இலங்கையில் மூன்று தசாப்த கால யுத்தத்தை நிறைவு செய்த தருணத்தில், பாதுகாப்பு செயலாளராக கடமையாற்றிய கோட்டாபய ராஜபக்ஷ, தற்போது நாட்டின் ஜனாதிபதியாக பதவி வகித்து வருகிறார்.
கோட்டாபய ராஜபக்ஷ 2019ம் ஆண்டு ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டிருந்த சந்தர்ப்பத்திலேயே, கோவிட் பரவல் உலகம் முழுவதும் தாக்கத்தை செலுத்த ஆரம்பித்திருந்தது.
இந்த நிலையில், கோவிட் பரவல் காரணமாக 2020ம் ஆண்டு நடைபெற்ற ஐநா பொதுச் சபைக் கூட்டத்தில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கலந்துகொள்ளவில்லை.
எவ்வாறாயினும், ஐநா பொதுச் சபைக் கூட்டத்தில் இந்த முறை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கலந்துகொண்டுள்ளார்.
யுத்தத்தை நிறைவு செய்த கோட்டாபய ராஜபக்ஷ மீது, தமிழர் தரப்பு பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்ற நிலையில், தமிழர்கள் தமக்கான தீர்வைப் பெறுவதற்கு ஐநா உள்ளிட்ட சர்வதேச சக்திகளை நம்பியுள்ளனர்.
இந்தப் பின்னணியில், இந்த முறை ஐநா தலைமைச் செயலாளரை, கோட்டாபய ராஜபக்ஷ கடந்த 19ம் தேதி சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
இந்த சந்திப்பின் போது, காணாமல் போனோருக்கு மரண சான்றிதழ் வழங்குதல், உள்நாட்டு பொறிமுறையின் கீழ் உள்ளக விசாணைகளை நடத்துதல், வழக்கு விசாரணைகள் நிறைவடைந்ததன் பின்னர் தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்தல் போன்ற விடயங்களை ஜனாதிபதி, ஐநா தலைமை செயலாளரிடம் கூறியிருந்தார்.
இதையடுத்து தமிழர்கள் தங்கள் எதிர்ப்பை வெளியிட ஆரம்பித்தனர்.
அத்துடன், இலங்கையின் உள்ளக பிரச்னைகள், நாட்டுக்குள்ளேயே உள்ளகப் பொறிமுறையினூடாக தீர்க்கப்பட வேண்டும் எனவும், அதற்காக புலம்பெயர் தமிழர்களுடனான பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுப்பதாகவும் ஜனாதிபதி, ஐநா தலைமை செயலாளரிடம் கூறியிருந்தார்.
அதேபோன்று, உள்நாட்டு போரை நிறைவு செய்த சந்தர்ப்பத்தில், பாதுகாப்பு செயலாளராக கடமையாற்றிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மீது தமிழர்கள் பல்வேறு யுத்தக் குற்றச்சாட்டுககளை முன்வைத்து வருகின்றனர்.
இவ்வாறான பின்னணியில், ஐநா பொதுச் சபைக் கூட்டத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பிரதான உரை, அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது.
கோட்டாபய ராஜபக்ஷ, நேற்றைய தினம் (22) ஐநா பொதுச் சபைக் கூட்டத்தில் தனது முதலாவது உரையை நிகழ்த்தியிருந்தார்.
எனினும், ஜனாதிபதியின் ஐநா உரையில் தமிழர்கள் குறித்தோ, தமிழர்களுக்கான தீர்வுத் திட்டங்கள் குறித்தோ, புலம்பெயர் தமிழர்களுக்கான அழைப்பு குறித்தோ எந்தவித கருத்தும் முன்வைக்கப்படாமை, தற்போது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளன.
மூத்த பத்திரிகையாளரின் பார்வை
ஜனாதிபதியின் இந்த உரை தொடர்பில் மூத்த பத்திரிகையாளரும், தமிழன் பத்திரிகையின் பிரதம செய்தி ஆசிரியருமான ஆர்.சிவராஜாவிடம் பிபிசி தமிழ் வினவியது.
