காணாமல் போன RM25 மில்லியன் : சம்பந்தப்பட்ட எம்ஏசிசி அதிகாரி போதைப்பொருள் கடத்தல்காரர் என்ற சந்தேகம்

மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் (எம்ஏசிசி) RM25 மில்லியன் பண இழப்பு வழக்கில் தொடர்புடைய முக்கியச் சந்தேக நபர், தற்போது போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டுகளிலும் விசாரிக்கப்படுகிறார்.

தடைசெய்யப்பட்ட பொருளை விநியோகிப்பதில், அந்த எம்ஏசிசி அதிகாரி ஈடுபட்டிருக்கலாம் என்பதற்கான அறிகுறிகளைக் கண்டுபிடிப்பதற்கு முன்பு, சந்தேக நபர் எரிமின் 5 மாத்திரைகள் வைத்திருந்ததாகக் கூறப்படும் விசாரணை அறிக்கையைக் காவல்துறை முதலில் திறந்துள்ளது.

இன்று, புக்கிட் அமான் போதைப்பொருள் குற்றவியல் புலனாய்வுத் துறை இயக்குநர் ரசருடின் ஹுசைனைத் தொடர்பு கொண்டபோது, அவர் சந்தேக நபர் கைது செய்யப்பட்டதை உறுதி செய்தார்.

சந்தேக நபர் தற்போது ஆபத்தான மருந்துகள் (சிறப்பு தடுப்பு நடவடிக்கைகள்) சட்டம் 1985 அல்லது எல்.எல்.பி.கே. என அழைக்கப்படும் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

“நாங்கள் எல்.எல்.பி.கே. பிரிவு 3 (1) -இன் கீழ் விசாரணை நடத்துகிறோம். நாங்கள் இரண்டு சாட்சிகளைக் கைது செய்துள்ளோம். எனவே, போதைப்பொருள் கடத்தலின் கூறுகள் இருப்பதை அதிலிருந்து பார்க்கலாம்.

“எம்ஏசிசி செய்த புகாரைத் தொடர்ந்து, அவர் (சந்தேகநபர்) முதலில் எரிமின் 5 மாத்திரைகள் மற்றும் போதைப்பொருளுக்கு நேர்மறையான சிறுநீர் சோதனையால் கைது செய்யப்பட்டார்.

“எரிமின் 5 மாத்திரைகள் மற்றும் மெத்தாம்பேட்டமைன் ஆகியவற்றை விநியோகிப்பதில் அவர் ஈடுபட்டிருப்பதாக நாங்கள் சந்தேகிக்கிறோம்,” என்று ரசாருடின் மலேசியாகினியிடம் கூறினார்.

ரசாருதீனின் கூற்றுப்படி, சந்தேக நபர் ஒரு வருடத்திற்கும் மேலாக போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கலாம் என்று போலீசார் நம்புகின்றனர்.

“அவர் இப்போது எல்.எல்.பி.கே.- யின் கீழ், 60 நாட்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். ஆனால், விசாரணை முடிய நாங்கள் 60 நாட்கள் வரை காத்திருக்க மாட்டோம், விசாரணை முடிவடைந்ததும் மேல் விசாரணைக்காக உள்துறை அமைச்சிடம் சமர்ப்பிப்போம்,” என்று ரசருதீன் கூறினார்.

‘முன்னாள் துறைத் தலைவர்’ ஒருவர் சம்பந்தப்பட்ட வழக்கில், அதிகார அத்துமீறல் மற்றும் முறைகேடு தொடர்பான விசாரணைகளுக்கு உதவ, கடந்த மாதம் ஆணையத்தால் கைது செய்யப்பட்ட மூன்று எம்ஏசிசி அதிகாரிகளில் சந்தேக நபரும் ஒருவர்.

எம்ஏசிசி-ஆல் கைப்பற்றப்பட்ட, ஆதாரத்தின் ஒரு பகுதியாக இருக்கும் காணாமல் போன பணம் தொடர்பான வழக்கில் அதிகாரிகள் சம்பந்தப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

2018-ல், மலேசிய வெளி புலனாய்வு அமைப்பின் (MEIO) முன்னாள் தலைமை இயக்குநர் ஹசானா அப்துல் ஹமீத்திடம் விசாரணை நடத்தியபோது, எம்ஏசிசி அப்பணத்தைக் கைப்பற்றியது.

சந்தேக நபர் பின்னர் போதைப்பொருள் வைத்திருந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு, சிறுநீர் சோதனையில் நேர்மறை முடிவுக்குப் பின்னர் காவல்துறையினரால் விசாரிக்கப்பட்டார்.

துப்பாக்கியுடன் தொடர்புடைய குற்றங்களுக்காகவும் அவர் விசாரிக்கப்பட்டு வருவதாகவும், அவர் கள்ளத் துப்பாக்கியை வைத்திருந்ததை விட அதிக வெடிமருந்துகள் வைத்திருப்பதாகவும் சந்தேகிக்கப்படுகிறது.

அக்டோபர் 12-ம் தேதி, எம்ஏசிசி சமர்ப்பித்த விசாரணை ஆவணங்களின் அடிப்படையில் பணத்தை இழந்த வழக்கில் அதிகாரிகளால் மேலும் விசாரணை தேவைப்படும் பிற குற்றங்களைச் சட்டத்துறை தலைவரின் அலுவலகம் கண்டறிந்ததாகக் கூறப்படுகிறது.