ஏதிஎம் ஆட்சேர்ப்புக்கு இன அடிப்படையிலான ஒதுக்கீடு இல்லை

மலேசிய ஆயுதப் படையில் (ஏதிஎம்) இணைய, இனம் சார்ந்த ஒதுக்கீடு இல்லை என்று அதன் தளபதி ஜெனரல் அஃபெண்டி புவாங் கூறினார்.

பாதுகாப்புப் படைகளில், ஒரே ஓர் இனத்திற்கு மட்டுமே வாய்ப்பு வழங்கப்பட்டது என்ற சமூகத்தின் அவப்பெயர் தவறானது, ஏனெனில் சேவைக்கான ஆட்சேர்ப்பு நிர்ணயிக்கப்பட்ட நிபந்தனைகளைப் பூர்த்தி செய்யும் விண்ணப்பங்களை அடிப்படையாகக் கொண்டது.

“தேர்வு மற்றும் ஆட்சேர்ப்பு செயல்பாட்டின் போது, ஏதிஎம் எந்த இனத்திற்கும் ஒதுக்கீடு செய்யவில்லை, எனவே ஏதிஎம் ஓர் இனத்திற்கு மட்டுமே என்ற எண்ணம் இல்லை.

கோலாலம்பூரில் உள்ள விஸ்மா பெர்விரா ஏதிஎம்-இல், இன்று 88-வது ஏதிஎம் தினத்துடன் இணைந்த ஒரு சிறப்பு நேர்காணலில், “இன அல்லது மத வேறுபாடுகளை கணக்கில் கொள்ளாமல், தேர்வுகள் நியாயமாகவும் வெளிப்படையாகவும் நடத்தப்படுகின்றன,” என்றார் அவர்.

நுழைவின் பகுப்பாய்வு அடிப்படையில், 2017 முதல் 2020 வரையில், மலாய் அல்லாத வேட்பாளர்கள் வருடத்திற்கு 20 முதல் 25 விழுக்காடு வரை இராணுவச் சேவையில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்று அஃபாண்டி தெளிவுபடுத்தினார்.

“2016 முதல் 2020 வரையில், அரச மலேசியக் கடற்படையின் இளம் வீரர்கள் எண்ணிக்கை 18 விழுக்காடு அதிகரித்துள்ளது.

“2019-இல் அரச மலேசிய விமானப்படைக்கு, மொத்த விண்ணப்பத்தில், சேர்க்கை விண்ணப்பங்கள் 19.5 விழுக்காடு, கடந்த ஆண்டு இது 24 விழுக்காடாக அதிகரித்தது,” என்று அவர் கூறினார்.

இன்றுவரை, ஆயுதப்படைகளில் பணியாற்றிய மலாய்க்காரர் அல்லாதவர்களின் மொத்த எண்ணிக்கை படை பலத்தில் 14.49 விழுக்காடு என்று அஃபாண்டி கூறினார்.

“மலாய்க்காரர் அல்லாதவர்களின் பங்களிப்பு அதிகம் இல்லை என்றாலும், நாட்டின் அமைதி, பாதுகாப்பு மற்றும் இறையாண்மையை உறுதி செய்வதற்காக அவர்கள் ஆற்றியப் பங்கு மற்றும் பங்களிப்பு மிகவும் அர்த்தமுள்ளதாக உள்ளது,” என்று அவர் கூறினார்.

ஏதிஎம் மதம் மற்றும் இனம் ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல், பாதுகாப்புப் படையில் சேர இளைஞர்களை ஈர்க்கும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபடுவதாகவும் அவர் கூறினார்.

“இயங்கலை விளம்பரங்களை மேற்கொள்வது மற்றும் முகநூல், படவரி மற்றும் கீச்சகம் போன்ற சமூக ஊடக அறிவிப்புகள் மற்றும் ஒவ்வொரு சேவையிலிருந்தும் வலைத்தளங்களை விரிவுபடுத்துதல் ஆகியவை இதில் அடங்கும்.

“அது தவிர, சீன மற்றும் தமிழ் தேசிய வகை பள்ளிகளிலும், பல்கலைக்கழகங்களிலும், பாதுகாப்பு அமைச்சு, பொது மற்றும் தனியார் நிறுவனங்களால் ஏற்பாடு செய்யப்பட்ட கண்காட்சிகள் மற்றும் தொழில் பேச்சுவார்த்தைகள் மூலம் விளம்பர நடவடிக்கைகள் நடத்தப்பட்டன,” என்று அவர் கூறினார்.

“ஏதிஎம்-இல் சேருவதற்கான வாய்ப்புகள் மற்றும் நன்மைகள் குறித்த ஆர்வத்தையும் தகவலையும் வளர்ப்பதற்காக பள்ளிகள் மற்றும் பிற தொடர்புடைய நிறுவனங்களுக்குச் சிற்றேடுகள் மற்றும் துண்டு பிரசுரங்களை விநியோகிப்பதன் மூலமும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

“ஏதிஎம் அரசு நிறுவனங்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள், அரசு சாரா நிறுவனங்கள் மற்றும் பல்வேறு சங்கங்களுடன் நெருங்கிய தொடர்பில் உள்ளது,” என்றார் அவர்.