ஐநா பொதுச் சபைக் கூட்டத்தில் உரை நிகழ்த்துவதற்காக தயாரிக்கப்பட்ட உரை வேறு எனவும், அங்கு சென்று நிகழ்த்திய உரை வேறொன்று எனவும் மூத்த பத்திரிகையாளரான ஆர்.சிவராஜா தெரிவிக்கின்றார்.
மாகாண சபை முறைமை, புதிய அரசியலமைப்பு, காணாமல் போனோர் விவகாரம், போன்றவை குறித்தே, ஜனாதிபதி உரை நிகழ்த்த திட்டமிட்டிருந்தார். குறிப்பாக புதிய அரசியலமைப்பின் ஊடான அரசியல் தீர்வு தொடர்பிலேயே ஜனாதிபதி பேச திட்டமிட்டிருந்த போதிலும், அவரது உரை இறுதித் தருணத்தில் மாற்றப்பட்டுள்ளது.
இந்த அரசாங்கம் ஆட்சி பீடம் ஏறிய தருணம் முதல் இதுவரை காலம் தமிழர் தரப்பு பிரச்சினைகளை தீர்ப்பதற்கு எந்தவித நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவில்லை.
புலம்பெயர் தமிழர்களை பேச்சுவார்த்தைகளுக்கு வருமாறு அழைப்பு விடுவதற்கு முன்னர், உள்நாட்டிலுள்ள தமிழ் மக்கள் பிரதிநிதிகளுடன் அடிப்படை பேச்சுவார்த்தையேனும் ஆரம்பிக்கப்பட வேண்டும்.
புலம்பெயர் தமிழர்கள் நாட்டிற்கு வரக்கூடாது, புலம்பெயர் தமிழர்களின் பெயர்கள் கறுப்பு பட்டியலிடப்பட்டுள்ளன என அரசாங்கம் கூறி வரும் நிலையில், அடிப்படை பேச்சுவார்த்தைகளின்றி திடீரென புலம்பெயர் தமிழர்களுக்கு அழைப்பு விடுப்பது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளக பிரச்சினைகளை உள்ளக மட்டத்தில் தீர்ப்போம் என்றால், முதற்கட்டமாக உள்நாட்டிலுள்ள தமிழ் மக்கள் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க வேண்டும்.
தமிழ் அரசியல் கைதிகளின் தலையில் துப்பாக்கியை வைத்து மிரட்டிய இராஜாங்க அமைச்சருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியாது உள்ள அரசாங்கம், எவ்வாறு இந்த பிரச்சினையை உள்ளக ரீதியில் தீர்க்கும் என்ற சந்தேகம் எழுவதுடன், எவ்வாறு உள்ளக பொறிமுறையை நம்புவது என்ற கேள்வியும் எழுகிறது,” என்று தெரிவித்தார் சிவராஜா.
“புலம்பெயர் தமிழர்களை அழைப்பது என்பது உலகத்திற்கு சொல்கின்ற ஒரு செய்தியாகவே இருக்கும் என்பதுடன், நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவற்கான திட்டமாக காணப்படுகின்றது.
இதன்படி, ஐநா பொதுச் செயலாளரிடம் கூறிய விடயங்களும், ஐநா பொதுச் சபை உரையில் வெளியிட்ட கருத்துக்களும் இரு விதமான கருத்துகளை பிரதிபலிக்கின்றன.
உள்நாட்டிலுள்ள மக்களுக்கு குறைந்த பட்ச அதிகாரங்களை வழங்கினால், புலம்பெயர் தமிழர்கள் அழைப்பின்றி;, நாட்டிற்கு வருகை தருவார்கள்.
பொருளாதாரத்தை சீரமைப்பதற்கு, முதலில் நாடு சரியான நிலைமையில் இருக்க வேண்டும்” என மேலும் தெரிவித்தார் ஆர்.சிவராஜா.
காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் பதில்
காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி வழங்காது, மரண சான்றிதழை வழங்குவதானது, மேலும் பிரச்னையை தோற்றுவிக்கும் என வடக்கு, கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கம் தெரிவிக்கின்றது.
ஐநா பொதுச் சபைக் கூட்டத்தின், தமிழர் பிரச்சினை குறித்து ஜனாதிபதி கருத்து தெரிவிக்காதமை தொடர்பில், ஐநா பொதுச் செயலாளர் கேள்வி எழுப்பியிருக்க வேண்டும்.
