பங்காளி கட்சி தலைவர்களின் அழைப்பை நிராகரித்த கோட்டாபய!

கொழும்பு நகருக்கு அருகே உள்ள வத்தளை – கெரவலப்பிட்டி மின் நிலையத்தின் பங்குகளை அமெரிக்க நிறுவனமொன்றுக்கு வழங்கிய ஒப்பந்தம் குறித்து பேச்சு நடத்த நேரம் ஒதுக்குமாறு ஆளும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியிலுள்ள 10 பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் விடுத்த வேண்டுகோளை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நிராகரித்துள்ளார்.

அரசியல் மற்றும் அரசின் கொள்கைகள் சம்பந்தப் பட்ட விடயங்களை பிரதமர் மகிந்த ராஜபக்ச மற்றும் நிதியமைச்சர் பசில் ராஜபக்சவுடன் பேசுமாறு  கோட்டாபய ராஜபக்ச பங்காளிக் கட்சிகளுக்கு கடிதமொன்றின்மூலம் அறிவித்துள்ளார்.

முன்னதாக, யுகதனவி மின் நிலைய விற்பனை குறித்து பேச்சு நடத்த நேரம் ஒதுக்குமாறு கோரி அரசின் 11 பங்காளிக்கட்சிகள் ஜனாதிபதிக்கு கடிதமொன்றை அனுப்பியிருந்தன.

அந்தக் கடிதத் திற்கு பதில் கடிதம் அனுப்பியுள்ள ஜனாதிபதி கோட்டாபய, பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் பிரதமரிடமும், நிதியமைச்சரிடமும் பேச்சு நடத்தவேண்டுமென குறிப்பிட்டுள்ளார்.

யுகதனவி மின் நிலையத்தின் 40 வீத பங்குகள் விற்பனை செய்யப்பட்டமை குறித்து அரசின் பங்காளிக்கட்சிகள் செப்டெம்பர் 23 ஆம் திகதி பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் பேச்சு நடத்தியிருந்தன. அந்த சந்திப்பில் திருப்தி இல்லை என்பதால் ஜனாதிபதியை சந்தித்துப் பேச இந்த கட்சிகள் தீர்மானித்தன. எனினும் அதுதொடர்பிலான கோரிக்கையையும் கோட்டாபய ராஜபக்ஷ நிராகரித்துள்ளார்.

இதேவேளை, அரசாங்கத்திற்குள் நிலவுகின்ற பிரச்சினைகள் குறித்து விரிவான பேச்சு நடத்த ஆளுங்கட்சியிலுள்ள தலைவர்களை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இந்த வார இறுதியில் சந்திப்பிற்கும அழைத்துள்ளார்.

(நன்றி Tamil win)