‘போரில் காணாமல் ஆக்கப்பட்டோர் கொல்லப்பட்டார்கள் என இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஏற்றுக்கொண்டாரா?’

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் ஆன்டோனியோ கூட்டரேஷிற்கும், இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தை, இலங்கை தமிழர் அரசியல் களத்தில் தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது.

இலங்கையின் உள்ளகப் பிரச்னைகள் நாட்டுக்குள்ளேயே உள்ளக பொறிமுறையினுடாக தீர்க்கப்பட வேண்டும், தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் வழக்கு விசாரணைகளின் பின்னரே விடுவிக்கப்படுவர், காணாமல் போனோருக்கு அவர்களது மரண சான்றிதழை வழங்குதல் போன்ற ஜனாதிபதியின் கருத்து தற்போது கடும் விமர்சனங்களை தோற்றுவித்துள்ளது.

ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையின் கூட்டத்தில் பங்குப்பற்றுவதற்காக அமெரிக்கா சென்றுள்ள ஜனாதிபதி, ஆன்டோனியோ கூட்டரேஷை கடந்த 19ம் தேதி சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தியிருந்தார்.

இந்த நிலையில், ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட கருத்துகள் குறித்து, தமிழர்கள் தமது விமர்சனங்களை வெளியிட்டு வருகின்றனர்.

போர் முடிவடைந்த 12 வருடங்கள் கடந்துள்ள நிலையில், காணாமல் போனோர் தொடர்பில் எவ்வித சாட்சியங்களும் இல்லாமையினாலேயே, அரசாங்கம் மரண சான்றிதழை வழங்க எண்ணியதாக அரசு தரப்பு கூறுகிறது. தமிழர்கள் மட்டுமளளது சிங்களவர்களும் இவ்வாறு காணாமல் போயுள்ளதாக அரசு தரப்பு கூறுகிறது.

காணாமல் ஆக்கப்பட்டோர் கொல்லப்பட்டுள்ளார்கள்?” – சுரேஷ் பிரமேசந்திரன்

காணாமல் ஆக்கப்பட்டோருக்கு மரண சான்றிதழை வழங்குவதாக ஜனாதிபதி வெளியிட்ட கருத்தின் ஊடாக, காணாமல் ஆக்கப்பட்ட அனைவரும் கொல்லப்பட்டுள்ளார்கள் என்ற முடிவுக்கு வர வேண்டியுள்ளதாக ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவிக்கின்றார்.

இலங்கையில் 1990களில் இருந்து, 2014 வரை வடக்கு – கிழக்குப் பகுதிகளில் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் காணாமல் போயிருப்பதாக சொல்லப்படுகிறது.

காணாமல் ஆக்கப்பட்ட அனைவரும் கொல்லப்பட்டு விட்டார்கள் என்பதனை, இலங்கை அரசாங்கம் திட்டவட்டமாக கூற வேண்டும் எனவும் அவர் கோருகின்றார்.

அவ்வாறு இலங்கை அரசாங்கம் இதனை திட்டவட்டமாக கூறும் பட்சத்தில், பல வருடங்களாக போராட்டங்களில் ஈடுபட்டு வரும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் தமது போராட்டங்களை கைவிடுவதற்கான சாத்தியம் உள்ளது.

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், சுமார் மூன்றரை வருடங்களுக்கு மேலாக தொடர் போராட்டங்களை அவர்களது உறவினர்கள் முன்னெடுத்து வருகின்றனர். இவ்வாறு போராட்டங்களை முன்னெடுத்த பெற்றோரில் பலர், உயிரிழந்துள்ளனர்.

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களை அழைத்து, காணாமல் ஆக்கப்பட்டோருக்கு ஏன்ன நேர்ந்தது என்பது தொடர்பில் பேசுவதற்கு ஜனாதிபதி இதுவரை முன்வரவில்லை என சுரேஷ் பிரேமசந்திரன் குறிப்பிடுகின்றார்.

ராணுவத்திடம் ஒப்படைத்தவர்கள், கொலை செய்யப்பட்டார்களா?” – எஸ்.சிறிதரன்

இறுதி யுத்தத்தில் கண்கண்ட சாட்சியாக ஒப்படைக்கப்பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்கப்படுவதென்றால், கைது செய்யப்பட்ட அனைவரும் கொலை செய்யப்பட்டார்களா? என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கேள்வி எழுப்பியுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன், நாடாளுமன்றத்தில் இந்த கேள்வியை எழுப்பியுள்ளார்.

ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்குவதாக நாட்டின் அதி உத்தம ஜனாதிபதி கூறுவது, பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கும் விடையா என அவர் கேள்வி எழுப்புகின்றார்.

ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பதனை கூற வேண்டும் என அவர் அரசாங்கத்தை கோருகின்றார்.

அத்துடன், அனைத்து கொலைகளையும் அரசாங்கமே செய்து விட்டு, அது தொடர்பில் அரசாங்கமே விசாரணை நடத்துவது என்றால், அதில் என்ன நியாயம் உள்ளது என அவர் கேள்வி எழுப்புகின்றார்.

இலங்கையில் காணாமல் ஆக்கப்பட்டோர் என்பவர்கள், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் என அவர் தெரிவிக்கின்றார்.