இந்த செயற்பாட்டின் ஊடாக, அனைத்து நாடுகளும் ஒன்றிணைந்து, தமிழர்களை ஏமாற்றுவதாகவே அவதானிக்கப்படுகின்றது.
அத்துடன், இவ்வாறான செயற்பாடுகள் தமக்கு சந்தேகத்தை ஏற்படுத்துவதாக அந்த சங்கம் கூறுகின்றது.
புலம்பெயர் தமிழர்களின் பதில்
பிரித்தானியாவில் வாழும் இலங்கை புலம்பெயர் தமிழரான ப.சுதர்சனிடம் பிபிசி தமிழ் இது தொடர்பில் வினவியது.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தொகையைக் குறைத்து, நீதி வழங்காமல், எந்த பதிலும் வழங்காமல், ஏதோ ஒரு சான்றிதழை, அதாவது இறந்துவிட்டதாகவோ கண்டுபிடிக்க முடியாதிருப்பதாகவோ ஒரு சான்றிதழை வழங்கி, கண்துடைப்பு நிதியைக் காட்டிவிட்டு, தாங்கள் நடத்திய இன அழிப்பை மூடிமறைக்க முற்படுகிறது இலங்கை அரசு.
இவர்களால் கடத்தப்பட்டுக் காணாமலாக்கப்பட்டவர்கள் கடைசி 20 வருடங்களில் மட்டும் பதினையாயிரத்துக்கும் மேல். அந்தத் தொகையைக் கூட ஒரு சில ஆயிரங்களுக்குள் குறைத்துவிடும் சதி முயற்சியாகவே இதைப் பார்க்கவேண்டும்.
காணாமலாக்கப்பட்டோருக்கான உள்ளகப் பொறிமுறையாக காணாமற்போனோருக்கான அலுவலகம் என்று மனித உரிமை உயர்ஸ்தானிகரும் கூறிவருவது கவலையளிக்கிறது.
அவர் அந்தக் கருத்தை மாற்றிக்கொள்ளவேண்டும். இதற்காக அனைத்து தமிழ் அமைப்புகளும், அரசியல்வாதிகளும் குரல்கொடுக்கவேண்டும். முழுமையான சர்வதேச கண்காணிப்பில் ஒரு பொறிமுறை உருவாக்கப்படவேண்டும். அப்படி உருவாக்கப்படும் பொறிமுறை ஒன்றிடமே மக்கள் தமது சாட்சியங்களை பயம் இல்லாமல் கையளிப்பார்கள். அந்தப் பொறிமுறை இயங்க வேண்டுமானால், இராணுவத் தலையீடும் அச்சுறுத்தலும் இருக்கக்கூடாது. தீர்வு, இராணுவம் வடக்கு கிழக்கில் இருந்து மீளப்பெறப்பட்டால் மட்டுமே சாத்தியமாகும்” என்று தெரிவித்தார்.
புலம்பெயர் சமூகம் தனது அரசோடு இணைந்து அபிவிருத்திப் பணியில் பயணிக்கத் தன்னோடு இசைந்துள்ளதாக ஒரு தோற்றப்பாட்டை இலங்கை ஒற்றையாட்சி அரசின் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வெளிப்படுத்தியிருக்கிறார்.
இதில் அவர் எந்தப் புலம்பெயர் சமூகத்தைக் குறிப்பிடுகிறார் என்பதும் தெளிவில்லை. தமிழ் புலம் பெயர் சமூகத்தைத் தான் அவர் சொல்கிறாரா என்பது எனக்குத் தெரியவில்லை. தமிழர்களைத் தான் அவர் சுட்டுகிறார் என்று எடுத்துக்கொண்டாலும், புலம்பெயர் தமிழர்களின் அமைப்புகளின் பெரும்பான்மைக் கருத்தைக் கொண்டிருப்பவர்களாக அவர்கள் இருக்கமுடியாது.
