மக்களுக்கு முன் கூட்டியே அறிவுறுத்தல்களை வழங்கி, மக்களுக்கு அசெளகரியம் ஏற்படாத வகையில் சுகாதார பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என வவுனியா மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரும், வன்னிப் பாராளுமன்ற உறுப்பினருமான கு.திலீபன் தெரிவித்துள்ளார்.
வவுனியா வடக்கில் முன்னறிவித்தலின்றி மக்களை வழிமறித்து கொவிட் தடுப்பூசி அட்டைகளை பரிசோதித்தமை தொடர்பாக மக்கள் வழங்கிய முறைப்பாடு தொடர்பில் கேட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
வவுனியா வடக்கில் மக்களுக்கு எந்தவித முன்னறிவித்தலும் வழங்காது தடுப்பூசி அட்டைகள் பரிசோதித்து மக்களுக்கு அசௌகரியளத்தை ஏற்படுத்தியமை தொடர்பாக அப் பிரதேச மக்களால் எனக்கு தொலைபேசி மூலமாகவும், நேரடியாகவும் முறைப்பாடு வழங்கப்பட்டது. இது தொடர்பில் சுகாதார வைத்திய அதிகாரிகளுக்கு நான் அறிவுறுத்தவுள்ளேன். எந்த விடயமாக இருந்தாலும் பொது மக்களுக்கு அறிவுறுத்தல்களை முன் கூட்டியே வழங்கி பரிசோதனைகளை மேற்கொள்ளவும்.
அத்தியாவசிய தேவை கருதி நடமாடிய மற்றும் விவசாய நிலங்களுக்கு சென்று கொண்டிருந்த மக்களை வழிமறித்து கொவிட் பரிசோதனை இடம்பெற்றுள்ளது. பரிசோதனை என்பது உண்மையில் நல்ல விடயம். ஆனால் மக்களை அசௌகரியத்திற்குள் தள்ளிவிடக் கூடாது.
அதிலும் குறிப்பாக, அந்த சுகாதார அதிகாரி தடுப்பூசி போடப்பட்ட அட்டையைக் கூட கேட்டுள்ளார். அரசாங்கத்தினால் அவ்வாறான அறிக்கை எதுவும் இன்னும் வெளியிடப்படவில்லை. நான் புகைப்படங்களைப் பார்த்த போது மிகவும் வேதனையாக இருந்தது. வயலுக்கு சென்ற உழவு இயந்திரம் கூட மறித்து வைக்கப்பட்டு காத்திருக்க வேண்டி இருந்தது. கொவிட் தொடர்பில் நடைபெறவுள்ள கூட்டத்தில் சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு இது தொடர்பில் அறிவுறுத்தவுள்ளேன் எனவும் தெரிவித்தார்.
-வவுனியா தீபன்-
(நன்றி Adaderana.lk)