12 வயது சிறுவனுக்குத் தடுப்பூசி போடும் போது, ஒரு சுகாதாரப் பணியாளர், தவறாக ஒரு வெற்று மருந்தூசியைச் செலுத்தியது சமீபத்தில் ஒரு வீடியோவில் கசிந்தது.
செப்டம்பர் 30-ஆம் தேதி, மலாயா பல்கலைக்கழகத் (யுஎம்) தடுப்பூசி மையத்தில் (பிபிவி) இந்தச் சம்பவம் நடந்ததாக, ப்ரொடெக்ட் ஹெல்த் (ProtectHealth) நடத்திய முதற்கட்ட விசாரணையில் கண்டறியப்பட்டதாக சுகாதாரத் துணை அமைச்சர் டாக்டர் நூர் அஸ்மி கஸாலி கூறினார்.
மாலை 3.16 மணியளவில் நடந்த அச்சம்பவத்தில், தடுப்பூசி அடங்கிய மருந்தூசியுடன் அதே மேஜையிலிருந்த, பயன்படுத்தப்படாத ஒரு வெற்று மருந்தூசியைச் சுகாதார ஊழியர் தவறாக எடுத்துள்ளார்.
“ஓர் ஊசி மூலம், தடுப்பூசி பாட்டிலில் இருந்து தடுப்பூசி அகற்றப்படுவதைக் காண்பிப்பது மற்றும் தடுப்பூசி அடங்கிய மருந்தூசியைச் சிறுவனின் தாயாரிடம் காண்பிப்பது போன்ற பரிந்துரைக்கப்பட்ட நடைமுறைகளைச் சுகாதாரப் பணியாளர்கள் பின்பற்றியுள்ளனர்,” என்று அவர் இன்று ஓர் அறிக்கையில் கூறினார்.
கோவிட் -19 இளையர் நோய்த்தடுப்பு நடவடிக்கை குழுவின் (சிஐடிஎஃப்-ஏ) தலைவருமான டாக்டர் நூர் ஆஸ்மி, தடுப்பூசி அடங்கிய மருந்தூசியைக் காட்டிய பிறகு, சுகாதாரப் பணியாளர் ஊசி போடுவதற்கு முன்பாக கிருமிநாசினி செயல்முறைக்காக மருந்தூசியை மேசையில் வைத்தார் என்றார்.
“எனினும், அவர் தவறுதலாக காலி மருந்தூசியை எடுத்து சிறுவனின் கையில் ஓர் ஊசி போட்டார். முடிந்ததும், சுகாதாரப் பணியாளர் தனது தவறை உணர்ந்து, யுஎம் பிபிவி-இல் பணியில் இருந்த மருத்துவ அதிகாரியிடம் தெரிவித்தார்.
“இருவரும் உடனடியாக சிறுவனின் பெற்றோருடன் கலந்துரையாடினர். கொடுக்கப்பட்ட விளக்கத்தைப் புரிந்துகொண்ட பிறகு, சிறுவனின் பெற்றோர்கள் குறைந்த மருந்தளவு நடைமுறையின் படி, சிறுவனுக்கு வேறு கையில் தடுப்பூசி போட அனுமதித்தனர்,” என்று அவர் கூறினார்.
டாக்டர் நூர் ஆஸ்மி, குறைந்த மருந்தளவு செயல்முறை என்பது ஒரு மருத்துவ வழிகாட்டியாகும், இது முதல் மருந்தளவு போதுமானதாக இல்லை எனில், மறு மருந்தளவு தேவைப்பட்டால் எதிர்கையில் தடுப்பூசி போட பரிந்துரைக்கப்படுகிறது.
“இந்த சம்பவத்திற்கு சிஐதிஎஃப்-ஏ ஆழ்ந்த வருத்தம் தெரிவிக்கிறது மற்றும் சிரமத்திற்ககாக சம்பந்தப்பட்ட பெற்றோர் மற்றும் சிறுவனிடம் மன்னிப்பு கேட்க விரும்புகிறது.
“இந்தச் சம்பவம் பணியில் இருக்கும்போது ஏற்பட்ட பிழை அல்லது ‘மனிதப் பிழை’ என்று விவரிக்கப்பட்டுள்ளது. சுகாதார ஊழியர் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் மற்றும் பரிந்துரைக்கப்பட்ட நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது,” என்று அவர் கூறினார்.
அதேச் சம்பவம் மீண்டும் நிகழாமல் தடுக்க, ஊசி போடும்போது அதே மேஜையில் வேறு எந்த ஊசிகளும் இல்லை என்பதை உறுதி செய்வதன் மூலம் உள் நடைமுறையும் மேம்படுத்தப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.
-பெர்னாமா