அப்படி ஏதாவது ஒரு அமைப்பு அதில் பங்குபற்றியிருந்தால் அது மக்கள் ஆதரவு இல்லாத ஏதோ ஒரு சில நபர்கள் நடத்துகிற ஒரு சிறிய குழுவாகவே இருக்க வாய்ப்பிருக்கிறது. அதுமட்டுமல்ல, வியாபார நோக்குடைய சில நபர்கள் இவ்வாறு ராஜபக்ஷக்களைச் சந்தித்துக் கைகுலுக்கிய படங்களை நாங்கள் முன்னரும் பார்த்திருக்கிறோம். இவர்கள் புலம்பெயர் ஈழத்தமிழர்களின் பிரதிநிதிகள் அல்ல.
ஐ.நா. மனித உரிமைப் பொறிமுறை இலங்கை அரசைக் கண்டிப்பது போல, ஆனால் அதேவேளை உள்ளகப் பொறிமுறை மூலம் இலங்கை அரசு ஏதோ செய்வது போல வெளிப்படுத்துவதற்கு மறைமுக அங்கீகாரத்தை வழங்குவது போலவும் தெரிகிறது. இது ஒரு ஆபத்தான திருப்பம். அதைப் புரிந்துகொள்ள முடிகிறது என்று கூறினார் சுதர்சன்.
ஜனாதிபதி ஊடகப் பேச்சாளரின் பதில்
ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளரிடம் முன்வைக்கப்பட்ட விடயங்கள், ஐநா உரையில் அவ்வாறே முன்வைக்கப்பட வேண்டும் என்பது கட்டாயம் கிடையாது என ஜனாதிபதி ஊடகப் பேச்சாளர் கிங்ஸ்லி ரத்நாயக்க தெரிவிக்கின்றார்.
பிபிசி தமிழுக்கு வழங்கிய பேட்டியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
பயங்கரவாதத்தை மீண்டும் இலங்கையில் தலைதூக்க இடமளிக்க மாட்டோம் என ஜனாதிபதி தனது உரையில் வெளியிட்ட கருத்தானது, தமிழர்களுக்கும் நியாயமான கருத்தாக அமைகின்றது.
தமிழர்களை மாத்திரம் பிரதிநிதித்துவப்படுத்தாது, இலங்கையர் என்ற விதத்தில், ஜனாதிபதி இந்த மாநாட்டை பிரதிநிதித்துவப்படுத்தி கலந்துக்கொண்டு கருத்து தெரிவித்துள்ளார்.
புலம்பெயர் தமிழர்களுக்கு ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளது, நேரடியாகவும், மறைமுகமாகவும் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணமாக அமையும் என ஜனாதிபதி ஊடகப் பேச்சாளர் குறிப்பிடுகின்றார்.
தமிழர்களுக்காக மாத்திரம் பதில் வழங்குவதற்காக ஜனாதிபதி ஐநா செல்லவில்லை. அனைத்து இலங்கையர்களையும் பிரதிநிதித்துவப்படுத்தியே அவர் ஐநா சென்றுள்ளார்.
வடக்கு தமிழ் மக்களை போன்று, தெற்கிலுள்ள சிங்கள மக்களும் தம்மை பற்றி ஜனாதிபதி பேசவில்லை என எதிர்பார்க்கக்கூடும். அதனாலேயே அவர் முழு இலங்கையர்கள் குறித்தும் தனது உரையில் கருத்துரைத்தார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, வடக்கிற்கும் ஜனாதிபதி, தெற்கிற்கும் ஜனாதிபதியே தவிர, சிங்கள மக்களுக்கு மாத்திரமான ஜனாதிபதி கிடையாது, தமிழர்கள் குறித்து விசேடமாக கருத்து தெரிவிக்க தேவையில்லை. ஏனெனில், தமிழர்களும் இலங்கையர்கள் என பார்க்க வேண்டும் என்ற அடிப்படையிலேயே ஜனாதிபதி கருத்து தெரிவித்தார்.
இனம் மற்றும் நிறம் என்பதை சுட்டிக்காட்டாது, இலங்கையர்கள் என்ற அடிப்படையிலேயே அவர் தனது உரையை ஆரம்பித்தார் என ஜனாதிபதி ஊடகப் பேச்சாளர் கிங்ஸிலி ரத்நாயக்க தெரிவித்தார்.
(நன்றி BBC TAMIL)