2008ம் ஆண்டு முதல் 2009ம் ஆண்டு வரையான காலம் வரை, முள்ளிவாய்க்காலில் கலைக்கப்பட்ட சுமார் 4 லட்சத்திற்கும் அதிகமானோர் கண்கண்ட சாட்சியமாக ஒப்படைக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.

இவ்வாறு கண்டகண்ட சாட்சியமாக ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டு, கைது செய்யப்பட்ட அனைவரும் கொலை செய்யப்பட்டுவிட்டார்களா? அதற்காகவா மரண சான்றிதழ் வழங்கப்படுகின்றது? என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஐநா தமிழர்களின் கோரிக்கை கண்டுக்கொள்ளப்படவில்லை” – அனந்தி சசிதரன்

யுத்தத்தில் பாதிக்கப்பட்ட தமிழர் தரப்பின் கோரிக்கையை ஐநாவில் எந்தவொரு தரப்பும் கண்டுக்கொள்ளவில்லை என ஈழத் தமிழர் சுயாட்சிக் கழகத்தின் செயலாளர் நாயகமும், வட மாகாண சபையின் முன்னாள் அமைச்சருமான அனந்தி சசிதரன் தெரிவிக்கின்றார்.

யுத்தத்தை நடத்தி, இன அழிப்பை மேற்கொண்ட அரசாங்கத்திடமே, பொறுப்புக்கூறலை கையளித்திருப்பது என்பது, பாதிக்கப்பட்ட தமக்கு பாரிய மன அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளதாக அவர் குற்றம் சாட்டுகிறார்.

மனித உரிமை விடயத்தில் நீதி கிடைக்காத நிலையிலேயே, தாம் ஐக்கிய நாடுகள் சபையை நாடியதாகவும் அவர் கூறுகின்றார்.

எனினும், ஐக்கிய நாடுகள் சபை தமக்கான நீதியை பெற்றுத்தரவில்லை என ஈழத் தமிழர் சுயாட்சிக் கழகத்தின் செயலாளர் நாயகம் அனந்தி சசிதரன் தெரிவிக்கின்றார்.

ஜனாதிபதியின் கருத்தை ஏற்றுக்கொள்ள முடியாது?” – எஸ்.கஜேந்திரன்

ராணுவத்திடம் சரணடைந்த பல்லாயிரக் கணக்கானவர்களுக்கு என்ன நடந்தது என உறவினர்கள் தேடிக் கொண்டிருக்கும் போது, ஐநா பொதுச் செயலாளரிடம் ஜனாதிபதி இவ்வாறு கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

காணாமல் ஆக்கப்பட்டோருக்கு மரண சான்றிதழ் வழங்குவதாக ஜனாதிபதி, ஐநா செயலாளரிடம் கூறிய கருத்தை, தாம் வன்மையாக கண்டிப்பதாகவும் அவர் கூறுகின்றார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பாதுகாப்பு செயலாளராக கடமையாற்றிய போதே, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள், ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.

இவ்வாறு ஒப்படைக்கப்பட்டவர்களுக்கு என்ன நேர்ந்தது என உறவினர்கள் தேடிக் கொண்டிருக்கும் போது, ஜனாதிபதி இவ்வாறு கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் கூறுகின்றார்.

அத்துடன், பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குவதாக கட்நத செப்டம்பர் மாதம் ஜெனீவாவில் இந்த அரசாங்கம் உறுதியளித்திருந்ததாகவும், அந்த உறுதிமொழி இதுவரை நிறைவேற்றப்படவில்லை எனவும் அவர் தெரிவிக்கின்றார்.

இந்த நிலையில், பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைவரும் விடுவிக்கப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

மரண சான்றிதழ் வழங்கும் முடிவு ஏன்? – இலங்கை அரசு விளக்கம்

போர் முடிவடைந்த 12 வருடங்கள் கடந்துள்ள நிலையில், காணாமல் போனோர் தொடர்பில் எவ்வித சாட்சியங்களும் இல்லாமையினாலேயே, அரசாங்கம் மரண சான்றிதழை வழங்க எண்ணியதாக அமைச்சரவை இணைப் பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவிக்கின்றார். பிபிசி தமிழ் வினவிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

யுத்தத்தின் போது பலருக்கு என்ன நேர்ந்தது என்பது குறித்து இன்று வரை கண்டுபிடிக்க முடியவில்லை எனவும் அவர் கூறினார்.

தமிழர்கள் மாத்திரமன்றி, சிங்களவர்களும் இவ்வாறு காணாமல் போனவர்களில் அடங்குவதாக அவர் தெரிவித்தார்.

நீண்ட காலமாக இதற்கு தீர்வு இல்லாமையினால், உறவினர்களின் உரிமைகள் இல்லாது போவதாகவே அரசாங்கம் கருதுகின்றது எனவும் அவர் கூறுகின்றார்.

இதன்படி, காணாமல் போனோருக்கான சாட்சியங்கள் இல்லாதவர்களுக்கு, மரண சான்றிதழை வழங்குவதே சரியானது என காணாமல் போனோர் அலுவலகமும் பரிந்துரை செய்துள்ளதாக அவர் குறிப்பிடுகின்றார்.

இவ்வாறான காரணங்களினாலேயே, அரசாங்கம் இவ்வாறான தீர்மானத்தை எட்டியுள்ளதாக அமைச்சரவை இணைப் பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவிக்கின்றார்.

(நன்றி BBC TAMIL)