இலங்கையின் முழு கடனையும் அடைக்க இதுவே ஒரே வழி! – அமைச்சர் வெளியிட்ட தகவல்

இலங்கை எதிர்கொள்ளும் வெளிநாட்டு கடன் நெருக்கடியிலிருந்து விடுபடுவதற்கான ஒரே வழி மன்னார் கடற்படுகையில் எண்ணெய் மற்றும் எரிவாயுவை ஆராய்வதுதான் என்று எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

அத்துடன், இலங்கை தற்போது 47 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு கடன்பட்டிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். கட்டுநாயக்க விமான நிலையத்தில் உள்ள சிறப்பு விருந்தினர் அறையில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் இந்த கருத்துக்களை தெரிவித்தார்.

மன்னார் பேசினில் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு வைப்புகளை ஆராயும் தொழில்நுட்பம் இலங்கையில் இல்லாததால், தற்போது சர்வதேச முதலீட்டாளர்களின் உதவியைப் பெற கவனம் செலுத்தப்படுகிறது.

இலங்கையின் மன்னார் கடற்படுகையில் தற்போது எம் -2 என அழைக்கப்படும் பரக்குடா பகுதியில் 2,000 மில்லியன் பீப்பாய்கள் கச்சா எண்ணெய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் மதிப்பு 150 பில்லியன் அமெரிக்க டொலர்கள்.

அத்துடன், இந்த பேசில் 9 டிரில்லியன் கன அடி வாயு இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவற்றின் மதிப்பு 17 பில்லியன் அமெரிக்க டொலர்கள் ஆகும். எனவே இந்த பெட்ரோலியம் மற்றும் எரிவாயு விற்பனையிலிருந்து நாம் 167 பில்லியன் அமெரிக்க டொலர்களை சம்பாதிக்க முடியும்,இது நமது நாட்டின் மொத்த வெளிநாட்டு கடனை திருப்பிச் செலுத்தும்போது 120 பில்லியன் அமெரிக்க டொலர்களை மீதப்படுத்தும் என அமைச்சர் உதய கம்மன்பில கூறியுள்ளார்.

இலங்கையில் எண்ணெய் மற்றும் எரிவாயு வளங்களை ஆராய்வது ஒரு முக்கியமான தருணத்தை எட்டியுள்ளது. இந்நிலையில், அடுத்த மாதம் நாடாளுமன்றத்தில் பெட்ரோலிய மேம்பாட்டுச் சட்டம் நிறைவேற்றப்பட்ட பிறகு பெட்ரோலிய மேம்பாட்டு ஆணையம் இதற்காக நிறுவப்படும் என்று அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.

(நன்றி TAMILWIN)