்து வலியுறுத்தி வருவதாக முக்கிய குழு குறிப்பிட்டுள்ளது.

நல்லிணக்கத்தை ஊக்குவிப்பதற்கும், காணாமல் போனோர் அலுவலகம் மற்றும் இழப்பீடுகளுக்கான அலுவலகத்தின் தொடர்ச்சியான வேலைகளை உறுதி செய்வதற்கும் இலங்கைக்கு அழைப்பு விடுப்பதாக ஜெனீவாவுக்கான இங்கிலாந்தின் தூதர் சைமன் மான்லி தெரிவித்துள்ளார்.

இலங்கையின் மையக் குழுவின் சார்பாக நடந்துகொண்டிருக்கும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் அமர்வில் அவர் இது தொடர்பான அறிக்கையை வெளியிட்டார்.

பொறுப்புக்கூறலில் வரையறுக்கப்பட்ட முன்னேற்றம் கூட ஏற்படாமைக் குறித்து தாம் ஏமாற்றம் அடைந்துள்ளதாக சைமன் மாலி குறிப்பிட்டார். 2008-2009 இல் 11 இளைஞர்கள் காணாமல் போனது தொடர்பான வழக்கில் அண்மைக்கால விடயங்கள் கவலை அளிப்பதாக அவர் கூறியுள்ளார்.

(நன்றி Tamilwin)